துள்ளுவதோ இளமை: சிவப்பு மஞ்சள் பச்சை!

துள்ளுவதோ இளமை: சிவப்பு மஞ்சள் பச்சை!

Published on

கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும்போதே ஒரு பைக் வாங்கிவிட வேண்டும். இதுதான் இன்றைய இளைஞர்களின் கனவு.

இளைஞர்களைப் பொறுத்தவரை பைக் ஒரு வாகனம் அல்ல; அது உற்சாகத்தின் வெளிப்பாடு. இளமையின் ஆர்ப்பாட்டக் குறியீடு. சாலைகளில் பைக் ஓட்டும்போது கிடைக்கும் மன உத்வேகமும் ஆனந்தமும் வேறு எதிலும் இளைஞர்களுக்குக் கிடைப்பதில்லை.

அதிவேக சாகசங்கள்

ஆனால், பைக் மீதான மோகம் நாளுக்கு நாள் இளைஞர்கள் மத்தியில் அதிகரிப்பதைப் போலவே, அதில் அவர்கள் காட்டும் அதீத வேகமும் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக்கை ஓட்டுவதும் ஆபத்தாகிவருகின்றன.

அதிவேகத்தில் பைக்கை ஓட்டுவது, ஐந்தாறு நண்பர்கள் சேர்ந்து நெரிசலான சாலைகளில் பைக் ரேஸ் செல்வது, ‘ நீயா, நானா’ என்று எதிரே வரும் வானங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக பைக்கை ஓட்டுவது, வாகனங்களுக்கு இடையே ‘கட்’ அடித்து ஓட்டுவது, சாரைப் பாம்பு போல வளைத்து வளைத்து பைக்கை ஓட்டிக் காட்டுவது, வேகமாக வந்து ஆபத்தான ‘ஸ்டண்ட்’ அடிப்பது, ‘வீலிங்’ செய்தபடியே பைக்குகளைச் சாலையில் ஓட்டிச்செல்வது என இளைஞர்கள் பைக்கை வைத்து செய்யும் சாகசங்கள் எல்லாமே திகில் ரகங்கள்.

முன்பெல்லாம் வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் ரயிலிலோ பேருந்திலோதான் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். ஆனால், இப்போது அதுவும் மாறிவிட்டது. கல்லூரி விடுமுறை விட்டாலோ பண்டிகை விடுமுறை நாட்களிலோ பைக்கிலேயே நீண்ட தொலவு பயணம் செய்து வீடு திரும்புவதும் இன்று சகஜமான போக்காகிவிட்டது. அதுவும், அதிவேகத் திறன் கொண்ட பைக்குகள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் ஏதேனும் ஒரு சிறு நிகழ்வுக்குச் சென்றுவர வேண்டுமென்றாலும் 300, 400 கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஊருக்கு பைக்கிலேயே சென்று திரும்பும் அளவுக்கு பைக் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் துயரத்தைத் தந்துவிடும் என்பதை நிரூபிக்கும் காணொளிகள் பல உண்டு.

பீதியூட்டும் இளைஞர்கள்

அண்மையில் சாகசம் காட்டியபடி பைக்கை ஓட்டிச் சென்ற ஒரு ‘புள்ளிங்கோ’ பேலன்ஸ் செய்ய முடியாமல், சாலையைக் கடக்கும் இரு இளம் பெண்கள் மத்தியில் விழுந்து எழுந்த காணொளி இணையத்தில் வைரல் ஆனது. இன்னும் இதுபோல எத்தனையோ காணொளிகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதுவும் சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் நெரிசலான சாலைகளில் ‘கட்’ அடித்து ஓவர் டேக் செய்து இளைஞர்கள் செய்யும் விதிமுறை மீறல்கள் கணக்கில் அடங்காதவை. தங்கள் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் ஓட்டும் இவர்கள், சாலையில் பிற வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஓட்டி பீதியூட்டுகிறார்கள். அடுத்தவர்களின் உயிரோடு விளையாடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற எண்ணம் துளியளவுகூட இதுபோன்ற இளைஞர்களுக்கு இல்லை என்பதுதான் வேதனை.

ஹைஸ்பீடு இன்ஜின் வண்டியை 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச்செல்வது வண்டிக்கு அவமானம் என்கிற எண்ணத்தில் ஓட்டும் இளைஞர்களும் இன்று அதிகரித்துவிட்டார்கள்.

சிக்னல்களில் ஓரிரு நிமிடங்கள் நின்று செல்லக்கூட இவர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை. அதுவும் தொலைதூரத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், சீறிப் பாய்ந்து சென்றால்தான் கெத்து என நினைத்துக்கொண்டு பைக்கை ஓட்டுகிறார்கள். அதிலும் இவர்கள் பயன்படுத்தும் ஹாரன்கள் எல்லாம் பேய்ப் படம் பார்க்கும் திகிலை ஏற்படுத்துபவை.

பெற்றோருக்குப் பங்கு

இந்த விஷயத்தில் பெற்றோர் மீதும் தவறு இருக்கிறது. சொடக்குப் போடும் நிமிடத்தில் எல்லாம் நடக்க வேண்டும் என்கிற மனோபாவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு இதுபோன்ற அதிவேக பைக் தேவையா என்று பெற்றோர் நினைப்பதேயில்லை. அதுவும், படிக்கிற வயதில் இது தேவையா என்கிற கேள்விகூட அந்தப் பெற்றோருக்கு எழுவதில்லை.

குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைக் ஓட்ட அனுமதி கிடையாது. ஆனாலும், சில பெற்றோர் தங்கள் மகன்கள் 18 வயதைக் கடப்பதற்கு முன்பே பைக்கை வாங்கிக் கொடுக்கும் போக்கும் உள்ளது. ஆக, இந்த விஷயத்தில் பெற்றோரையும் பொறுப்பாளிகளாக ஆக்க வேண்டும்.

சில இளைஞர்கள் பைக்கை இயக்கினாலே ராக்கெட்டில் பறப்பதுபோல் நினைத்துக்கொள்கிறார்கள். சாலையில் மற்றவர்கள் மிரட்சி அடையும் வகையிலும் அதிவேகத்திலும் சென்றால்தான் வீரம் என்றும் நினைக்கிறார்கள். இதற்கு, ‘மற்றவர்கள் தன்னை ஹீரோவாக நினைக்க வேண்டும்’ என்கிற எண்ணமும் காரணமாக இருக்கலாம். பயணத்தின் நோக்கமே ‘வேகம்’ என்று தவறாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த வாகன சாகசம் எப்போதுமே வெற்றி பெறாது என்பதை இவர்கள் உணர்வதில்லை. பொறுமை என்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல; வாகனங்களை ஓட்டுவதற்கும் அவசியம். இதை அழுத்திச் சொல்லிப் புரியவைக்க வேண்டிய கடமை இதில் தொடர்புடைய எல்லோருக்குமே உள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in