

எந்தச் சம்பவத்தையும் நகைச்சுவையோடு இணையத்தில் உலவவிடும்போது அதற்குக் கிடைக்கும் வரவேற்பே தனிதான். யூடியூப் அலைவரிசை கொஞ்சம் கொஞ்சமாகப் புகழ் பெற தொடங்கியபோது இதுபோன்ற காமெடி சேட்டைகளுடன் கூடிய காணொலிகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு அஸ்திவாரம் போட்டது ‘ஸ்மைல் சேட்டை’.
எந்த உள்ளடகத்தையும் நகைச்சுவையாகச் சொல்வதன்மூலம் வெற்றிபெற்ற அலைவரிசைதான் இது. இன்று ‘பிளாக் ஷீப்’ யூடியூப் அலைவரிசையின் முகமாகிவிட்ட ஆர்.ஜெ. விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், பாலசுப்பிரமணியம் ஆகியோர் 2015ஆம் ஆண்டு வாக்கில் நண்பர்களுடன் சேர்ந்து சேட்டைகள் செய்தது இந்த ‘ஸ்மைல் சேட்டை’யில்தான். அங்கு கிடைத்த புகழ் வெளிச்சம் மூலமே விக்னேஷ்காந்துக்கு சினிமா வாய்ப்பு வரை கிடைத்தது.
தொடக்கத்தில் ஆர்.ஜெ., விக்னேஷ்காந்தின் அரசியல் நையாண்டி வீடியோக்கள் ‘பீப் ஷோ’ என்கிற பெயரில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. பின்னர் ஜோசியங்களைக் கலாய்க்கும் ‘டம்ப்பெஸ்ட் ரிவியூ’, ‘ஸ்பெஷல் சாங் டெடிகேடட்’, ‘வை ராஜா மை’, ‘சேட்டை சந்தை’, ‘பிக்கஸ்ட் ஷோ’, ‘குறும்படங்கள்’, ‘வெப் சீரிஸ்கள்’, ‘சேட்டைப் பசங்க’ என 2018ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக யூடியூபில் பிஸியாக இருந்தது இந்த அலைவரிசை. பிறகு விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த் உள்ளிட்டோர் பிளாக் ஷீப் பக்கம் போய்விட, கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஸ்மைல் சேட்டை’யில் காணொலிகள் பதிவிடுவது சற்றுக் குறைந்துபோனது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ‘ஸ்மைல் சேட்டை’ அலைவரிசை மீண்டும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது. ஆர்.ஜெ., விஜய், சபரி, ஆர்.ஜே., வினோத், தேவதர்ஷினி உள்ளிட்ட குழுவினரின் காணொலிகள் இந்த அலைவரிசையில் தொடர்ச்சியாகப் பதிவிடப்பட்டு வருகின்றன. வழக்கம்போல நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தே இந்த அலைவரிசை உள்ளடக்கங்களைத் தயார்செய்து பதிவிட்டு வருகிறது.
தற்போது ‘வெப் சீரிஸ்’, ‘பீப் ஷோ 2.0’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’, ‘143 வித் சபரி’, ‘90’ஸ் பையன்’, ‘2கே பொண்ணு’ உள்படப் பல காணொலிகள் இந்த அலைவரிசையில் தொடர்ச்சியாகப் பதிவிடப்பட்டுவருகின்றன.
தற்போதைய நிலையில் இந்த அலைவரிசையை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். 641 காணொலிகள் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த அலைவரிசை, இதுவரை 12.43 கோடிப் பார்வைகளைப் பெற்று ராஜ நடை போடுகிறது.
இந்த யூடியூபைக் காண: https://www.youtube.com/c/SmileSettai/videos
‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription