

அண்மையில் பிரேசில் நாட்டின் கேக்சியாஸ் டோசுல் நகரில் நடைபெற்று முடிந்த செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான டெஃப்லிம்பிக்ஸ் போட்டிகளில் 17 பதக்கங்களை வென்று நாடு திரும்பியிருக்கிறார்கள் இந்திய வீரர்கள். இதில் சென்னை அடையாறைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் மட்டும் மூன்று பதக்கங்களை வென்று புதிய சாதனையுடன் நாடு திரும்பியிருக்கிறார்.
டெஃப்லிம்பிக்ஸில் பிரித்வி சேகர் டென்னிஸ் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என மூன்று பிரிவுகளில் பங்கேற்றார். ஆடவர் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் போட்டியில் ஜஃப்ரீன் ஷேக்குடன் இணைந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்ற பிரித்வி சேகர், ஆடவர் இரட்டையர் பிரிவில் தனஞ்சய் துபேவுடன் இணைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் டென்னிஸில் ஒரு பதக்கம் வென்றிருந்த பிரித்வி சேகர், இந்த முறை மூன்று பதக்கங்களை வென்றதன் மூலம் தன்னுடைய டென்னிஸ் பயணத்தில் அழுத்தமான தடத்தைப் பதித்துள்ளார்.
28 வயதாகும் பிரித்வி, செவித்திறன் குறைபாடு கொண்டவர். எட்டு வயதில் டென்னிஸ் பயணத்தைத் தொடங்கினார். டென்னிஸ் மீதிருந்த தீராக் காதலை அறிந்துகொண்ட அவருடைய பெற்றோர் சேகர் - கோமதி இருவரும் பிரித்வியை ஊக்கப்படுத்தி டென்னிஸ் விளையாட்டில் மெருகேற்றினர். பள்ளியில் படிக்கும் காலத்தில் விளையாட்டில் பதக்கங்களைக் குவித்த பிரித்வி, உயர் கல்வியில் பி.டெக்., எம்.பி.ஏ.வை முடித்தார். கல்லூரிக் காலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியிலும் தங்கம் வென்று தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டார் பிரித்வி.
உயர் கல்வியைப் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்வதைவிட டென்னிஸ் விளையாட்டில் சாதனை புரிய வேண்டும் என்கிற எண்ணமே இருந்தது. பிரித்விக்கு விளையாட்டு வீரர்கள் பிரிவில் சென்னை ரயில்பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் பணி கிடைத்தது. பணியில் இருந்தபடி டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்திய ரயில்வே அணியின் ஓர் அங்கமாகவும் பிரித்வி சேகர் உள்ளார். இந்த அணி பல்கேரியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உலக ரயில்வே டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றது. 2017இல் துருக்கியில் நடைபெற்ற டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் பிரித்வி சேகர், ஜஃப்ரீன் ஷேக்குடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருந்தார்.
தற்போது நடைபெற்று முடிந்த டெஃப்லிம்பிக்ஸிலும் இதே ஜோடி மீண்டும் வெண்கலம் பதக்கம் வென்றது. 2019இல் உலக செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர்களை எல்லாம் வீழ்த்தி தங்கப் பதக்கமும் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வென்றார். அந்த வரிசையில் தற்போது மூன்று பதக்ககங்களை பிரித்வி வென்றுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் தொடர்களில் தொடர்ந்து முத்திரை பதித்துவரும் பிரித்வி சேகரின் அடுத்த இலக்கு என்ன? இதுதொடர்பாக பிரித்விடம் பேசினோம். “அடுத்த டெஃப்லிம்பிக்ஸில் டென்னிஸில் எல்லாப் பிரிவுகளிலும் நாட்டுக்காகத் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். இதைத் தவிர வழக்கமான ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். தற்போது அகில இந்திய டென்னிஸ் சங்கத் தரவரிசையில் 15வது இடத்தில் இருக்கிறேன். செவித் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான உலக தர வரிசை பட்டியலில் ஒற்றையர் பிரிவில் 4வது இடத்திலும் இரட்டையர் பிரிவில் 7வது இடத்திலும் கலப்பு இரட்டையர் பிரிவில் 5வது இடத்திலும் இருக்கிறேன். இவற்றில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதும் என் இலக்கு” என்கிறார் பிரித்வி.
முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் பிரித்வி.