யூடியூப் உலா: இளம் பெண்ணின் காமெடி தர்பார்!

யூடியூப் உலா: இளம் பெண்ணின் காமெடி தர்பார்!
Updated on
1 min read

தமிழில் ஒரே ஒரு நபர் மட்டுமே எழுதி, நடித்து, ஒளிப்பதிவு செய்து, பக்காவாகப் படத்தொகுப்பு முடித்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும் காமெடி ஸ்கெட்ச் அலைவரிசைகள் நிறைய பெருகிவிட்டன. ஆனால், இந்தப் பெரும்பாலான அலைவரிசைகள் ஆண்களால் நடத்தப்படுபவைதாம். இதுபோன்ற அலைவரிசைகளில் சில சமயம் சில கதாபாத்திரங்களாக மட்டுமே பெண்கள் வந்து போவார்கள். ஆனால், இதில்தான் தனித்து உருவாகியிருக்கிறார் சுபலக்‌ஷ்மி.

சுபலக்‌ஷ்மி நடத்தி வரும் ‘தி சீக்கி டி.என்.ஏ.’ (The Cheeky DNA) என்ற அலைவரிசையைப் பார்ப்பவர்களுக்கு சற்று பிரமிப்பு ஏற்படும். இந்த அலைவரிசையில் வெளியாகும் காணொலிகளுக்குத் தேவையான உள்ளடக்கத்தை அவர் எழுதுவதோடு அல்லாமல், அதில் வரும் பல கதாபாத்திரங்களாகவும் அவரே நடிக்கிறார். காணொலியை ஒளிப்பதிவு செய்வது, பின்னர் அதை படத் தொகுப்பு செய்வது என அத்தனை வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்கிறார். இவருடைய காணொலி உள்ளடக்கம் அனைத்துமே நகைச்சுவை பாணியிலேயே உருவாக்கப்படுகின்றன.

காணொலிகளின் அணிவகுப்பு

வழக்கமான நகைச்சுவை பாணியில் காணொலிகளை வெளியிட்டாலும் தன்னுடைய தனித்தன்மையையும் நகைச்சுவை உணர்வையும் உள்ளே புகுத்துவதன் மூலம் பார்வையாளர்களோடு ஓர் இணைப்பை ஏற்படுத்திவிடுகிறார் சுபலக்‌ஷ்மி. குறிப்பாக இவர் வெளியிடும் காணொலிகள் எல்லாமே பெண்களுக்காகப் பிரத்யேகமாக உள்ளன. அண்மைக் காலத்தில், ‘2021-இல் பி.இ’., ‘காலம்: அப்போதும் இப்போதும்’, ‘ஒவ்வொரு பக்கத்து வீட்டு ஆண்டி’, ‘சொந்தக்காரர்கள் வரும் முன் அம்மாக்கள்’, ‘அம்மாவும் பொண்ணும்’, ‘2022-ல் ஒவ்வொரு பெண்ணுக்கும் என்ன தேவை’, ‘மாலை 5 மணிக்கு பிறகு ஒவ்வொரு நாளும் என்னுடைய கணவர்’ என நகைச்சுவை ததும்பும் காணொலிகள், இவருடைய யூடியூப் பக்கத்தில் அணி வகுக்கின்றன.

நகைச்சுவை காணொலிகளோடு நின்றுவிடாமல், பெண் ஆளுமைகளுடன் நேர்க்காணல்கள், கேள்வி - பதில் போன்ற காணொலிகளும் இந்த அலைவரிசையில் காணக் கிடைக்கின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த அலைவரிசையை சுமார் 3 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். 225 காணொலிகள் உள்ள இந்த அலைவரிசை, இதுவரை 6.24 கோடிப் பார்வைகளைப் பெற்றுள்ளது.

யூடியூப் அங்கீகாரம்

யூடியூப் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அடுத்தத் தலைமுறையின் யூடியூபரை அடையாளம் காணும் வகையில் ‘யூடியூப் நெக்ஸ்ட்அப்’ என்ற போட்டி நடத்தப்படுவது வழக்கம். 2018-ஆம் ஆண்டில் நடந்த இப்போட்டியில் இந்திய அளவில் 12 பேர் தேர்வாயினர். அதில், சுபலக்‌ஷ்மியும் ஒருவர். இது அவருடைய அலைவரிசைக்கும் அவருக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்!

யூடியூப் அலைவரிசையைக் காண : https://www.youtube.com/c/TheCheekyDNAOfficial/playlists

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in