இளமை களம்: ஓர் இளைஞரின் கனவை நனவாக்கிய ஜீப்!

இளமை களம்: ஓர் இளைஞரின் கனவை நனவாக்கிய ஜீப்!
Updated on
2 min read

பொழுதைப் போக்க ஸ்மார்ட் போன் முன்னால் தலையைக் கவிழ்ந்தபடி இளம் தலைமுறை கஷ்டப்பட்டுவருகிறது. ஆனால், கெளதம் என்கிற இளைஞரோ கழிப்பதற்குப் பொழுதின்றி ஒரு தொழிற்கூடத்திலேயே கிடந்துள்ளார். ஒரு மணி நேரமோ ஒரு நாளோ அல்ல. 7 மாதம் 13 நாட்கள் தவம். தலைசாயுதல் இன்றி ‘நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்’ என்று பாரதியார் சொன்னதுபோல் ஒரு வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளார் அவர்.

யார் இந்த கெளதம்?

சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சொந்த ஊராகக் கொண்டவர் இவர். பள்ளிப் படிப்பை அருகிலுள்ள மடப்புரம் என்னும் ஊரில் முடித்துள்ளார். இவருடைய தந்தை அருணகிரி, பொறியியல் துறையில் ஆர்வம் உள்ளவர். வெல்டிங், மின்னியல் துறைலிருந்து பல்தொழில் விற்பன்னர். இதனால், தொடக்கத்திலிருந்தே அப்பாவிடம் இருந்து கெளதமுக்கும் அந்த ஆர்வம் கடத்தப்பட்டுள்ளது. தன் மகனைப் பொறியாளர் ஆக்க வேண்டும் எனத் தந்தையும் முடிவு செய்துள்ளார். தன் விருப்பத்தைப் பூர்த்திசெய்ய மதுரை அழகர்கோயிலுக்கு அருகில் சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் சேர்த்துள்ளார். 2019இல் பல கனவுகளுடன் பட்டம் பெற்றுத் திரும்பினார் கெளதம்.

ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி வேலைவாய்ப்பு எளிதாகக் கிடைக்கவில்லை. அதனால், ஊரில் கிடைக்கிற தினக் கூலி வேலைகளை எல்லாம் செய்துள்ளார். அந்த நேரத்தில் மதுரையில் உள்ள ஓர் இருசக்கர வாகனப் பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. படிக்கும்போதே அவருக்கு ஆட்டோமொபைலில் ஆர்வம் இருந்ததால் ‘மெக்கானிக்’ வேலை என்று பாராமல் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்வம் அவருக்கு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்துத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளார். அப்போது தானும் இந்தத் துறையில் பெரிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று கௌதம் முடிவெடுத்துள்ளார். அதன் பிறகு ஊருக்கு வந்தவர் அங்கு கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்துகொண்டே தன் கனவை நனவாக்க முயன்றுள்ளார்.

பேட்டரி ஜீப்

கையில் கிடைத்தவற்றையெல்லாம் வைத்து ஒரு வாகனம் தயாரிக்கத் தொடங்கிவிட்டார். முறையான கருவிகள் ஏதுமின்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று அதற்கான முதல் அடியை எடுத்து வைத்தார். இதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தையே தொழிற்கூடமாக்கினார். கருவிகளை வாடகைக்கும் தயாரிப்புப் பொருட்களை மலிவான விலைக்கும் வாங்கி பேட்டரியில் இயங்கும் ஜீப்பை வடிவமைத்துள்ளார். பணத் தட்டுப்பாடு, முறையான கருவிகள் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு மார்ச்சில்தான் இந்த வேலையை கெளதம் முடித்துள்ளார். இந்த ஜீப்புக்காக மொத்தம் ரூ 2.80 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். எல்லாம் இவர் உழைத்து சேர்த்த பணம்தான்.

பொதுவாக வாகனங்களில் சக்கரங்களை இணைக்கப் பயன்படுத்தப்படும் குடம் போன்ற அமைப்பைத் தவிர்த்து மோட்டரிலிருந்து நேரடியாகச் சக்கரங்களில் இணைத்துள்ளார். மேலும், நான்கு சக்கரங்களும் இயங்கும்படி இதை உருவாக்கியுள்ளார். அதாவது அதிகமான எடை உள்ளபோதும் மேடான பகுதிகளில் ஏறும்போதும் நான்கு சக்கரங்களையும் பயன்படுத்த முடியும். சாதாரண நேரங்களில் இரு சக்கரங்களை மட்டும் இயக்குவது போல வடிவமைத்துள்ளார். இதனால், வாகனத்தின் ஓடும் திறன் கூடும் எனச் சொல்கிறார் அவர்.

மேலும் இதில் காரீய அமில (Lead Acid) பேட்டரியைத்தான் பயன்படுத்தியிருக்கிறார் கெளதம். இதையே அவருக்குத் தெரிந்த ஒருவரிடம் இரவல் வாங்கித்தான் பயன்படுத்தியிருக்கிறார். “இதற்குப் பதிலாக லித்தியம் பேட்டரி பயன்படுத்தினால், அதன் பயன்பாட்டை இன்னும் சிறப்பாக்க முடியும். ஆனால், அதை வாங்க என்னிடம் போதிய பணம் இல்லை” என்கிறார் கெளதம். “இந்த வாகனம், பொருட்களை ஏற்றிச்செல்ல, மலைப் பிரதேசங்களுக்குச் செல்ல ஏற்றதாக இருக்கும். இன்னும் சில பரிசோதனைகளை இதில் செய்துபார்க்க வேண்டியிருக்கிறது” எனச் சொல்லும் கெளதம், அந்த ஆய்வுக்கான உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

கெளதமைத் தொடர்புகொள்ள: 9790342561

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in