

கொளுத்தும் கத்திரி வெயிலுக்கு இடையில் திடீரெனப் பெய்து குளிர்விக்கும் கோடை மழை, நடுக்கும் மார்கழிப் பனிக்கு இதம் தரும் காலைச் சூரியனின் வெதுவெதுப்பு – இவற்றைப் போல் ஒரு பாடல் அமைந்திருந்தால் எப்படியிருக்கும்? அண்மையில் ஹிட் அடித்த மலையாளத் திரைப்படமான ‘ஹ்ருதய’த்தில் அப்படிப்பட்ட ஒரு பாடலை அரவிந்த் வேணுகோபால் பாடியுள்ளார்.
கர்னாடக இசைப்பாணியில் அமைந்த ‘நகுமோ’ என்கிற அந்தப் பாடலுக்கு நாளும் ஒரு கவர் வெர்ஷன் வெளியாகிவருகிறது. அதிகமும் பரதநாட்டிய கவர் வெர்ஷன்களே பதிவேற்றப்படுகின்றன. இந்தப் பாடலில் அப்படி என்ன புதிதாக இருக்கிறது?
கர்னாடக இசை ரசிகர்களால் பெரிதாக மதிக்கப்படுகிற தியாகராஜரின் கீர்த்தனைகளில் ஒன்று அந்தப் பாடல். காற்றில் மிதந்து செல்லும் ஒரு பறவையைப் போலவும் நீரில் வழுக்கிச் செல்லும் படகைப் போலவும் பெரிய பிரயத்தனங்கள் இன்றி இந்தப் பாடலை அரவிந்த் பாடியிருக்கிறார். இதைக் கேட்டு ரசிப்பதற்கு கர்னாடக இசை ஞானமோ, இலக்கணமோ தெரிந்திருக்கத் தேவையில்லை. அந்த அளவுக்கு எளிமையாகவும் இயல்பாகவும் சட்டென்று இந்தப் பாடல் வசீகரித்துவிடுகிறது. புன்யா ஸ்ரீனிவாசின் வீணை இசை பாடலுக்கு கூடுதல் அழகைச் சேர்த்துள்ளது.
பொதுவாகவே வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கும் படங்களில் காதலும் இசையும் தனி முத்திரையுடன் இருக்கும். ‘ஹ்ருதயம்’ படத்துக்குத் திட்டமிடப்பட்ட பாடல் பட்டியலில் முதலில் இந்தப் பாடல் இடம் பெற்றிருக்கவில்லை. இந்தப் படத் தயாரிப்புக் குழுவில் உதவி இயக்குநராகவே அரவிந்த் முதலில் சேர்ந்திருந்தார். கடைசியாகச் சேர்க்கப்பட்ட இந்தப் பாடல், இன்றைக்குத் தனி அடையாளத்தைப் பெற்றுவிட்டது.
மனம் துவண்டிருக்கும்போது இதம்தருவதாகவும், உற்சாகத்தில் இருக்கும் போது அதை இரட்டிப்பாக்கும் வகையிலும் இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. படத்தில் நாயகனின் திருமண வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வகையில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது பொருத்தம்தான். காதல் தோல்விக்குப் பிறகு நாயகன் அருண், ஒளிப்படக் கலைஞன் ஆகிறார். பிறகு அவர் ஒரு திருமணத்தில் தனது எதிர்கால மனைவி நித்யாவைப் பார்ப்பதுதான் பாடலின் பின்னணி.
இந்தப் பாடலில் மற்றொரு மறைமுக சேதியும் இருக்கிறது. பாடலுக்கு இசையமைத் திருப்பவர் ஹீஷம் அப்துல் வகாப். கலைக்கு மதமோ, சாதியோ கிடையாது. கேரளக் கோயில்களில் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நடனமாட அண்மையில் அனுமதி மறுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதே மண்ணிலிருந்து ஓர் இஸ்லாமியரின் இசையமைப்பில் தியாகராஜ கீர்த்தனை உலகைக் கவர்ந்து இழுத்துக்கொண்டிருப்பது, அதற்கு சரியான பதிலடி.