

இந்த ஆண்டு கிராமி விருதை ரிக்கி கேஜ், ஃபல்குனி ஷா ஆகிய இந்திய இளைஞர்கள் தட்டிச் சென்றிருக்கிறார்கள். ரிக்கி கேஜ், பெங்களூரைச் சேர்ந்தவர். கீபோர்டு கலைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். 24 வயதுக்குப் பிறகுதான் மரபு இசையைக் கற்றுத் தேர்ந்துள்ளார். இவர், 2015-ல்‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) தொகுப்புக்காக தென்னாப்பிரிக்கக் கலைஞர் வூட்டர் கெல்லர்மேனுடன் இணைந்து ‘நியூ ஏஜ்’ என்னும் பிரிவில் கிராமி விருதை வென்றுள்ளார். இந்தாண்டும் அதே பிரிவில் ஸ்டூவார்ட் கூப்லேண்ட் என்னும் அமெரிக்கக் கலைஞருடன் இணைந்து ‘டிவன் டைட்ஸ்’ என்னும் தொகுப்புக்காக இந்த விருதை வென்றுள்ளார்.
ஃபல்குனி, மும்பையில் ஜெய்ப்பூர் கரானா மரபு இசையைக் கற்றார். பிறகு சாரங்கிக் கலைஞர் உஸ்தாத் சுல்தான் கானிடம் இசை பயின்றார். 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த இவர், அங்கு கார்ஷியாமா என்னும் இசைக் குழுவில் பணியாற்றினார். சிறந்த குழந்தைகள் தொகுப்பு பிரிவில் ‘எ கலர்ஃபுல் வேர்ல்டு’ (A Colourful World) என்னும் இசைத் தொகுப்புக்காக கிராமி விருது இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இசையுலகின் நோபல் பரிசாக மதிக்கப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் பண்டிட் ரவி சங்கர். அதன் பிறகு இதுவரை ஒன்பது இந்தியர்கள் இந்த விருதால் கவுரவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்களும் அந்த ராஜபாட்டையில் இணைந்திருக்கிறார்கள்.