

எட்டு ஆண்டு காலம்! உலகின் அழுக்குகளாக ஆக்கப்பட்ட நகரங்கள், நகரங்களின் அழுக்குகளாக ஆக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் ஆகிய இடங்களுக்குப் பயணித்து அந்தப் பகுதிகளின் மக்களுடைய வாழ்க்கையை, அந்த இடங்களின் கோலங்களை ஒளிப்படம் எடுத்திருக்கிறார் பிரபல ஒளிப்பட-இதழாளர் ஆடம் ஹின்டன். ரியோ டி ஜெனிரோ, ஜகார்த்தா, மணிலா, கேப் டவுன், மும்பையின் தாராவி என்று பல இடங்களைத் தனது ஒளிப்படங்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.
நவீன வாழ்க்கையின், நவீன நகரங்களின் மறைக்கப்பட்ட இன்னொரு முகத்தை நம்மால் இந்த ஒளிப்படங்கள் வழியாகக் காண முடிகிறது.
தனது பயணத்தைப் பற்றி அவரே சொல்கிறார்: “2004-ல் நான் இந்தப் பணியைத் தொடங்கியபோது, உலகின் பெரும்பாலான மக்கள்தொகை கிராமப் புறங்களில் வசித்தது. தற்போது பெரும்பாலான மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள்.
நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை 2050-க்குள் 70 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் இதர வாய்ப்புகளுக்காகவும், தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் கோடிக்கணக்கான மக்கள் கிராமப்புறங்களிலிருந்து புலம்பெயர்கிறார்கள்.
உலகின் வளர்ந்துவரும் நகரங்களைச் சூழ்ந்துள்ள சேரிகளில்தான் இந்த மக்கள் குடிபுக வேண்டிவருகிறது.
பெரும்பாலும் அந்த நகரங்களின் வசதி படைத்த பகுதிகளால் தூக்கியெறியப்பட்ட பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு, கிடைக்கும் இடத்தில் அவர்கள் தங்கள் குடிசைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
பாலங்களுக்கு அடியில், குப்பை மேடுகளுக்கு அடியில், கரடுமுரடான மேட்டுப் பகுதியில் என்று குடியிருக்க லாயக்கற்ற இடங்களைத்தான் அவர்கள் தங்கள் வசிப்பிடங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்த முத்திரைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல், சகஜமாக ஏற்றுக்கொண்டு அந்த மக்கள் வாழ்கி றார்கள்.
இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழும் மக்களைத் தேடி அவர்கள் தரப்பு உண்மைக் கதைகளை நான் சொல்ல விரும்பினேன்.
முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த நம்மில் பலருக்கும் சாதாரணமாக இருக்கக்கூடிய விஷயங்களைத்தான் அவர்கள் தங்களின் பெரும் நம்பிக்கையாகக் கொண்டு, அவற்றை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுகிறார்கள் என்பதை நான் எல்லோருக்கும் காட்ட விரும்பினேன்.”
ஜகார்த்தாவுக்கு அவர் சென்றபோது அங்குள்ள மேம்பாலங்களைக் கண்டு அதிர்ந்துவிட்டார். அந்த மேம்பாலங்களுக்கு அடியில் சாக்குத் துணி, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு கட்டப்பட்ட ஏராளமான குடிசைகள் இருந்ததை அவர் பார்த்திருக்கிறார். குட்டிக் கிராமமே அங்கே இருந்திருக்கிறது.
கடைகள், மதுக்கடைகள், கையேந்திபவன்கள் என்று மேம்பாலத்துக்கும் கீழே ஒரு வாழ்க்கை நதி குப்பையும் கூளமுமாக ஓடிக்கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்கிறார். குப்பையும் கூளமும்தான், ஆனால் அவையெல்லாம் அவர்கள் போட்டவையல்ல, மேம்பாலத்துக்கு மேலே செல்பவர்கள் போட்டது.
ஆடம் செல்லும் இடங்களிலெல்லாம் வறுமை, துயரம், குப்பைகள், கடுமையாக ஒதுக்கப்பட்ட நிலை ஆகியவற்றை மட்டுமல்ல, இவ்வளவு மோசமான சூழலிலும் வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டு, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு உயிரோட்டத்துடனும் உற்சாகத்துடனும் இருக்கும் மக்களையும் கண்டு வியந்திருக்கிறார்.
குப்பை வீடுகளுக்கிடையேயும் அவர்களுக்கென்ற கலாச்சாரம், விளையாட்டுகள், சுகதுக்கங்கள் என்று எல்லாம் ஆடமின் ஒளிப்படங்களில் பதிவாகியிருக்கின்றன. அவற்றுள் சில இங்கே தரப்படுகின்றன.