

கரோனா வைரஸிலிருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. அடுத்த அலை எப்போது வருமோ என்கிற பீதி ஒருபுறம் இருக்கவே செய்கிறது. மீண்டும் பழைய வாழ்க்கை எப்போது திரும்பும் என்கிற கேள்விக்கு விடை இல்லை. கரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிற குரல்கள் கேட்பதுதான், இப்போது மக்களுக்கு உள்ள ஒரே வாய்ப்பு.
வீட்டை விட்டு வெளியே வந்தால், முகக்கவசம்; கைகளை அடிக்கடி சோப்பு நீரால் கழுவுதல், சமூக இடைவெளி போன்றவை எழுதப்படாத விதிகளாகிவிட்டன. ஆனால், கரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் உடல் நலனைப் பேணுவது, உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது, மூச்சுப் பயிற்சியை செய்து சுவாசத்தைச் சீராக வைத்துக்கொள்வது எனப் பலரும் பல வழிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த வகையில் பொதுப் போக்குவரத்துக்கு குட்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் ‘சொகுசுவாசிகள்’ என்று பெயரெடுத்த பிரிட்டன்வாசிகள். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், கொரோனா தொற்றிவிடுமோ என்கிற அச்சம்தான் இந்தத் தயக்கத்துக்குக் காரணம். கார் அல்லது பொதுப் போக்குவரத்து மூலம் சுற்றிவந்தவர்கள், தற்போது கிடப்பில் போட்டுவைத்திருந்த இருசக்கர மோட்டார் வாகனம் அல்லது சைக்கிளைத் தூசுத் தட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
கரோனா வைரஸ், உடல் நலம் சார்ந்தும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலமாகப் பேண வேண்டிய அவசியத்தையும் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. எனவே, இருசக்கர மோட்டார் வாகனத்தைவிட, சைக்கிளில் செல்வது உடல்நலனுக்கு நல்லது என்பதால், சைக்கிள் பக்கம் தங்களுடைய பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள் பிரிட்டன்வாசிகள். கடந்த ஓராண்டில் மட்டும் பிரிட்டனில் சைக்கிள் விற்பனை 100 மடங்கு அதிகரித்திருக்கிறதாம். பிரிட்டனில் உள்ள சைக்கிள் கடைகளில் முன்பு வாரத்துக்கு 20-30 சைக்கிள் விற்பனையாவதே பெரிய விஷயம். இப்போது தினமும் 40-50 சைக்கிள்கள் விற்பனையாவதாகச் சொல்கிறார்கள்.
இங்கிலாந்து மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலும் மீண்டும் சைக்கிளுக்குத் திரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். பணக்கார நாடுகள் நிறைந்த ஐரோப்பாவில் சைக்கிளைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு லைஃப் ஸ்டைலை மாற்றிவிட்டிருக்கிறது கரோனா வைரஸ். இந்தியாவிலும்கூட சைக்கிள்களின் விற்பனை 20 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். கரோனா தாக்கம் ஒருபுறம் காரணம் என்றால், அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் இன்னொரு காரணம்.
எது எப்படியோ, கெட்டதிலும் ஒரு நல்லது!