ஐபிஎல் 2022 - இவர்கள் வருங்காலத் தூண்கள்!

ஐபிஎல் 2022 - இவர்கள் வருங்காலத் தூண்கள்!
Updated on
3 min read

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், பல இளம் திறமைசாலிகளை இந்திய கிரிக்கெட் அணிக்கு அடையாளம் காட்டியதில் ஐபிஎல்லுக்குப் பங்குண்டு. இன்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின், தவான், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ரிஷப் பந்த் உள்படப் பலர் ஐபிஎல் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள்தாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் முழுமையாக இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பல இளம் வீரர்கள் தங்களது முத்திரையைப் பதித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளனர். ஐபிஎல் 2022இல் சிறப்பாகச் செயல்பட்ட இளம் மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் சிலரைப் பற்றித் திரும்பிப் பார்ப்போம்.

ஜம்மு எக்ஸ்பிரஸ்

ஜம்முவைச் சேர்ந்த பழ வியாபாரியின் மகன் உம்ரான் மாலிக். பிரிவினைவாதக் குழுக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான நெடிய போரில் அமைதியிழந்த மண்ணிலிருந்து எளிய பின்னணியில் வந்த உம்ரான் மாலிக், மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் சீராகப் பந்துவீசும் அபார திறமைசாலி. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 157 கி.மீ., வேகத்தில் இவர் வீசிய பந்து, ஐபிஎல்-இன் அதிவேகப் பந்தாக அமைந்தது.

இந்தியாவில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலித்துள்ள போதிலும் மாலிக்கைப் போல் தொடர்ந்து 150 கி.மீ., வேகத்தில் பந்து வீசக்கூடிய திறன் பெற்றவர்கள் இதுவரை யாரும் இல்லை. பாகிஸ்தானின் ஷோயப் அக்தர், ஆஸ்திரேலியாவின் பிரட் லீ என அதிவேகப் பந்துவீச்சாளர்களே உம்ரான் மாலிக்கைப் பாராட்டியுள்ளது ஓர் உதாரணம். 22 வயதாகும் உம்ரான் மாலிக், 14 போட்டிகளில் 22 விக்கெட்களை வீழ்த்தி ஒரு ஐபிஎல் சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியிலும் உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளார்.

கஞ்சத்தனத்தில் நாயகர்கள்

l 20 ஓவர் போட்டிகளில் விக்கெட் எடுப்பதைவிடக் குறைவான ரன்களை விட்டுக்கொடுப்பது மிக முக்கியம். மட்டையாளர்களுக்குச் சாதகமான களச் சூழலில் விக்கெட் எடுப்பதைவிட ரன் விகிதத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான் சவாலானது. அந்த வகையில் புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மோஹ்ஸின் கான் ஜொலித்துள்ளார். மட்டையாளர்கள் அதிரடியாக ரன் குவிக்கும் பவர் பிளே ஓவர்களில் சராசரியாக ஓவருக்கு 5.25 ரன்களையே கொடுத்துள்ளார். சில போட்டிகளில் விக்கெட்களையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

l மற்றொரு இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ‘டெத் ஓவர்ஸ்’ எனப்படும் கடைசி நான்கு ஓவர்களில் மட்டையாளர்களை ரன் குவிக்கத் தடுமாற வைத்து அசத்தினார். இவரும் தென் ஆப்ரிக்கவுடனான டி20 தொடரில் இடம்பிடித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய இவர் 10 விக்கெட்களை மட்டுமே எடுத்திருந்தாலும், டெத் ஓவர்களில் 7.58 என்னும் குறைவான ரன் சராசரியை வைத்திருந்தார். சர்வதேசப் போட்டிகளில் அனுபவம் பெற்ற ஜஸ்ப்ரீத் பும்ராவைவிடக் குறைவான ரன் சராசரியுடன் ‘டெத் ஓவர்’களை வீசியுள்ளார் அர்ஷ்தீப்.

மனம் கவர்ந்த மட்டையாளர்கள்

l 2021இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய ரஜத் பாடிதாரை இந்த முறை அந்த அணி ஏலத்தில் எடுக்கவில்லை. ஆனால், லுவ்னீத் சிசோடியா காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக பாடிதார் களமிறக்கப்பட்டார். 7 போட்டிகளில் 55 ரன் சராசரியுடன் 275 ரன்களைக் குவித்துள்ளார் இவர். பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிராக 54 பந்துகளில் 112 ரன்களைக் குவித்து பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவரால்தான் பெங்களூரு அணி பிளே ஆஃப் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது.

l மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை கடைசி இடத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால், அந்த அணிக்காக முதல் முறையாக ஐபிஎல்லில் களம் கண்ட பதின்பருவ மட்டையாளர் திலக் வர்மா 14 போட்டிகளில் விளையாடி 397 ரன்களைக் குவித்து 36.09 என்னும் சராசரியை வைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 31 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தது வர்மாவின் அதிகபட்ச ஸ்கோர். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஐந்து ஓவர்களில் 33 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்து மும்பை அணி தத்தளித்துக்கொண்டிருந்தது. அப்போது நிதானமாக விளையாடி 32 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மூன்றாம் நிலை மட்டையாளர் ராகுல் திரிபாதி. இவர் விளையாடிய 14 போட்டிகளில் 37.55 சராசரியுடன் 413 ரன்களைக் குவித்தார். மும்பைக்கு எதிரான போட்டியில் 44 பந்துகளில் 77 ரன்களைக் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆறு ஆண்டுகளாக ஐபிஎல்-இல் விளையாடிவரும் திரிபாதி விரைவில் இந்திய அணியில் இடபெறுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பதே இவருடைய திறமைக்குச் சான்று.

l கடந்த சில ஆண்டுகளாகவே கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித்தந்த ராகுல் தெவாட்டியா இந்த முறை குஜராத் டைட்டன்ஸுக்காக விளையாடினார். பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை அடித்து தோல்வியிலிருந்து அணியை வெற்றிக்கு திருப்பினார். ஹைதராபாத்துக்கு எதிராகக் கடைசி கட்டத்தில் 21 பந்துகளில் 40 ரன்கள் குவித்து 199 ரன் என்கிற பெரிய இலக்கை அணி எட்டக் காரணமாக இருந்தார்.

ஐபிஎல் 2022 பல புதிய இளைஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. ஏற்கெனவே அறியப்பட்ட இளம் திறமைசாலிகள் இந்த முறையும் தங்கள் திறமையை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவருமே இந்திய அணிக்காக விரைவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in