உயரம் தாண்டிய தங்கத் தாரகை!

உயரம் தாண்டிய தங்கத் தாரகை!
Updated on
2 min read

சென்னையில் தொடங்கிய மாநிலங்களுக்கு இடையேயான தேசியத் தடகளப் போட்டியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த பரணிகா (25), போல் வால்ட் எனப்படும் கம்பு ஊன்றித் தாண்டும் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார்.

4.05 மீட்டர் உயரம் தாண்டி சாதனை படைத்துள்ளார். இவர் 2021இல் பஞ்சாபின் பட்டியாலாவில் நடைபெற்ற 61வது தேசியத் தடகளப் போட்டியிலும் போல் வால்டில் தங்கம் வென்றவர். அந்தப் போட்டியில் 3.9 மீட்டர் உயரம் தாண்டியிருந்தார். பரணிகா, உலக அளவில் போல் வால்ட் வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலில் 248வது இடத்தில் இருக்கிறார்.

2018இல் நடைபெற்ற போட்டியில் இவர் காயம் அடைந்தார். இடது மூட்டு ஜவ்வுக் காயத்தால் அவதிப்பட்டார். அதற்கு முன்பு இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று 3.8 மீட்டர் தாண்டி சாதனை படைத்திருந்தார்.

போல் வால்ட் விளையாட்டில் இடது கால்தான் முக்கியம். ஆனால், அதில்தான் பரணிகாவுக்குக் காயம் ஏற்பட்டது. இடது காலை ஊன்றித்தான் தாவுவார்கள். சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சியின் மூலம் அவரது காலைத் திடப்படுத்த மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.

கரானோ ஊரடங்கால் பரணிகாவால் உடனடியாகப் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியால் மெல்லக் காலைத் திடப்படுத்திப் பயிற்சியைத் தொடங்கி விளையாட ஆரம்பித்தார்.

கடந்த மார்ச் மாதத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த இந்திய ஓபன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பரணிகா, இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அந்தப் போட்டியில் 3.8 மீட்டர் உயரம் தாண்டினார். இதேபோல கொல்கத்தாவில் நடைபெற்ற ரயில்வே சாம்பியன்ஷிப் போட்டியிலும் குறைவான உயரம் தாண்டி இரண்டாம் இடம் பிடித்தார்.

மலப்புரத்தில் நடந்த தேசியக் கூட்டமைப்புக் கோப்பைக்கான போட்டியிலும் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் போட்டியிலும் பரணிகா இரண்டாம் இடமே பிடித்தார். ஆனால், உயரம் கூடுதலாகத் தாண்டியிருந்தார். கடந்த மாதம் புவனேஸ்வரில் நடைபெற்ற இந்திய கிரான் பிரிக்ஸ் போட்டியில் 4.05 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.

இதைத் தொடர்ந்து தற்போது 61வது தேசியத் தடகளப் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளார். ஆனால், “இதிலும் முழு திருப்தி இல்லை” எனச் சொல்லியிருக்கிறார் பரணிகா. முதல் இடத்தைப் பெற்றாலும் 4.05 மீட்டரைத் தாண்டி 4.25 மீட்டர் உயரம் என்கிற இலக்கை அடைவது அவரது லட்சியம். விரைவில் அதையும் அடைந்து ஜொலிப்பார் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in