

மாயாஜால நிகழ்ச்சி என்றாலே நீண்ட கறுப்பு உடை, தலையில் தொப்பி, கையில் சிறு கோலுடன் மேடையின் மையத்தில் போடப்பட்டிருக்கும் மேசையை விட்டு இந்தப் பக்கம், அந்தப் பக்கம் நகராமல் மேஜிக் செய்யும் கலைஞர்கள்தாம் நம் மனத்தில் தோன்றுவார்கள். ஆனால், சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடந்த அலெக்ஸ் பிளாக்கின் மாயாஜால நிகழ்ச்சி. வழக்கமான இந்தச் சட்டகத்துக்குள் பொருந்தவில்லை.
அரங்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் சிநேகமாகப் பேசுவது, இளைஞர்களை மேடைக்கு அழைத்து அவர்களையும் தான் செய்யவிருக்கும் மாயாஜால சாகசங்களுக்கு உதவியாளர்களாக மாற்றுவது, நகைச்சுவையுடன் பேசி கலாய்ப்பது என்று அரங்கில் இருந்தவர்களைத் தன்னுடைய மாயாஜால செயல்களால் மட்டுமல்லாமல், தோழமையோடு மேஜிக்கை நிகழ்த்தும் கலைஞன் என்பதைப் புரியவைத்தார், உலகப் புகழ்பெற்ற இல்யூஷனிஸ்ட், மாயாஜாலக் கலைஞர் அலெக்ஸ் பிளாக்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, லெபனான், துருக்கி, துனிசியா, மெக்சிகோ, போலந்து, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாயாஜால நிகழ்ச்சிகளை நிகழ்த்திவரும் அலெக்ஸ், ரஷ்ய சர்க்கஸ் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். உலக அளவில் சிறந்த இல்யூஷன் கலைஞருக்கான விருதை ஐந்து முறை பெற்றிருக்கும் அலெக்ஸ், சென்னையில் இதற்கு முன்பே மாயாஜால நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். தற்போது சென்னை, ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜூன் 5 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு) அலெக்ஸின் மாயாஜால நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாரம்பரியமாக நாம் இதுவரை பார்த்துவந்த மாயாஜால நிகழ்ச்சிகளிலிருந்து மிகவும் புதுமையான காட்சி அனுபவத்துடன் கூடிய மாயாஜால நிகழ்ச்சியாக இது அமைவதற்கு லைட் பிக்சல் லேசர் தொழில்நுட்பமும் கைகோத்திருப்பதே காரணம். ‘பழம் நழுவிப் பாலில் விழுவது’ போல் திரையில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் மீன் திரை நழுவி அலெக்ஸின் பையில் விழுகிறது. மேடையில் நிற்கும் அலெக்ஸின் பெண் உதவியாளர்களின் உடையின் வண்ணம் நொடிக்கொருதரம் மாறுகிறது.
காற்றடைத்த மிகப் பெரிய பந்து அரங்கில் பறக்கவிடப்பட்டது. இசை ஒலிக்கும்போது, அரங்கில் இருப்பவர்கள் தங்களுக்கு அருகில் வரும் பந்தை கைகளால் அரங்கின் அடுத்த பக்கத்தில் இருப்பவர்களின் மேல் தள்ள வேண்டும். இசை ஒலிப்பது நிற்கும்போது, பந்து யாரிடம் இருக்கிறதோ அவர் மேடைக்கு அலெக்ஸுக்கு உதவியாளராக வர வேண்டும். இதுதான் இந்த விளையாட்டின் விதி. இதன்படி மேடைக்கு வந்த ஒரு சிறுவனிடம் அலெக்ஸ் வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் படங்கள் இருக்கும் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதிலிருந்து ஒரு பிராணியை தேர்ந்தெடுக்கச் சொன்னார்.
அந்தச் சிறுவன் முயலின் படத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்தப் படத்தைக் காலியாக இருக்கும் ஒரு கூண்டுக்குள் வைத்து மூடிவிட்டு, சில நொடிகளுக்குள் திறந்தால் கூண்டில் அழகான முயல் குட்டியைப் பார்த்த அரங்கில் இருந்த குழந்தைகள் ஆனந்தக் கூச்சலிட்டனர். மேடையை விட்டு கீழிறங்கி அலெக்ஸ் அந்த முயல்குட்டியைக் குழந்தைகள் தொட்டுப் பார்க்கவும் வைத்தார். மீண்டும் அந்த முயல்குட்டியைக் கூண்டுக்குள் போட்டுவிட்டு, சிறிது நொடி கழிந்ததும் பார்த்தால் கூண்டில் முயல் இல்லை. அலெக்ஸ் கூண்டின் பாகங்களைத் தனித்தனியே பிரித்து விட்டார். அவ்வளவு ஏன், கூண்டே இல்லை!
சீட்டுக்கட்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் வழக்கமான சாகசங்கள், ஓரிகாமி இல்யூஷன், எண் விளையாட்டுகள் போன்ற தெரிந்த மாயாஜால விளையாட்டுகளுடன், அவரே ‘இதை வீட்டில் எல்லாம் நீங்கள் முயற்சி செய்யாதீர்கள்’ என்று அடிக்கடி எச்சரித்து ஒரு விளையாட்டை விளையாடினார். ஓர் இளைஞரை மேடைக்கு அழைத்து காகிதத்தால் செய்யப்பட்ட நான்கு கூம்பு வடிவ கோன்களைக் கொடுத்தார். அலெக்ஸ் மேடையில் வேறு பக்கத்துக்குச் சென்றுவிட்டு, செங்குத்தாக நிறுத்திவைக்கப்பட்ட கத்தியை ஒரு கூம்பு வடிவ கோனால் மூட சொன்னார். மீதியிருக்கும் கூம்பு வடிவ கோன்களுக்குக் கீழ் எதுவும் இருக்காது.
நான்கு கூம்பு வடிவ கோன்களில் எந்தவொரு கோனின் கீழ் கத்தி இருக்கிறது என்பது அதை வைத்தவருக்குதான் தெரியும். எதிரில் இருப்பவரின் மனத்தைப் படிக்கும் வித்தையால் கத்தி இல்லாத மூன்று காகிதக் கூம்புகளை சரியாக அடையாளம் கண்டு தன் கைகளால் நசுக்கினார் அலெக்ஸ். இதை அவர் செய்து காட்டிய திக்..திக்.. நொடிகளில் குழந்தைகளின் முகத்திலும் திகில் அப்பட்டமாகத் தெரிந்தது.