லாரா பிறந்தநாள்: டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாதி ராஜா!

லாரா பிறந்தநாள்: டெஸ்ட் கிரிக்கெட்டின் ராஜாதி ராஜா!
Updated on
2 min read

உலகில் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா 53-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். கிரிக்கெட்டை நேர்த்தியாகவும் அற்புதமாகவும் விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர். கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டியில் 400 ரன்களை விளாசிய ஒரே கிரிக்கெட் வீரர். இந்தியாவின் சவுரவ் கங்குலியைப் போலவே ஆஃப்சைடிலும் ஸ்கொயர் கட்டிலும் தனித்த பாணியில் பந்துகளை விளாசிய தனிக்காட்டு ராஜா.

லாராவின் சாதனைகள் கணக்கிலடங்காதவை. அவர் செய்த சாதனைகளை விரல்விட்டு எண்ண முடியாது. என்றாலும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு வீரரின் மிகச் சிறந்த இன்னிங்ஸ்களை வகைப்படுத்திவிட முடியும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் நான்கு சிறந்த இன்னிங்ஸ்களைப் பற்றிப் பார்ப்போம்.

சிறந்த விரட்டல்

பிரையன் லாரா பலமுறை பிரம்மாண்ட ஸ்கோர்களை விளாசியிருக்கிறார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லாரா எடுத்த இந்த 153 ரன்னுக்கு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தனி இடம் உண்டு. 1999-ஆம் ஆண்டில் பிரிட்ஜ்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 308 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. நான்காவது இன்னிங்ஸில் 308 ரன்கள் இலக்கு என்பது கடினமானது. இந்தப் போட்டியில் 105 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. பின்னர் களமிறங்கிய லாரா, 153 ரன்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட்டில் வெல்ல காரணமாக இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரபலமான வெற்றிகளில் இதுவும் ஒன்றாக இன்றுவரை போற்றப்படுகிறது. விஸ்டனின் சிறந்த ‘நாக்’காகவும் இந்தப் போட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அளவுக்குச் சிறப்புபெற்றது இந்தப் போட்டியில் லாராவின் இன்னிங்ஸ்.

முதல் இரட்டை சதம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் செஞ்சுரியே டபுள் செஞ்சுரியாக அமைவதெல்லாம் அரிது. அந்த அரிதான செஞ்சுரிக்குச் சொந்தக்காரர் பிரையன் லாரா. 1992-93ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்திருந்தது. சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 277 ரன்களைக் குவித்துத் தன்னுடைய முதல் சதத்தைப் பதிவுசெய்தார் லாரா. தான் விளையாடிய ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலேயே இந்தச் சாதனையை அவர் படைத்தார். முதல் செஞ்சுரியே முத்தான சதமாகப் பதிவுசெய்த லாராவின் கிரிக்கெட் பயணத்தில் இதுவும் சிறந்த இன்னிங்ஸ்.

லாரா 400 ரன் எடுத்தபோது..
லாரா 400 ரன் எடுத்தபோது..

தகர்ந்த சாதனை

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேரி சோபர்ஸ், 1958ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக குவித்த 365 நாட் அவுட் என்ற ஸ்கோர்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்தச் சாதனை 1994ஆம் ஆண்டில் தகர்ந்தது. இதைத் தகர்த்தவர் அதே நாட்டைச் சேர்ந்த பிரையன் லாரா. 1994ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்குச் சென்றிருந்தது. கடைசி ஐந்தாவது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜான்ஸில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் லாரா 375 ரன்களைக் குவித்து 36 ஆண்டுகளாக நீடித்த சோபர்ஸின் சாதனையைத் தகர்த்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்களை விளாசிய வீரரானார் லாரா.

மீண்டும் தகர்ந்த லாரா

டெஸ்ட் போட்டியில் லாராவின் அதிகபட்ச ரன் சாதனை, ஒன்பது ஆண்டுகள் நீடித்த நிலையில், அந்தச் சாதனையை ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் தகர்த்தார். 2003ஆம் ஆண்டில் பெர்த் நகரில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஹைடன் 380 ரன்களைக் குவித்து, புதிய சாதனை படைத்தார். லாராவின் சாதனையையும் முறித்தார். ஆனால், ஹைடனின் இந்தச் சாதனை ஆறுமாதங்கள்கூட நீடிக்கவில்லை. 2004ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றது. லாரா 375 ரன்கள் குவித்த அதே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இதுவரை யாரும் செய்திராத சாதனையைப் படைத்தார் லாரா. ஆம், இந்தப் போட்டியில்தான் லாரா 400 ரன்களைக் குவித்து ஹைடனின் சாதனையைத் தகர்த்ததோடு, டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 400 ரன்களைக் குவித்த வீரரானார். 18 ஆண்டுகளாக லாராவின் சாதனை நீடிக்கும் நிலையில், அது என்றாவது ஒரு நாள் தகர்க்கப்படலாம். ஆனால், முதன் முறையாக 400 ரன்கள் விளாசிய லாராவின் சாதனை, கிரிக்கெட் உள்ள வரை நினைவு கூரப்படும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in