

தமிழ் சினிமாவுக்கு எப்போதும் ரெண்டு சூப்பர் ஸ்டார்கள் இருப்பார்கள். எம்.கே.தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல் ஹாசன் என்று காலங்காலமாக இதுதான் வழக்கம். இந்தக் கால சினிமாவுக்கும் இது விதிவிலக்கல்ல. இப்போது விஜய்- அஜித்.
அது அந்தக் காலம்
காலத்துக்கு ஏற்றாற்போல ரசிகர்கள் தங்களுடைய சூப்பர் ஸ்டார்களுக்கு அவர்களால் முடிந்த அளவுக்குக் கௌரவம் செய்வார்கள். அந்தக் காலத்திலிருந்து இதுதான் நடைமுறை. அந்தக் காலத் தலைமுறையிலும் சூப்பர் ஸ்டார்களின் படம் வெளியாகும் அன்று ஊரே அல்லோகலப்பட்டது. படப் பெட்டியை ஒரு ராஜகுமாரனைப் போல் யானை அம்பாரி மீது வைத்து எடுத்துவந்ததெல்லாம் உண்டு. ஒரே படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள் உண்டு. டிக்கெட் எடுக்கச் சோறு கட்டிக்கொண்டு போய் காத்திருந்த கதைகளெல்லாம் உண்டு. இந்தத் ‘திருத்தொண்டர்கள் புராணம்’ என்றுமே தொடர்கதைதான்.
இந்தக் கால ரசிகர்கள் தங்கள் சூப்பர் ஸ்டார்களுக்கு வேறுவிதமாக மரியாதை செய்கிறார்கள். படம் வெளியாகும்போது அந்தப் படத்துக்காக ஒரு பாடலை வெளியிடுகிறார்கள். அண்மையில் வெளிவந்த விஜய் படமான ‘பீஸ்ட்’க்காக ஒரு கானா பாடலை யூடியூபில் வெளியிட்டிருந்தார்கள் அவருடைய ரசிகர்கள். ‘வெயிட்டிங்கில் வெறி ஏறும் பீஸ்ட் படத்துக்கு, யாருமே ஈடு இல்ல அண்ணே இடத்துக்கு’ எனத் தொடங்கும் ஒரு பாட்டைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘கானா’ சல்லு, ‘கானா’ சஞ்சய், ‘கானா’ சக்தி ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். இந்தக் கருத்துள்ள(!) பாடலை கானா சல்லு எழுதியிருக்கிறார். பென்னட் கிறிஸ்டோபர் இசை அமைத்திருக்கிறார். விஜய் ஆடுவது போன்று அழகான நடனத்துடன் இந்தப் பாடலைத் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தக் கால ரசிகர்கள்
அது மட்டுமல்ல விஜய்யின் பிறந்த நாளையொட்டியும் ஜூனியர் நித்யா என்பவர் யூடியூபில் பாடலை வெளியிட்டிருந்தார். ‘ஜில்லானாலே பிடிக்கும் துப்பாக்கின்னா வெடிக்கும். பாசத்துல அன்பு பகவதி. அவருதான் எங்களோட இளைய தளபதி’ என்கிற பாடலை ராஜி எழுதி, நித்யா குரலில் வெளியிட்டிருந்தார்கள். அஜித்துக்கும் இம்மாதிரி பாடல்கள் உண்டு. அவருடைய ‘வலிமை’ படத்தின் ‘அப்டேட்’ கேட்டு நாட்டையே அவரது ரசிகர்கள் அதகளப்படுத்தினார்கள்.
நம்மூர் அரசியல் பிரபலங்கள் தொடங்கி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி எனப் பலரும் இந்த அப்டேட் தொந்தரவில் சிக்கிக்கொண்டார்கள். ‘வலிமை’ வெளியானதையொட்டி வித்தியாசமாக ‘கானா’ ப்ரீத்தி என்கிற பெண் ரசிகர், அஜித்தைப் புகழ்ந்து கானா பாடி ஆடியுள்ளார். இவர் மட்டுமல்ல கானா உலகின் பிரபலமான ‘கானா’ சுதாகர், அஜித்துக்காகப் பல பாடல்களைப் பாடியுள்ளார். ‘ஏகப்பட்ட ஆப்ரேசன் தலையோட முதுகுல. கஷ்டப்பட்ட காலத்துல யாரும் வந்து உதவுல’ என்கிற ‘கானா’ சுதாகர் பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ‘கோலிவுட்டுல ஹாலிவுட்டு ஹீரோ யாரு. சின்ன கொழந்தகூட சொல்லுண்டா தலயோட பேரு’ - இதுவும் ‘கானா’ சுதாகர் பாடல்தான்.
போட்டிப் பாட்டு
இப்படித் தல அஜித் - தளபதி விஜய்க்கும் கானா பாடல்களை தாராளமாகப் பாடியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல, பல இடங்களில் மேடைகளில் தல, தளபதி பாடல்களைப் பாடுபவர்களுக்கு இடையே போட்டிப் பாட்டும் நடப்பதுண்டு. ‘கானா’ பிரபா, ஜூனியர் நித்யா ‘தளபதி’யைப் புகழ்ந்து பாடுவதில் ரொம்பப் பிரபலம். அதுபோல் ‘கானா’ சுதாகர், ‘கானா’ மைக்கேல் ‘தல’யைப் புகழ்ந்து பாடுவதில் பிரபலம்.
இவர்களில் பிரபாவும் மைக்கேலும் ஒரே மேடையில் விஜய், அஜித்தைப் புகழ்ந்து போட்டிப் பாடல் பாடியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சுதாகரும் நித்யாவும் போட்டிப் பாட்டுப் பாடியிருக்கிறார்கள். தல, தளபதியை வைத்து இவர்கள் போட்டி போட்டாலும் இதன் மூலம் இந்த இளம் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்பதே உண்மை.\