இளமை களம்: இசையான இருவர்

இளமை களம்: இசையான இருவர்
Updated on
2 min read

அரசியல் அரபிக் குத்து கலாட்டாக்களையும் மீறி இரண்டு வாரங்களாக இன்ஸ்டாவில் வைரலாக வலம்வந்தது ‘தி பாலா பாய்ஸ்’ பாடிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படப் பாடல்.

‘பாலா பாய்ஸ்’ இரட்டையர்களின் குரலில் ஒலித்த ‘ஒரு தெய்வம் தந்த பூவே...’ பாடலைக் கடந்த வாரம் வரை சுமார் 3 லட்சம் பேர் ‘விரும்பி’யிருக்கிறார்கள். ஆளைப் பார்க்கும்போது வெளிநாடு போலத் தோன்றினாலும் பெயர்தான் (ராம் - கணேஷ்) அவர்களை நம்ம ஊரு ஆட்களாக்குகிறது. அவர்களை இணைய வழியில் தொடர்புகொண்டபோது, ‘இந்து தமிழ் திசை’ என்றதும் உற்சாகமாகத் தங்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார்கள்.

உச்சரிப்பில் பெரிதாகக் குறை காண முடியாவிட்டாலும், “எங்கள் தமிழறிவை மேம்படுத்த கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வருகிறோம்” என்று சிரிக்கிறார் இரட்டையர்களில் ஒருவரான ஸ்ரீராம். தற்போது லாஸ் ஏஞ்சலஸில் இசைத் துறையில் பிஸியாக இருக்கும் ராம் - கணேஷ் இருவரும், தங்கள் பாடல் காணொளி வைரலான மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஸ்ரீராம் - கணேஷ் இருவரும் தமிழ்ப் பெற்றோரின் பிள்ளைகள். சிங்கப்பூரில் பிறந்து இசை சூழ வளர்ந்தவர்கள். அப்பா மிருதங்க வித்வான். அதனால் இருவருக்கும் இயல்பாகவே இசை மீது ஆர்வம் துளிர்த்தது. தந்தையின் வழிகாட்டலில் 10 வயதிலேயே சிங்கப்பூர் இசை மேடைகளில் பங்கேற்றனர். கர்னாடக இசை மீதான ஆர்வம் அதிகமாக, அந்தத் துறையில் முழுமூச்சுடன் ஈடுபட நினைத்தனர். தங்களது இசை குருவான அபிஷேக் ரகுராமிடம் கர்னாடக இசையைப் பயின்றனர். “அவர் எங்களுக்குக் கர்னாடக இசையை மட்டும் கற்றுத் தரவில்லை. இசையின் வழியாக எங்களை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும் கற்றுத் தந்தார். நாங்கள் எந்த இசை வடிவத்தைப் பயின்றபோதும் அதைத்தான் கடைபிடித்தோம்” என்று ஒரே குரலில் சொல்கின்றனர் இருவரும்.

மூன்றே வாரத்தில் ஒரு லட்சம்

பள்ளிப் படிப்பை முடித்ததும் உலக அளவில் தலைசிறந்த இசைக் கல்லூரிகளில் ஒன்றான அமெரிக்காவின் ‘பெர்க்லி இசைக் கல்லூரி’யில் சேர்ந்தனர். “பெருமைமிகு நிதிநல்கையோடு அந்தக் கல்லூரியில் சேர்ந்தோம். பெர்க்லி இசைக் கல்லூரியில் சேர்ந்தது எங்கள் வாழ்க்கையின் முக்கியமான திருப்புமுனை.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வெவ்வேறு இசை வடிவங்களை அறிந்துகொள்ளவும், அவற்றை ஒருங்கிணைத்துப் புதுப்புது இசை வடிவங்களை முயன்றுபார்க்கவும் அது வழிவகுத்தது. கிராமி விருது வென்ற உஸ்தாத் ஜாகிர் உசேனுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சி நடத்தியதை மறக்கவே முடியாது” என்கின்றனர் ராம் - கணேஷ்.

