

கார்காலம் தெரியும். காஷ் காலம் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். தெரிந்துகொள்ளலாம்.
உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி லேடி காகா தெரியும். ஆனால், லேடி காஷ் பற்றி தெரியாதே என்பவர்களுக்கு இந்த அறிமுகம்.
சொல்லிசைக் கலைஞரான இவர் பாடி வெளியிட்டிருக்கும் எண்ணற்ற பாடல்களுக்குச் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் கலைவாணி நாகராஜாக மிகச் சிறிய வயதிலேயே சொல்லிசை ஆல்பங்களை வெளியிட்டு வந்தவரின் திறமையை அடையாளம் கண்டு அவருக்கு `எந்திரன்' படத்தில் வாய்ப்பளித்தார் ஏ.ஆர். ரஹ்மான். `இரும்பிலே ஒரு இருதயம்' என்னும் சொல்லிசைப் பாடலின் வரிகளை எழுதிப் பாடியபோது அவருக்கு வயது 19!
லேடி காஷ், வில்லுப் பாட்டின் பெருமையை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக சொல்லிசையில் பாடி வெளியிட்டிருக்கும் பாடல், வில்லுப்பாட்டில் ஈடுபட்டிருக்கும் பெண் கலைஞர்களைப் பற்றிய ஓர் ஆவணமாக மதிக்கத்தக்கது. கலைஞர் மு.கருணாநிதியின் `செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடலிலும் தமிழச்சியான காஷின் குரலைக் கேட்கலாம். தற்போது சுயாதீன பாடகர்களின் திறமைக்கு விமா (வாய்ஸ் இண்டர்நேஷனல் மியூசிக் அவார்ட்ஸ்) விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.
அண்மையில், காலத்தின் அருமை, கடந்த கால இருட்டிலிருந்து எப்படி நாம் கடந்து வருவது, நிகழ் காலத்தில் எதிர்படும் சவால்களை சமாளித்து எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குவது குறித்த சொல்லிசைப் பாடலை பாடகி லயாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் காஷ். இது இன்றைய இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் பாடலாக மலர்ந்திருக்கிறது.
https://www.youtube.com/watch?v=lcy5b5YlfRE