

கம்பீரமான கற்கோட்டை, கணத்த தூண்கள், வியக்கும் கோபுரம், விசாலமான அரசவை என சினிமா மூலம் நாம் அறிந்த அரண்மனைகளுக்கு நேர்ரெதிரானது பத்மநாபபுரம் அரண்மனை. கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோயிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பத்மநாபபுரம் என்னும் சிறுநகரத்தில் வெள்ளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. கி.பி.1601-ம் ஆண்டு இந்த அரண்மனை கட்டப்பட்டது. இது தமிழகத்தின் மூவேந்தர்களில் ஒருவராகக் கருதப்படும் சேர மன்னர்களின் குலத்தில் வந்ததாகச் சொல்லப்படும் திருவிதாங்கூர் அரசப் பரம்பரையினரின் அரண்மனை. 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழர்கள் வீழ்ச்சிக்குப் பிறகுதான் திருவிதாங்கூர் அரசவம்சம் உருவாகிறது. இவர்கள் அதுவரை திருப்பாம்பரம் என்னும் பெயரில் கல்குளம் கிராமத்தில் இருந்தனர். தங்களைச் சேரன் செங்குட்டுவனின் வழியினர் எனச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் திருவிதாங்கூர், வேணாட்டை உள்ளடக்கிய பகுதியாக மட்டுமே இருந்தது. அதனால் இவர்களுக்கு வேண்டாட்டு அரசவம்சம் என்ற பெயரும் உண்டு.
இந்த அரசவம்சம் பின்னாளில் திருவிதாக்கூரை மையமாகக்கொண்டு தங்கள் ராஜ்ஜியத்தை நடத்தி திருவிதாக்கூர் அரச வம்சம் எனப் பெயர் பெற்றது.
ரவிவர்ம குலசேகர பெருமாள் என்ற மன்னனால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் காணும் இந்த அரண்மனைக் கட்டிடம் முழுவதும் அவரால் கட்டப்படவில்லை. அரண்மனையின் முகப்பில் இருக்கும் தாய்க்கொட்டாரம் என அழைக்கப்படும் பகுதி மட்டுமே அவரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலகட்டத்தில்தான் அரண்மனையை விரிவுபடுத்தப்பட்டது. ராஜா ராம வர்மா இறப்புக்குப் பிறகு அவருடைய மருமகனான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா தன் 24ஆம் வயதில் கி.பி. 1729ஆம் ஆண்டு மன்னனாகப் பொறுப்பேற்றார். இவர் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை ஏற்படுத்தி அதைக் கொச்சி வரை விரிவுபடுத்தினார். அப்பகுதியின் வலிமை மிக்க அரசாக திருவிதாங்கூர் விளங்கியதும் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா காலத்தில்தான்.
தாய்க் கொட்டாரம், மந்திர சாலை, நாடக சாலை, உப்பரிகை மாளிகை, தெற்குக் கொட்டாரம் ஆகிய முக்கியப் பகுதிகளைக் கொண்டது இந்த அரண்மனை. கட்டப்பட்ட ஆரம்பத்தில் கூரையால் வேயப்பட்டதாக தாய்க்கொட்டாரம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மார்த்தாண்ட வர்மா காலத்தில்தான் ஓடு வேயப்பட்டிருக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் எளிமையின் கம்பீரம் வீசும் மாளிகையாக இந்த அரண்மனை இருக்கிறது. தாய்க்கொட்டாரத்தைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக பல கட்டிடத் தொகுதிகளை இந்த அரண்மனை கொண்டிருக்கிறது. கேரளக் கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை காலம்காலமாகப் புதுப்பிக்கப்பட்டு வந்தாகச் சொல்லப்படுகிறது.
அரண்மனையின் நுழைவுக் கட்டிடம் கேரளப் பாரம்பரியத்தின்படி பூமுகம் என அழைக்கப்படும். அரண்மனையின் பூமுக வாசல் மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. இந்தக் கதவில் 90 வகைத் தாமரை செதுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் கேரள பாணியிலான இந்தக் கட்டிடத்தில் சீன பாணியிலான சிம்மாசனம் உள்ளது. இது சீனாவின் தருவிக்கப்பட்டதாக இருக்கலாம். அல்லது அன்பளிப்பாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. பூ முகத்தில் கேரளப் பாரம்பரியத் தொங்கும் விளக்கு உள்ளது.