வெளிநாட்டில் பிறந்து, வளர்ந்தாலும் இந்தியத் திரையிசை மீது இருவருக்குமே தீராத காதல். அதனால், கர்னாடக இசைப் பாடல்களோடு தங்கள் மனம் கவர்ந்த திரைப் பாடல்களையும் பாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லையாம். “இன்ஸ்டாவில் காணொளியைப் பதிவேற்றி இரண்டு மாதங்கள்தாம் ஆகின்றன.

மூன்றே வாரங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் எங்களை ஃபாலோ செய்தது எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவிலிருந்து ஏராளமான ரசிகர்கள். குறிப்பாக இயக்குநர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸ் எங்களை நெகிழவைத்துவிட்டது” என்கிறார் ராம். நடிகர் மாதவன் இவர்களுடைய ஓரிரு காணொளிகளைப் பகிர்ந்தது, இவர்களை இந்திய ரசிகர்களிடையே பரவலாகக் கொண்டுசேர்ததது.

ரசிகர் விருப்பம்

இந்த ‘பாலா பாய்ஸ்’க்கு இப்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். தமிழே தெரியாதவர்கள்கூட இவர்களது பாடலைக் கேட்டு உருகுகிறார்கள். ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் விருப்பக் குறியிட்டுள்ளனர்.

தங்களுக்குப் பிடித்த பாடலுக்கு இடையே நேயர் விருப்பத்துக்கும் இடம்கொடுக்கிறார்கள். ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க இவர்கள் பாடிய, ‘என்ன சொல்லப் போகிறாய்’ (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம்) பாடலை இரண்டு லட்சத்துக்கு அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ‘அம்மாவின் எல்லையற்ற அன்பை எதனோடும் ஒப்பிட முடியாது. எங்களை ஊக்கப்படுத்தி உறுதுணையாக இருப்பதோடு, எங்கள் வாழ்க்கையில் அமைதியைத் தவழச் செய்பவர் அம்மாதான்’ என்கிற குறிப்புடன் அன்னையர் தினத்தை முன்னிட்டு ‘உயிரும் நீயே...’ பாடலைப் பதிவிட்டுள்ளனர்.

ரஹ்மான் ரசிகர்கள்

இந்தியாவில்தான் ஏராளமான இசைத் திறமை குவிந்திருப்பதாகக் குறிப்பிடும் ‘பாலா பாய்ஸ்’, இந்தியாவுக்குக் கூடிய விரைவில் வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். “இந்தியாவில் இசை ரசிகர்களுக்காக நேரடி நிகழ்ச்சி ஒன்றை நடத்த விரும்புகிறோம். இந்தியாவின் திறமையான இசைக் கலைஞர்களோடு இணைந்து இசைக்கக் காத்திருக்கிறோம்” என்கிறார் ராம்.

இவர்களுக்கு நிறைய இந்தியத் திரையிசைப் பாடல்கள் பிடிக்கும் என்றாலும் தாங்கள் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். ஸ்ரீராம் - கணேஷ் இருவரும் பாடலுக்கேற்ற ‘பாவ’த்துடன் பாடுவதைப் பார்ப்பது ரசனையாக இருக்கிறது என்றால், இவர்களது பாடலுக்கு வரும் எதிர்வினைகளைப் படிப்பது அலாதியாக இருக்கிறது.

‘கன்னத்தில் முத்தமிட்டால்..’ பாடலுக்கு கமென்ட் செய்திருக்கும் ஒருவர், ‘இந்தப் பாடலைக் கேட்கும்போதே இதற்கான நடன அசைவுகளை முடிவுசெய்துவிட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், “ஏன் எப்போதும் தமிழ்ப் பாடல்களையே தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்க, ‘பாலா பாய்ஸ்’ என்ன சொன்னார்கள் தெரியுமா? “ஏன்னா நாங்க தமிழர்கள்!”. அப்படிப்போடு!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in