

நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ள பெரும்பாலான பெண்களுக்குப் பிடிக்கும். முன்பெல்லாம் சிவப்பு, மெரூன் போன்ற சில வண்ணங்களில்தான் நெயில் பாலிஷ் வரும். இப்போதெல்லாம் அப்படியல்ல. பளிச்சென கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் நெயில் பாலிஷ் இட்டுக்கொள்வதைப் பெண்கள் விரும்புகிறார்கள். அணியும் உடைக்கு ஏற்பவும் விதவிதமான அடர் வண்ணங்களிலும் அட்டகாசமான நெயில் பாலிஷ்கள் ஃபேன்ஸி ஸ்டோர்களின் அலமாரிகளை அலங்கரிக்கின்றன. அவற்றை நகங்களில் பூசிக்கொண்டு நங்கைகள் நடமாடுகிறார்கள்.
புது டிரெண்ட்
20 விரல்களுக்கும் ஒரு வண்ணம் என்பது அந்தக் காலம். ஒரு விரலுக்கு ஒரு வண்ணம் என்பதுதான் இப்போதைய ஃபேஷன். அடிக்க வரும் அடர் வண்ணம் என யாருமே ஒதுங்கிப்போவதில்லை. அடர் சிவப்பு, நீலம், பச்சை, பிங்க் எனப் பல வண்ணங்களை அப்படியே அள்ளிப் பூசிக்கொள்கிறார்கள். ரூபி ரெட், ஹாட் பிங்க், பவளம் போன்ற நகப்பூச்சுகள் நகங்களை வசீகரமானவையாக மாற்றும் என்கிறார்கள் இளம் பெண்கள்.
பல வண்ணப் பூச்சுகளை பூசிக்கொள்ள விரும்பும் இந்தக் காலத்து இளம் பெண்கள், ஜிகுஜிகுவென மின்னும் மினுமினுப்புப் பூச்சுக்கு மட்டும் ‘நோ’ சொல்லிவிடுகிறார்கள். நகங்களில் வெறும் பாலிஷை மட்டும் போடுவதைவிட அதை அழகாக அலங்கரிப்பதும் இப்போது பரவலான பழக்கமாக மாறிவிட்டது. ரம்மியமான பூக்கள் கொண்ட டிஸைனை நகங்களில் வரைந்துகொள்ளும்போது விரல்கள் எடுப்பான தோற்றத்தைப் பெறும் என்கிறார்கள் அழகுக் கலை நிபுணர்கள்.
கடையில் நீளமான நகங்கள்
நீளமான நகங்களை விரும்புவோர் அதைப் படாதபாடுபட்டு வளர்க்க வேண்டிய அவசியம்கூட இல்லை. நகங்களுக்கான எக்ஸ்டென்ஷன்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. அதை வாங்கி நகங்களில் பொருத்திக்கொள்ளலாம். இவற்றை அழகுபடுத்திக் கொள்வதற்கு, அக்லிரிக் பவுடர்களும் பேஸ்ட்களும் சந்தைகளில் கிடைக்கின்றன. நீளமான நகங்களை இவற்றால் அழகுபடுத்திக்கொள்ளும்போது, அவை உண்மையான நகங்களைப் போலவே தோற்றம் தந்து, பிறரின் கவனத்தை உங்கள் நகத்தின் மீதே குவிக்கும்.
காதில் போடுவது போல சின்ன சின்ன ஸ்டட்களை விரல் நகங்களிலேயே அணிந்துகொள்வதும் ஃபேஷன்களில் ஒன்றாகிவிட்டது. நகங்களில் சிறிய துளையிட்டு ஸ்டார் போன்ற வடிவ ஸ்டட்களையும் முத்து போன்றவற்றையும் அணிந்துகொள்கிறார்கள் நாகரிக மங்கைகள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதிலேயே செயினைக்கூட அணியலாம். நகங்களைத் தாண்டி அவை கழுத்தில் தொங்கிக்கொண்டிருப்பது உங்கள் மீதான பிரத்தியேகக் கவனத்தைப் பெற்றுத் தரும்.
3டி நகங்கள்
இதேபோல 3-டியிலும் நகத்தை அழகுபடுத்தலாம். நகங்களின் மீது சின்ன சின்ன ஸ்டோன்களை விதவிதமான வடிவங்களில் பொருத்திக்கொள்வதும்கூடப் பழக்கமாகியுள்ளது. இவை எல்லாம் சேர்ந்து உங்கள் நகங்களைத் தனித்து அழகாகக் காட்டும். அதே நேரம் அது உங்களுக்கு அதிக தொந்தரவு தராத வகையில் பார்த்துக்கொள்ளவும் வேண்டும். இந்தக் காலத்தில் நகங்களை அழகுப்படுத்திக்கொள்வதும் ஃபேஷன்களில் ஒன்றாகிவிட்ட நிலையில், பிறரின் பார்வையைக் குவிக்க அதுவும் உங்களுக்கு உதவும்.