

நம் பார்வையை ஏமாற்றும் வண்ணம் இருக்கும் காட்சி அமைப்புகளை ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion) என்கிறார்கள். அதாவது, பிறழ்வான பிம்பத்தைக் காட்டுவது. ஆப்டிகல் இல்யூஷன் பாணியிலான படங்கள் அல்லது ஓவியத்தின் அமைப்பு, அதிலுள்ள வண்ணங்களின் விளைவு, ஒளியின் தாக்கம் போன்றவை தவறான பிம்பத்தை நம் கண்களுக்குக் கொடுக்கலாம். தற்போது ஆப்டிகல் இல்யூஷன் பாணி ஓவியங்கள் உலகெங்கும் பிரபலமாகிவரும் சூழலில், கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வித்தியாசமான ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்கி இணைய உலகைத் திகைக்க வைத்திருக்கிறார்.
வான்கூவரில் வசிக்கும் மிமி சோய் என்கிற இந்த இளம்பெண் அண்மையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான ஒளிப்படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றியிருந்தார். அந்தப் படங்கள்/காணொளிகளில் ஒரு பெண்ணின் முகத்தில் விதவிதமான கண்கள், உதடுகள், காதுகள், மூக்குகள், விரல்கள் என மிரட்டலாக ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதில், ‘சரியான ஜோடி கண்களைக் கண்டுபிடிக்க முடியுமா?’ என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார். ஆனால், சரியான கண் ஜோடிகளைச் சுலபத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுதான் ஆப்டிகல் இல்யூஷனின் சிறப்பு. தவறான பிம்பத்தை நம் கண்கள் உள்வாங்கி மூளைக்குள் அனுப்புவதால், நம் பார்வையை ஆப்டிகல் இல்யூஷன் ஏமாற்றிவிடுகிறது. தற்போது வெளிநாடுகளில் ஆப்டிகல் இல்யூஷனை வைத்து ஒருவருடைய மூளையின் செயல்பாடு, அறிவுத் திறன், குணநலன்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் நிபுணர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே அண்மைக்காலமாகச் சமூக வலைத்தளங்களில் ஆப்டிகல் இல்யூஷன் தொடர்பான ஒளிப்படங்கள், காணொலிகள் அதிகம் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. வித்தியாசமான ஓவியங்கள் அல்லது படங்களைப் பார்த்து பலரும் அவற்றைப் பகிர்வதால் அவை அடிக்கடி வைரல் ஆகின்றன.
கடந்த வாரத்தில் மிமி சோயின் ஒளிப்படங்கள், காணொலிகள் அதிக அளவில் வைரலாகின. மிமி சோய் ஓர் ஒப்பனைக் கலைஞர். தன்னுடைய முகத்தில் வினோதமான ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்குவதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டுள்ளார். தன்னுடைய முகத்தை ஒரு ‘சார்ட் பேப்பர்’ போல நினைத்து விதவிதமாக ஆப்டிகல் இல்யூஷனை உருவாக்கிவருகிறார். அவருடைய காணொளிகள் ஒவ்வொன்றும் வாயைப் பிளக்க வைக்கின்றன. அந்த அளவுக்கு நேர்த்தியான, வித்தியாசமான, ஆச்சரியமான ஆப்டிகல் இல்யூஷன்கள் இவருடைய ஒளிப்படங்கள்/காணொளிகளில் காணக் கிடைக்கின்றன. இதன்மூலம் இவரைப் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து எகிறிவருகிறது.
மிமி சோயின் காணொளியைக் காண: https://www.instagram.com/p/CcQMRsfFKb9/