யூடியூப் உலா: காசு, பணம், துட்டு, மணி மணி.!

யூடியூப் உலா: காசு, பணம், துட்டு, மணி மணி.!
Updated on
2 min read

கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்தே பொருளாதாரரீதியாகப் பாதிக்கப்பட்ட பலரும், வெவ்வேறு துறையில் கவனம் செலுத்தி, பணம் ஈட்ட முயன்றுவருகிறார்கள். அதில் ஏராளமானோருடைய கவனம் திரும்பியிருப்பது பங்கு வர்த்தகம் பக்கம்தான். சில்லறை முதலீட்டாளர்களாகப் பலரும் அத்துறையில் குதித்துவருகிறார்கள். இவர்களுக்கு யோசனைகளைத் தெரிவிக்கவே யூடியூபிலும் பங்குச் சந்தை சார்ந்து ஏராளமான அலைவரிசைகள் அணிவகுத்துக்கொண்டிருக்கின்றன. அதில், குறிப்பிடத்தக்க அலைவரிசையாக தமிழில் முன்னணியில் இருக்கிறது ‘மணி பேச்சு’ அலைவரிசை.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாஸ் தொடங்கிய அலைவரிசை இது. கடந்த 2018ஆம் ஆண்டில் அவர் இந்த அலைவரிசையைத் தொடங்கினார். எளிய மக்களுக்குப் பொருளாதாரம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த யூடியூப் அலைவரிசையை உருவாக்கினார். எனவே, தொடக்கம் முதலே நிதித் துறை சார்ந்த காணொளிகளை அதிகமாகப் பதிவிட்டுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் தொடங்கி தவணை முறை கடன் திட்டங்கள், ஆன்லைன் வணிகங்கள், சேமிப்புத் திட்டங்கள், தொழில் தொடங்க ஆலோசனை, தங்க முதலீடுகள், நிறுவனங்களின் கதைகள், ரியல் எஸ்டேட் நிலவரம், கிரிப்டோ கரன்சியின் வர்த்தகம், சர்வதேச நிதிப் பிரச்சினை என ஏராமான காணொளிகளை இந்த அலைவரிசையில் காண முடிகிறது.

அண்மைக் காலமாகப் பங்குச் சந்தை சார்ந்த காணொளிகளை அதிக அளவில் பதிவிட்டுள்ளார். குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்ளைச் சேர்ந்தோர் மட்டுமே பங்குச் சந்தை தொழிலில் ஈட்டுபட்டுவந்த நிலையில், தற்போது தென்னிந்தியாவிலும் அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதால், பங்குச் சந்தை சார்ந்த காணொளிகளை ஆனந்த் சீனிவாஸ் பகிர்வது அதிக பார்வைகளையும் பெற்று வருகிறது. ஒரு பங்கு தொடர்ந்து விலை உயர்ந்தாலோ அல்லது சரிந்தாலோ அதற்கான பின்னணியை அலசலோடு புரிந்துகொள்ளும் வகையில் சொல்வது இந்த அலைவரிசையின் சிறப்பு.

அதுமட்டும் அல்லாமல், பங்குச் சந்தையில் நடக்கும் தகிடுதத்தங்கள், சில்லறை முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக எப்படி முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்வது என்பது போன்ற தகவல்களையும் இந்த அலைவரிசையில் உள்ள காணொளிகளில் காணலாம். மேலும், பங்குச் சந்தை குறித்த சந்தேகங்கள், பங்குச் சந்தையில் புழங்குவோரிடம் நேர்க்காணல்கள் போன்ற காணொளிகளையும் இந்த அலைவரிசை பகிர்கிறது. பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத இந்த அலைவரிசையை தற்போது 7 லட்சம் பேர் பின்தொடர்வதே இதன் சாதனைதான். 1,516 காணொளிகள் உள்ள இந்த அலைவரிசை இதுவரை 7.76 கோடிப் பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in