

சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று ஃபேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் ரீல்ஸுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இந்தச் சூழலில் ரீல்ஸுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் செய்யும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. எங்கு கொண்டு போய் நிறுத்தும் இந்த ரீல்ஸ் மோகம்?
டிக்டாக் இடத்தில்
ஸ்மார்ட் போன்களின் வரவுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதுவும் காணொளி சார்ந்த சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே, பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குவிந்தது. இதற்கெல்லாம் பாதை அமைத்துக் கொடுத்தது டிக்டாக் செயலிதான். காணொளி செயலிகளில் டிக்டாக் முதன்மையாக இருந்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்தச் செயலியை தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகவே பலரும் கருதினர். குறிப்பாக இளைய தலைமுறையினர் பலரும் டிக்டாக் செயலியின் வாயிலாகத் தங்கள் திறமையை வெளிகாட்டத் தொடங்கினர்.
இந்தச் செயலியின் வாயிலாகப் பலர் வெளியுலகிற்குத் தெரியும் அளவுக்குப் புகழ் பெற்றனர். அடுத்த கட்ட வாய்ப்புகளையும் பலர் பெற்றனர். ஆனால், அதேவேளையில் சில காணொளிகள் எல்லை மீறி சென்றது விமர்சனங்களுக்கும் வழிவகுத்தன. எதை வேண்டுமானாலும் காணொளியாக்குவது, ஆபாச நடனம், ஆபாச பேச்சு என அது வேறொரு பாதைக்குச் சென்றது. டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, அதைப் பயன்படுத்தியவர்கள் ஒரு கணம் திண்டாடித்தான் போனார்கள். அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திக்கொண்டன. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை ரீல்ஸ் என்கிற பெயரில் காணொளிகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தன.
வேகமான வளர்ச்சி
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரீல்ஸ் மிகப் பெரிய கவன ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது. வெறும் 15 விநாடிகளுக்குத்தான் ரீல்ஸ் வெளியிட முடியும். என்றாலும், பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை பல தரப்பினரையும் ரீல்ஸ் ஈர்த்திருக்கிறது. டிக்டாக் இல்லாத குறையை ரீல்ஸ் தீர்த்திருக்கிறது என்றும் சொல்லலாம். டிக்டாக் செயலியில் இருந்த பாணியிலான வீடியோக்கள் ரீல்ஸிலும் வரத் தொடங்கியுள்ளன.
2020ஆம் ஆண்டின் மத்தியில் ரீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், உலகெங்கும் அது தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. அதன் வளர்ச்சியும் ஜெட் வேகம் பிடித்திருக்கிறது. இந்தியாவிலும் ரீல்ஸில் வெளியிடும் காணொளிகள் அதிகரித்திருக்கின்றன, 2022ஆம் ஆண்டில் மட்டுமே இந்தியாவில் ரீல்ஸில் நேரத்தைச் செலவிடும் இந்தியர்களின் எண்ணிக்கை 3.5 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதேபோல ரீல்ஸ் காணொளிகளைப் பதிவிறக்கம் செய்வதும் இந்தியாவில் 11.4 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரீல்ஸ் மோகம்
ரீல்ஸில் நேரத்தைச் செலவிடும்போது, நேரம் போவதே தெரியாத அளவுக்குக் காலத்தை விழுங்கிவிடவும் செய்கிறது என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தாலும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் ரீல்ஸைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. ரீல்ஸ் தொடர்ந்து கவன ஈர்ப்பைப் பெற்றுவரும் சூழலில், அது எதிர்கால தலைமுறையான பள்ளி மாணவர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மாணவர்களின் ‘ரீல்ஸ்’ சமூக ஊடகங்களில் வைரலானது.
வகுப்பறையில் மேசை, நாற்காலிகளை உடைப்பது, பீர் குடிக்கும் பள்ளி மாணவிகள் என இளம் தலைமுறையினரின் ரீல்ஸ் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. 3 வாரங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த 3 பதின் பருவத்தினர் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தனர். வெறும் லைக்ஸுகளுக்காகவும் ஷேர்களுக்காகவும் செய்யப்படும் இந்த விபரீதங்களால், எதிர்க்கால வாழ்க்கையைத் தொலைக்கும் அளவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
ஏற்கெனவே இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வடிவிலான பதிவுகளைத்தான் அதிகம் பார்க்கிறார்கள். செல்ஃபி மோகம் போல ரீல்ஸ் மோகம் பள்ளிச் சிறார்கள் தொடங்கி சகல தரப்பினரையும் வசப்படுத்திவருகிறது. தொடரும் ரீல்ஸ் மோகம் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்கிற இயல்பான கேள்வியும் எழுகிறது.