யூடியூப் உலா: பொங்கும் கொங்குத் தமிழ் 

யூடியூப் உலா: பொங்கும் கொங்குத் தமிழ் 
Updated on
1 min read


தமிழில் உள்ள பொழுதுபோக்கு யுடியூப் சானல்களில் பிரதானமானது நக்கலைட்ஸ். பொதுவாக பொழுதுப்போக்கு யுடியூப் சானல்கள் என்றால் அது சென்னையை மையமாகக் கொண்டவையாகத்தான் இருக்கும். எருமைசாணி, 1கேஜி பிரியாணி, மைக் செட் என எல்லாம் சென்னையில் இருந்து இயங்குபவைதான். அதில் காட்சிப்படுத்தப்படுவதும் நகரத்து வாழ்க்கையைத்தான். இவற்றிலிருந்து விலகி, கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு இந்த நக்கலைட்ஸ் சானல் செயல்பட்டுவருகிறது.

இதில் கோயம்புத்தூர் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டாரக் கிராமக் காட்சிகளையும் இந்த சானல் பதிவுசெய்துவருகிறது. இதன் சிறப்பே அவர்களின் கொங்குத் தமிழ்தான்.

நக்கலைட்ஸ் 2017-ல் ராஜேஷ்வர், பிரசன்னா பாலச்சந்திரன் ஆகிய இருவரின் முயற்சியால் தொடங்கப்பட்டது. எல்லா சானல்களைப் போல தொடங்கிய புதிதில் இதற்கு பார்வையாளர்கள் பெரிய அளவில் இல்லை. ஆனாலும் நம்பிக்கையை விடாமல் தொடர்ந்து பதிவேற்றம் செய்துகொண்டே இருந்தார்கள். நல்ல வாசிப்பனுபவம் உள்ள பிரசன்னா இதன் பெரும்பாலான உள்ளடக்கத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். தொடக்கத்தில் சமூக விமர்சனம் சார்ந்த பகடிகளையே அவர்கள் பெரும்பாலும் பதிவேற்றி வந்தனர். பிறகு நக்கலைட்ஸின் முக்கியமான நடிகர்களான தனம், அருண் இருவர்களும் நடித்த ‘அம்மா அலப்பறைகள்’ அவர்களுக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. பிறகு வெப் தொடர்களில் இறங்கினர். ‘பேக் டூ ஸ்கூல்’ என்ற வெப் தொடர் அவர்களுக்கு மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. ஸ்ரீஜா, அருண், சசி, நிவேதா, தனம், மனோஜ், கவின் போன்ற சிறந்த நடிகர்கள் குழு நக்கலைட்ஸின் ஆக்கங்களை சுவாரசியமானதாக ஆக்கியது. ஒரு வருடத்துக்கு முன்பு நக்கலைட்ஸில் பதிவேற்றப்பட்ட ‘பேக் டூ ஸ்கூல் வெப்’ சீரியஸில் ‘எக்ஸாம் ஹால்’ பகுதி நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு கோடி பார்வைகளைக் கட்ந்துள்ளது. ஒரு தமிழ் வெப் சீரியஸ் ஒரு கோடி பார்வைகளைக் கடப்பது இதுவே முதல் முறை. அதில் அருண் பரீட்சைக் காகிதத்தில் வெறும் கோடுகள் மாத்திரம் போடும்போ‘கோடு போட்ட ரோடு போடு’ என்னும் பாட்டு பின்னணியில் இசைப்பதும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நகைச்சுவை.

இந்தக் கொரானாக் காலத்தில் நக்கலைட்ஸின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்தது. அவர்களுடைய சமீபத்திய வீடியோக்கள் எல்லாம் பதிவேற்றப்பட்ட சில மணிநேரங்களில் லட்சம் பார்வைகளைக் கடந்துவருகின்றன. கடைசியாக அவர்கள் பதிவேற்றிய கிளப் ஹவுஸ் அலப்பறைகள் வீடியோ சில நாட்களில் 10 லட்சங்களைக் கடந்தது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in