யூடியூப் உலா: அலைவரிசைகளின் பிக்பாஸ்!

யூடியூப் உலா: அலைவரிசைகளின் பிக்பாஸ்!
Updated on
2 min read

யூடியூப் பொழுதுபோக்கு அலைவரிசைகளிலேயே ‘பிளாக் ஷீப்’பை ‘பிக்பாஸ்’ என்று அழைக்கலாம். ஆமாம், ‘பிளாக்‌ஷீப் டிஜிட்டல் விருதுகள்’ என்கிற விழாவைப் பிரம்மாண்டமாக நடத்தி பிற யூடியூப் அலைவரிசைகளுக்கு விருது கொடுக்கும் அளவுக்கு இந்த அலைவரிசை உயர்ந்திருக்கிறது.

‘ஸ்மைல் சேட்டை’ என்கிற அலைவரிசையில் சேட்டை செய்துகொண்டிருந்த ஆர்ஜே விக்னேஷ்காந்த், அங்கிருந்து வந்து சில நண்பர்களோடு சேர்ந்து தனியாகத் தொடங்கிய அலைவரிசைதான் ‘பிளாக்‌ஷீப்’. 2017இல் ஒரு சிறு யூடியூப் அலைவரிசையாகத்தான் தொடங்கினார்கள். வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைகள், பிராங்குகள், சேட்டைகள், பரிதாபங்கள் எனக் காணொளிகளை வெளியிட்டதன் மூலம் விரைவிலேயே அதன் கிராஃப் மேலே ஏறியது.

வழக்கமாகப் பொழுதுபோக்கு அலைவரிசைகள், ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மையப்படுத்தியே காணொளிகளைத் தயாரிப்பார்கள். ஆனால், இந்த அலைவரிசை எல்லாவிதமான அம்சங்களையும் கலந்து, சிரிப்பு மிக்ஸர் கொடுப்பதுதான் இதன் சிறப்பு. அதனாலேயே, வாண்டுகள் முதல் வயதானவர்கள் வரை இந்த அலைவரிசையின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்த அலைவரிசையில் ‘திருடா திருடா’, ‘ட்ரை பண்றோம்’, ‘மூடர் கூடம்’, ‘பென் குயின்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘படிக்காதவன்’, ‘பேச்சே துணை’, ‘வெப் சீரிஸ்கள்’ என ஏராளமான தலைப்புகளில் காணொளிகள் குவிந்து கிடக்கின்றன.

சில அலைவரிசைகளில் சிறிய அணியை வைத்துக்கொண்டே யூடியூப் அலைவரிசைகளை நடத்துவதுண்டு. ஆனால், பிளாக் ஷீப் ஒரு நிறுவனம் போலவே செயல்படுகிறது. கோர் பிரிவு, டைரக்‌ஷன் பிரிவு, கேமரா பிரிவு, எடிட்டர்ஸ் பிரிவு எனப் பல பிரிவுகளை ஏற்படுத்தித் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. ஷா, ஆர்ஜே விக்னேஷ்காந்த், பாலகிருஷ்ணன், பிரகாஷ் ஆறுமுகம், சுட்டி அரவிந்த், பிரபாகரன், ராம்குமார், அன்பு, கார்த்திக் வேணுகோபாலன், கலையரசன் தங்கவேலு, டியூட் விக்கி உள்பட இளைஞர் பட்டாளத்தின் பின்னணியில்தான் இந்த அலைவரிசை இயங்கி வருகிறது.

தொலைக்காட்சி சேனல்களைப் போல ‘பிளாக் ஷீப்’ அலைவரிசைக்கும் தனித்தனி அலைவரிசைகள் வந்துவிட்டன. அந்த அளவுக்கு இந்த அலைவரிசை ஆலமரம்போல் வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது. பிளாக் ஷீப் ஸ்போர்ட்ஸ், பிளாக் ஷீப் சினிமாஸ், பிளாக் ஷீப் கோ, உனக்கென்னப்பா, பிளாக் ஷீப் தர்பார் என மேலும் ஐந்து அலைவரிசைகள் பிளாக் ஷீப்பின்கீழ் அணிவகுகின்றன. இந்த ஆறு அலைவரிசைகளையும் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். இதில் பிளாக் ஷீப் அலைவரிசையை மட்டும் 44.20 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 73 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுத் தமிழ் யூடியூப் அலைவரிசைகளில் ராஜாவாக வலம்வருகிறது.

பிளாக்‌ஷீப் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், தமிழக டிஜிட்டல் ஊடகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பலரின் வீடியோக்கள், அவர்களுடைய படைப்புகளும் இந்த யூடியூப் அலைவரிசையில் இடம் பெறத் தொடங்கியிருப்பதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது பிளாக் ஷீப். மேலும் யூடியூப் அலைவரிசைகளிலேயே முதன் முறையாக ஓடிடி-யில் செயல்படும் நிறுவனமாகவும் பிளாக் ஷீப் உயர்ந்திருக்கிறது!

பிளாக் ஷீப் காணொளிகளைக் காண: https://www.youtube.com/results?search_query=black+sheep

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in