

இன்று இளைஞர்கள் பலர் வெறித்தனமாக ‘ஒர்க் அவுட்’டில் ஈடுபடுகிறார்கள். ஜிம்முக்குச் செல்வதை ஃபேஷனாகவே மாற்றிவிட்டார்கள். ‘ஒர்க் அவுட்டில்’ பல ரகங்கள் உண்டு. தற்போது பல்வேறு நாடுகளிலும் பிரபலமாகிவரும் ‘கெட்டில்பெல்’ ஒர்க் அவுட் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
‘கெட்டில்பெல்’ ஒர்க் அவுட்டை ‘வெயிட்’டான ஒர்க் அவுட் என்று அழைக்கலாம். ஆமாம், பளு தூக்கும் விளையாட்டைப் போன்றதுதான் இது. அதே நேரம், ‘கெட்டில்பெல்’ என்பது புது மாதிரியான பளுதூக்குவது. ‘கெட்டில்பெல்’லில் பயன்படுத்தும் உபகரணம், தேநீர்க் குடுவையைப் போலவே தெரிகிறது. ஆனால், இவை சிறு பாறாங்கல்லைப் போன்ற கனமான இரும்புக் குடுவைகள். பார்ப்பதற்கு கலர் கலராகக் கைப்பிடி வைத்த பந்துகள் போல இருக்கின்றன. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு எடையைக் குறிக்கின்றன. இளஞ்சிவப்பு - 8 கிலோ, நீலம் - 12 கிலோ, மஞ்சள் - 16 கிலோ, ஊதா - 20 கிலோ, பச்சை - 24 கிலோ, ஆரஞ்சு - 28 கிலோ, சிவப்பு - 32 கிலோ, சாம்பல் - 36 கிலோ.
எப்படிச் செய்வது?
இதில் ஆண்களுக்கான தொடக்க எடை 16 கிலோவிலிருந்து தொடங்குகிறது. ஒரு கைப்பிடியுடன்கூடிய இந்த கெட்டில்பெல்லைத் தூக்குவதற்கென அடிப்படையாக ‘ஸ்னாட்ச்’, ‘ஜெர்க்’, ‘லாங்க் சைக்கிள்’ ஆகிய மூன்று விதிமுறைகள் உள்ளன. ஒரு கையால் ஒரு கெட்டில்பெல்லைத் தலைக்கு மேலே தூக்கி வைத்திருக்க வேண்டும். பின்பு கால் முட்டிகளுக்கு இடையில் ஒரே அசைவில் கொண்டுவந்து, மீண்டும் தலைக்கு மேல் தூக்குவதுதான் ‘ஸ்னாட்ச்’. இதில் சற்று அலட்சியமாக எடையைத் தூக்கினாலும் உடலுக்குச் சேதம் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.
அடுத்து, ஒரு கையில் ஒரு கெட்டில்பெல்லை நெஞ்சோடு சேர்த்து வைத்திருக்க வேண்டும். பின்பு அப்படியே தலைக்கு மேல் தூக்க வேண்டும். மீண்டும் நெஞ்சோடு அணைத்துக்கொள்வதுபோலக் கீழே கொண்டுவர வேண்டும். அடுத்தது, ஒரு கையில் ஒரு கெட்டில்பெல்லைக் கால் மூட்டுகளுக்கு இடையிலிருந்து நெஞ்சுக்கு அருகே தூக்கி, அதே வேகத்தில் தலைக்கு மேல் தூக்க வேண்டும். இப்படி மூன்று விதிமுறைகள் இதில் உள்ளன. கெட்டில்பெல் வீடியோவைப் பார்க்கும்போது மனம் படபடக்கிறது. ஆனால், பழக்கமானவர்கள் சர்வ சாதாரணமாக இந்த ஒர்க் அவுட்டைச் செய்கிறார்கள்.
விளையாடவும் செய்யலாம்
கெட்டில்பெல் என்பது வெறும் ஒர்க் அவுட்டுக்கானது மட்டுமல்ல. பளு தூக்கும் விளையாட்டைப் போல இதுவும்ஒரு விளையாட்டுதான். உலக அளவில் கெட்டில்பெல் விளையாட்டுகள் வெகு பிரபலம். இந்தியாவிலும் கெட்டில்பெல் விளையாட்டாகப் பிரபலமாகி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டில் கெட்டில்பெல்லுக்கான ஆசியவிளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்றது இந்தியா. ஒர்க்அவுட்டுக்கு மட்டுமல்ல, சிறந்த திறமையாளர்கள் இதை விளை யாடவும் செய்யலாம். யூடியூபில் கெட்டில்பெல் ஒர்க்அவுட் (kettlebell workout) வீடியோக்கள் வரிசையாக அணிவகுக்கின்றன. பார்க்க விரும்புபவர்கள் யூடியூபில் ஓர் உலா சென்று வரலாம்.