

இதுதான் என்றில்லாமல் யூடியூப்பில் எல்லாவிதமான அலைவரிசைகளும் காணக் கிடைக்கின்றன. ஆனால், தகவல் சார்ந்து பயனுள்ள விஷயங்களை அளிக்கும் யூடியூப் அலைவரிசைகள் மிகவும் குறைவே. அதில், யூடியூபில் ‘தமிழ்ப் பொக்கிஷம்’ தனித்து இயங்கிவருகிறது. உள்ளூர் முதல் உலகம் வரையிலான தகவல்களைச் சுரங்கம் போல் கொட்டுகிறது இந்த அலைவரிசை.
தகவல் தரும் அலைவரிசை
திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ்வரன் நடத்திவரும் அலைவரிசைதான் ‘தமிழ்ப் பொக்கிஷம்’. உலகில் எங்கு என்ன நடந்தாலும் அதைப் பற்றிய தரவுகளோடு உடனடி காணொலியைத் ‘தமிழ்ப் பொக்கிஷ’த்தில் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு தீயாய் வேலை செய்கிறது இந்த அலைவரிசை. நடப்பு நிகழ்வு, சமூகப் பிரச்சினைகள், வரலாறு, உலக அரசியல், இந்திய அரசியல் என எல்லாவற்றையும் பேசுகிறது. பேசு பொருளாகும் விஷயங்கள் மட்டுமல்லாமல், பிறரால் கவனிக்கப்படாத நிகழ்வுகளையும் காணொளியாக வழங்கிவிடுகிறது இந்த அலைவரிசை.
ஒரு நிகழ்வின் தரவுகள், புள்ளிவிவரங்கள் போன்றவை உடனே திரட்டுவதற்கு மெனக்கிடல் வேண்டும். அந்த அளவுக்குத் தகவல்களைத் திரட்டிக் காணொளியை விக்னேஸ்வரன் வழங்கும் வேகம் சிறப்பானது. மற்றவர்கள் சொல்லாத விஷயங்களைச் சொல்வதன் மூலம் ‘தமிழ்ப் பொக்கிஷம்’ எல்லோரையும் கவனிக்கத்தக்க யூடியூப் அலைவரிசை எனலாம். உதாரணமாக இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் என்ற காணொளியும் இங்கு கிடைக்கிறது. உலகத்தில் என்ன நடக்கிறது என்ற காணொளியோடு விட்டுவிடாமல், அதன் விளைவால் என்ன மாற்றம் ஏற்படும் என்பதையும் அலசி, ஆராய்ந்து சொல்லி, கில்லியாடுகிறார் விக்னேஸ்வரன்.
கோடிகளில் பார்வையாளர்கள்
இந்த அலைவரிசையில் பிளே லிஸ்டில் சென்று பார்த்தால், அதை உணர்ந்துகொள்ள முடியும். அழகிய தமிழில் விக்னேஸ்வரன் பேசுவது, பார்வையாளர்களைக் கவர்ந்துவிடுகிறது. ‘தமிழ்ப் பேசும் அனைத்து நெஞ்சங்களுக்கும் தமிழ்ப் பொக்கிஷத்தின் அன்பான வணக்கங்கள்” என்று தொடங்கி முடிக்கும் வரை அனாவசியமின்றி ஆங்கிலக் கலப்பு இல்லாமல் விக்னேஸ்வரன் பேசுவது இன்னும் அழகு.
யூடியூப்பை வருமானத்துக்கு வழி செய்யும் சமூக ஊடகமாக மட்டும் கருதாமல், இந்த அலைவரிசையின் மூலம் தமிழகத்தின் பின்தங்கிய கிராமங்களில் வசிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியும் வாழ்வாதாரம் இழந்த குடும்பத்துக்கு முடிந்தளவு உதவியையும் ‘தமிழ்ப் பொக்கிஷம்’ பார்வையாளர்கள் வழியாகப் பண உதவி பெற்று அதை வழங்குவதாகப் பார்வையாளர் ஒருவர் சிலாகித்து எழுதியிருப்பது, இந்த அலைவரிசையின் சமூக சேவையையும் உணர்த்துகிறது.
2018-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ‘தமிழ்ப் பொக்கிஷம்’ அலைவரிசைக்குத் தற்போது சுமார் 13.9 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இதுவரை இந்த அலைவரிசை 26.22 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றி நடைப் போட்டு வருகிறது.
தமிழ் பொக்கிஷம் யூடியூபைக் காண: https://www.youtube.com/c/TamilPokkisham