

சில பரிசுகள் பார்க்கவே ரசனையாகவும் அழகாகவும் இருக்கும். இணையத்தில் அப்படிப்பட்ட பரிசுகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில:
தம்மாத்துண்டு வயலின்
உள்ளங்கைக்குள் அடக்கிவிடக்கூடிய, பார்ப்பதற்கு நிஜ வயலினைப் போலவே இருக்கும் இந்த மினியேச்சர் வயலினை இசைக்க முடியாது. ஆனால், அலமாரியில் காட்சிப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் நண்பர் இசைப்பிரியர் என்றால் அவருக்கு இதைப் பரிசாகக் கொடுக்கலாம். இதன் விலை ரூ. 926.
கடுப்பேற்றும் பரிசுப்பெட்டி
திருமண வீடுகளில் தவறாமல் நடக்கும் அலப்பறைகளில் இதுவும் ஒன்று. மணமக்களிடம் பிரம்மாண்டமான அட்டைப் பெட்டியைக் கொடுத்து ஒவ்வொன்றாகப் பிரிக்கச் செய்து, பொறுமையைச் சோதிப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கம். அதிலும் நண்பர்களை மொக்கையாக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் அரதப்பழசான பழக்கம். அந்த அட்டைப் பெட்டியை இப்போது ஆன்லைனிலும் விற்றுக் காசாக்குகிறார்கள். காசிருந்தால் உங்கள் நெருங்கிய நண்பர்களின் திருமணத்துக்கு இதை வாங்கிக் கொடுத்து வெறுப்பேற்றி மகிழலாம். சரி, இதன் விலை என்ன? ரொம்ப அதிகமில்லை, ரூ.16,321 மட்டுமே.
காலில் தவழும் மீன்கள்
ஒரே மாதிரியான காலணிகளை அணிந்து போரடித்துவிட்டதா?அப்படியெனில், மீன் வடிவிலான காலணிகளை அணிந்து மற்றவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கலாம். அசல் மீன் போலவே இருக்கும் இந்தக் காலணிகள் பிளாஸ்டிக்கால் ஆனவை. இணையத்தில் அமோகமாகப் பலவித விலைகளில் கிடைக்கின்றன.