20-வது நினைவு நாள்: ஹன்சி குரோனியே - கேப்டன்களின் ராஜா!

20-வது நினைவு நாள்: ஹன்சி குரோனியே - கேப்டன்களின் ராஜா!
Updated on
3 min read

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹன்சி குரோனியேவின் மரணச் செய்தியைக் கேட்டபோது கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் துடித்துத்தான் போனர்கள். உலகில் அனைத்து அணிகளின் தூக்கத்தையும் கலைத்தவர் கேப்டன் ஹன்சி குரோனியே. அன்று ஹன்சி குரோனியேவின் கேப்டன்சியை எல்லா நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுமே ஆராதித்தார்கள். அந்த அளவுக்கு கேப்டன்சியில் ஜொலித்தவர் குரோனியே. குறுகிய காலத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியைக் கட்டமைத்து, தலைசிறந்த அணியாக மாற்றிக் காட்டிய ஹன்சி குரோனியேவின் நினைவு நாள் இன்று.

1960களில் நிறவெறிக் கொள்கையால் உலக நாடுகளிலிருந்து தனித்து விடப்பட்டது தென் ஆப்பிரிக்கா. இதனால் சுமார் 20 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணியால் கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது. தென் ஆப்பிரிக்கா நிறவெறிக் கொள்கையைக் கைவிட்ட பிறகுதான், அது கிரிக்கெட் காற்றையும் சுவாசிக்க முடிந்தது. பிறகு 1991ஆம் ஆண்டில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியால் அடியெடுத்து வைக்க முடிந்தது. கிளைவ் ரைஸ், கெப்ளர் வெசல்ஸ் ஆகிய இரு கேப்டன்களின் தலைமையில் சுமாரான வெற்றிகளைப் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு, 1994இல் கேப்டன் ஆனார் ஹன்சி குரோனியே. இவர் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது 24 வயதுதான்.

ஹன்சி குரோனியே கேப்டனான பிறகு தென் ஆப்பிரிக்காவின் முகமே மாறிபோனது. திறமையான இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார். கேரி கிறிஸ்டன், கிறிஸ் காலிஸ், டேரியல் கல்லினன், ஷான் பொல்லாக், மார்க் பவுச்சர், லான்ஸ் குளூஸ்னர் எனத் திறமையான வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணிக்குள் அடியெடுத்து வைத்தனர். திறமையான இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ஹன்சி குரோனியே கிரிக்கெட்டில் மாயாஜாலத்தை நிகழ்த்திகாட்டினர். இளம் வீரர்களின் வருகைக்குப் பிறகும் ஹன்சி குரோனியேவின் கேப்டன்சியிலும்தான் தென் ஆப்பிரிக்க அணி பிரம்மாண்ட வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் என இரண்டு வடிவங்களிலும் வெற்றிகள் குவிந்தன. அந்தக் காலகட்டத்தில் பலமான அணிகளாகக் கருதப்பட்ட ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகளை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு தென் ஆப்பிரிக்கா முதன்மை அணியாக உருவெடுத்தது.

ஹன்சி குரோனியே 53டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 27 போட்டிகளில் வெற்றியைக் கொடுத்தார். 11 போட்டிகளில் தோல்வியும் 15 போட்டிகளில் டிராவும் ஹன்சி குரோனியே கேப்டன்சியில் கிடைத்தன. ஒரு நாள் போட்டிகளில் குரோனியேவின் வெற்றி விஸ்வரூபமாக இருந்தது. 134 ஒரு நாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த குரோனியே 99 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். 35 போட்டிகளில் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணிக்குத் தோல்வி கிடைத்தது. ஒரு நாள் கிரிக்கெட்டில் குரோனியேவின் வெற்றி விகிதம் 73.70 சதவீதம். ஒரு நாள் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 100 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்த 20 வீரர்களில் அதிக வெற்றிகளை (76.14 சதவீதம்) பெற்றவர் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங். அவருக்கு அடுத்து அதிக வெற்றிகளைக் குவித்தவர் ஹன்சி குரோனியேதான்.

1996, 1999 என இரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தென் ஆப்பிரிக்க அணி குரோனியே தலைமையில்தான் சந்தித்தது. பெரிய தொடர்களில் லீக் போட்டிகளில் சிறப்பாக வென்று நாக் அவுட் போட்டிகளில் மண்ணைக் கவ்வும் பழக்கம் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி 1996இல் காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. 1999இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை டையில் (ஒரு ரன் எடுக்க முடியாமல் லான்ஸ் குளூஸ்னர் - டொனால்ட் ரன் அவுட் ஆகும் ஆட்டம் ஞாபகம் இருக்கிறதா?) முடித்து, உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை அருகே சென்று இழந்தது தென் ஆப்பிரிக்க அணி.
தென் ஆப்பிரிக்க அணியைத் தொடர்ந்து புகழின் உச்சியில் கொண்டு சென்ற ஹன்சி குரோனியேவின் கிரிக்கெட்.

வாழ்க்கையைப் புத்தாயிரம் புரட்டிப் போட்டது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஆண்டாகப் புத்தாயிரம் இருக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைவதற்காக கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு விளையாடியதாக ஹன்சி குரோனியே மீது குற்றம் சுமத்தப்பட்டது. அந்தப் புகாரை கேப்டனாக இருந்த ஹன்சி குரோனியே ஒப்புக்கொண்டார். ‘எனக்கு நாடும் முக்கியம், பணமும் முக்கியம்’ என்று விசாரணையிலேயே சொன்னார் ஹன்சி குரோனியே. இதனையடுத்து அவர் கிரிக்கெட் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் வாழ்நாள் தடையை விதித்தன. அதோடு ஹன்சி குரோனியேவின் கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 30தான்.

இந்தப் புகாரில் மட்டும் ஹன்சி குரோனியே சிக்காமலிருந்தால் குறைந்தபட்சம் 6 அல்லது 7 ஆண்டுகள் வரை சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்திருப்பார். கிரிக்கெட்டில் இன்னும் பல எட்ட முடியாத சாதனைகளைப் படைத்திருப்பார். இந்தத் தடைக்குப் பிறகு நிதி நிறுவனம் ஒன்றில் மேலாளராக குரோனியே பணி புரிந்தார். 01-06-2002 அன்று நடந்த விமான விபத்தில் ஹன்சி குரோனியே காலமானார். ஹன்சி குரோனியேவின் கிரிக்கெட் பயணம் விரைவாகவே முடிந்ததைப் போல 32 வயதிலேயே வாழ்க்கைப் பயணமும் முடிந்தது. கிரிக்கெட்டில் கேப்டன்களின் வரலாறை ஹன்சி குரோனியேவைத் தவிர்த்துவிட்டுப் பேசவோ எழுதவோ முடியாது!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in