யூடியூப் உலா: சோதனையின் சாதனைகள்!

யூடியூப் உலா: சோதனையின் சாதனைகள்!
Updated on
1 min read

யூடியூபில் தனி ராஜாங்கமே நடந்துகொண்டிருக்கிறது. கருத்து சொல்லும் அலைவரிசைகள், காமெடி செய்யும் அலைவரிசைகள், ப்ராங் வீடியோக்களை வெளியிடும் அலைவரிசைகள், சினிமா, விளையாட்டு, அரசியல் எனத் தனித்தனியாக அலைவரிசைகள் பெருகிக்கிடக்கின்றன. இந்த அலைவரிசைகளின் மத்தியில் நகைச்சுவையில் கொடிக்கட்டிப் பறக்கிறது ‘சோதனைகள்’ என்கிற அலைவரிசை.

யூடியூபில் ‘மைக்செட்’ என்கிற அலைவரிசை பிரபலமானது. இந்த யூடியூப் அலைவரிசையை நடத்திவந்த இளைஞர்களில் சிலர் சேர்ந்து தொடங்கிய இன்னொரு அலைவரிசைதான் ‘சோதனைகள்’. புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரால் நடத்தப்படும் இந்த அலைவரிசையின் ‘சோதனை’ காணொளிகள் டிரெண்டிங்கில் இடம்பிடிக்கத் தவறுவதே இல்லை. யூடியூபில் முன்னணியில் உள்ள பல அலைவரிசைகளில் ஏராளமானோர் பணியாற்றுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், ‘சோதனைகள்’ அலைவரிசை ஐந்து இளைஞர்கள், நான்கு இளம் பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிகரமாக இயங்கிவருகிறது.

அட்மிஷன் சோதனைகள், தடுப்பூசி சோதனைகள், லோக்கல் கிரிக்கெட் சோதனைகள், அரசியல் சோதனைகள், லேட் கம்மர் சோதனைகள், சலூன் சோதனைகள், திருமண சோதனைகள், டுட்டோரியல் சோதனைகள், தேர்வு சோதனைகள், கணவர் சோதனைகள், கிரிக்கெட் சோதனைகள் எனச் சோதனைகளின் காணொளிகள் இந்த அலைவரிசையில் அணிவகுக்கின்றன.

இந்த அலைவரிசை வெளியிட்ட எல்லாச் சோதனை காணொளிகளும் பார்வையாளர்களின் வயிறுகளைக் குலுங்கச் செய்திருக்கின்றன. காணொளியில் நடிக்கும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைக் கிச்சுகிச்சு மூட்ட கலாய்த்துத் தள்ளிவிடுகிறார்கள். இவற்றில், சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட தடுப்பூசி சோதனைகள் காணொளி மட்டும் தமிழில் ஒட்டுமொத்தமாக யூடியூப் டிரெண்டிங்கில் இரண்டாமிடத்தைப் பிடித்தது.

டிரெண்டிங் காணொளிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு காணொளியும் இப்படி லட்சக்கணக்கில் பார்வைகளைப் பெறத் தவறுதில்லை. சோதனைகள் காணொளிகளை மட்டுமே இந்த அலைவரிசை வெளியிடுவதில்லை. குறும்படங்கள், பாடல் ஆல்பங்கள் போன்றவற்றையும் இந்த அலைவரிசையில் வெளியிட்டுவருகிறார்கள். இதன்மூலமும் தனியாகக் கவனம் ஈர்த்துவருகிறது இந்த அலைவரிசை. இந்த அலைவரிசையில் வெளியாகும் காணொளிகளுக்கான ஸ்கிரிப்டுகளை இதில் பணியாற்றும் அனைவருமே சேர்ந்து எழுதுகிறார்கள் என்பது இதன் இன்னொரு சிறப்பு.

2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சோதனைகள் அலைவரிசையைத் தற்போது 22.3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இதுவரை இந்த அலைவரிசை 19.6 கோடிப் பார்வைகளை கடந்திருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in