பூ முகத்தில் மேலே மந்திர சாலை அமைந்துள்ளது. இதுதான் திருவிதாங்கூர் அரச வம்சத்தின் அரசவையாக இருந்துவந்துள்ளது. சினிமாவில் பிரம்மாண்டமாக பார்த்துப் பழகிய அரசவைக்கு நேரெதிரான தோற்றம் கொண்டது. எளிய மரத்தாலான இருக்கைகள். மிகச் சிறிய அறைதான். இந்த மந்திர சாலை முழுக்க மரத்தாலானவை. சூரிய ஒளி உள்ளே பிரதிபலிப்பது போன்று நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து மணி மாளிகை உள்ளது. 200 வருஷங்களுக்கு முன்பு இந்த மணிக்கூண்டு அமைக்கப்படிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
மிகப் பெரிய அன்னதானக் கூடம் இந்த அரண்மனையின் கொடையைப் பறைசாற்றுவதாக இருக்கிறது. கிட்டதட்ட இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் உணவருந்தக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது இந்த உணவுக்கூடம். தினமும் இங்கு வறியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த அன்னதானக் கூடத்தில் சீனச்சாடிகள் வைக்கப்பட்டுள்ளது. இவை உணவுப் பொருள்கள் வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடிய சாடிகளாக இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாகத் தாய்க்கொட்டாரம் உள்ளது. இதுதான் இந்த அரண்மனையின் மிகப் பழமையான கட்டிடம். இது கேரளப் பாரம்பரிய முறையில் நாலுகெட்டு வீடாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் மேலே இரு படுக்கையறைகள் உள்ளன. இதையடுத்து ஹோமபுரம் உள்ளது. சடங்குகள் யாகங்கள் செய்யப்படும் பகுதியாக இது இருந்துள்ளது. உள்ளே ஒரு சரஸ்வதி கோயிலும் இருக்கிறது.
மார்த்தாண்டவர்மாவால் கட்டப்பட்ட உப்பரிகை மாளிகை இந்த அரண்மனையின் சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்று. மூன்று அடுக்கு மாளிகையான இதில் முதல் மாளிகையில் மருத்துவ குணம் கொண்ட கட்டிலொன்று உள்ளது. இரண்டாவது தளம் மார்த்தாண்ட வர்மா ஓய்வெடுக்கும் அறையாக இருந்திருக்கிறது. மூன்றாவது தளத்தில் இந்து, வேதப் புராணங்களின் சம்பவங்கள் ஓவியங்களாக உள்ளன. அடுத்தாக அந்தப் புறம் உள்ளது. அந்தப் புறத்தைத் தாண்டியது உள்ள நீள மண்டபத்தின் இருமருங்கிலும் மார்த்தாண்ட வர்மா குறித்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.
விருந்தினர்களுக்கென்று இந்திரவிலாசம் என்ற மாளிகையும் இந்த அரண்மனையின் உள்ளே கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டிட அமைப்பில் மட்டும் மேற்கத்திய சாயல் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
நவராத்திரி மண்டபமும் கேரளக் கட்டிடக் கலையில் இருந்து மாறுபட்டு விஜயநகரக் கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இதன் தளம் தேங்காய்கூடு, முட்டையின் வெள்ளைக் கரு, கற்கள் கொண்டு அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு நவராத்திரி காலத்தில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசர்கள் வெளியே உள்ள ஆசனத்தில் அமர்ந்து ரசிப்பார்கள். அரசகுலப் பெண்கள் ரசிப்பதற்கெனப் பிரத்யேக அறைகள் தெற்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறையின் உள்ளே இருந்து மரத் துளைகள் மூலம் அவர்கள் நடனத்தை ரசிக்க முடியும். ஆனால் மண்டபத்தில் உள்ளவர்களால் அவர்களைக் காண முடியாது. உள்ளே ஒரு குளமும் உள்ளது.
பசுமைக் கட்டிடங்கள் குறித்து இன்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் மிக அதிகமாக முன்னெடுக்கப்படுகிறது. பல நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த அரண்மனை பசுமைக் கட்டிடத்தின் முன்னுதாரணமாக இருக்கிறது. அரண்மனையின் எல்லாப் பகுதிகளும் இயற்கையை ஒளியைப் பயன்படுத்தும் வகையில் முன் யோசனையில் கட்டப்பட்டுள்ளன. சாருபடி எனச் சொல்லப்படும் பாணியில் மரச் சட்டகங்கள் வழியே வெளிச்சமும் காற்றும் உள்ளே நுழையும்படி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கட்டுமானப் பொருள்களும் அலங்காரப் பொருள்களும் கடல் கடந்து தருவிக்கப்படவில்லை. மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள், முட்டைகள், தேங்காய் ஓடுகள் ஆகியவைதான் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கைக்கு நெருக்கமான இந்த அரண்மனை மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் எளிமையின் கம்பீரத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.