காதல் பொருட்கள்: காதலன் வீட்டில் லைட் போட்டால் காதலி வீட்டில் விளக்கெரியும்!

காதல் பொருட்கள்: காதலன் வீட்டில் லைட் போட்டால் காதலி வீட்டில் விளக்கெரியும்!
Updated on
2 min read

காதலர்கள் நேரடியாகச் சந்திக்கும் தருணங்களைத் தாண்டி, அவர்களை 24 மணி நேரமும் இணைத்திருப்பவை மொபைலும் அதிலுள்ள செயலிகளும்தான். அதற்கேற்ப டெக்னாலஜி உலகமும் தொடர்ச்சியாக வித்தியாசமான பொருட்களைத் தொடர்ந்து உருவாக்கிவருகிறது. தொலைவில் இருந்தாலும் பரவசமான மன நிலையில் காதலர்களை வைத்திருக்க உதவும் சில பொருட்கள்:


உள்ளங்களைச் சேர்க்கும் விளக்கு


ஹோட்டல்களில் மெலிதாக எரியும் விளக்கின் கீழ் உட்கார்ந்து காதல்மொழி பேசிக்கொண்டிருப்பது என்றால் காதலர்களுக்கு அலாதிப் பிரியம். அதுபோன்ற அனுபவத்தைக் கொடுக்கிறது ‘லாங் டிஸ்டன்ஸ் டச் லேம்ப்ஸ்’ (Long Distance Touch Lamps) என்கிற விளக்கு. ‘ஆளுக்கு ஒண்ணு’ என்று காதலர்களைப் போல இதை ஜோடியாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டியதுதான். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த விளக்கு கையில் இருந்தால் போதும்.

வைஃபை மூலம் இயங்கும் இந்த விளக்குகளை லேசாகத் தட்டினால், காதலர் வீட்டில் இருக்கும் இன்னொரு ஜோடி விளக்கு உடனே எரியத் தொடங்கிவிடும். அதாவது இங்கே நீங்கள் ஸ்விட்சைத் தட்டினால், அங்கு பல்பு எரியும். பிறகென்ன? தொலைவில் இருந்தாலும், காதலர்களை மனத்தால் இந்த விளக்கு சேர்த்து வைத்திருக்கும். ஒருவருக்கொருவர் நினைப்பில் இருக்கிறோம் என்பதை ஒரு சின்ன ஃபிளாஷ் லைட் மூலமும் தெரியப்படுத்தலாம். காதலர்கள் மட்டுமல்ல, ‘நட்புக்காக’ வாழ்பவர்களும் இதைப் பயன்படுத்தலாம். ஆன்லைன் தளங்களில் ரூ.3000-ல் தொடங்கி ரூ.5000 வரை பல வண்ணங்களில் இந்த விளக்குகள் கிடைக்கின்றன.


விரலில் லப்டப்


நம்மூரில் திருமண நிச்சயதார்த்தம் என்றால், விரல்களில் மோதிரம் மாற்றிக்கொள்வது உண்டு. ஆனால், வெளிநாடுகளில் திருமணமே மோதிரம் மாற்றித்தான் பெரும்பாலும் நடக்கும். வெளிநாடுகளில் இந்த மோதிரத்தை தங்கத்தில் மட்டும் அல்லாமல், பிளாட்டினம், ரோல்டு கோல்டிலும் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அண்மைக் காலமாக சார்ஜ் ஏற்றும் வகையில் மோதிரங்கள் வடிவமைக்கப்பட்டுச் சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளன. இதை ‘ஹார்ட் பீட் ரிங்’ (Heart Beat Ring) என்று அழைக்கிறார்கள். உங்கள் அன்பானவரின் இதயத் துடிப்பை விரல்களிலேயே உணர வைக்குமாம் இந்த மோதிரம். ஒருவேளை நீங்கள் ஒர்க்அவுட் செய்தால், இதயத் துடிப்பையும் இந்த மோதிரம் காட்டும். இந்த மோதிரங்கள் 40,000 ரூபாயில் தொடங்கி பயன்படுத்தும் மெட்டலுக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளில் கிடைக்கின்றன.

எங்கு சென்றாலும் முத்தம்


காதலர்கள் மொபைலில் பேசும்போது முத்தத்தைப் பரிமாறிக்கொள்ளாமல் உரையாடல் முடியுமா? நிச்சயம் முடியாது. மொபைலில் முத்தச் சத்தத்துடன் அது முடிந்துவிடும். அதையும் ஆத்மார்த்தமாக உணரும் வகையில் ‘கிஸ்ஸெஞ்சர்’ (Kissenger) என்கிற பொருள் வந்துவிட்டது. மொபைலை ‘கிஸ்ஸெஞ்ச’ரில் இணைத்துவிட வேண்டும். கிஸ்ஸெஞ்சரில் ஓவல் சைஸில் ஓரிடத்தை விட்டிருக்கிறார்கள். அதன் வழியாக உங்கள் காதலருக்கோ அன்புக்குரியவர்களுக்கோ இதழில் முத்தமிட்டால் என்ன அழுத்தத்தில் உணர்வுடன் கொடுக்கிறீர்களோ அதே அழுத்தத்துடன் கிஸ்ஸெஞ்சரில் கொடுத்தால் போதும். உங்களுடைய அன்பு முத்தம் அதே அழுத்தத்தில் மறுபுறத்தில் பதிந்துவிடும். ஜோடிகள் முத்தத்தை ஆன்லைனில் பகிர்வதால், கிஸ்ஸெஞ்சரை ஜோடியாகத்தான் வாங்க முடியும். 3,000 ரூபாயிலிருந்து இது விற்பனையில் உள்ளது.


இதயத்தை இணைக்கும் வாட்ச்


உடற்பயிற்சிகளிலும் ஒர்க்அவுட்களிலும் ஐவாட்ச் பிரதானமாகிவிட்டது. ஐவாட்ச் மூலம் போன் செய்து பேசும் வசதி ஏற்கெனவே வந்துவிட்டது. அண்மையில் ஆப்பிளின் ஐவாட்ச் ஹார்ட் பீட் (Iwatch) சீரீஸ்களில், உங்கள் காதலரையோ, பார்ட்னரையோ தொடர்புகொள்ளும் வசதியும் வந்திருக்கிறது. நீங்களும் உங்கள் காதலர் / பார்ட்னரும் ஐவாட்ச் வைத்திருந்தால், அதன் மூலம். ‘ஹார்ட் சிம்பல்’ அனுப்பலாம். இவை சந்தையில் 20,000 ரூபாயில் தொடங்கி விற்பனைக்கு உள்ளன.

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in