Published : 07 Jun 2014 10:42 AM
Last Updated : 07 Jun 2014 10:42 AM

ரயில்வேயின் கனிவான கவனத்திற்கு

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம். பார்ப்பதற்குச் சின்ன போர்க்களம் மாதிரி இருக்கிறது.

“சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் வழியாகத் திருப்பதி வரை செல்லும் ஃபாஸ்ட் லோக்கல் இன்னும் சிறிது நேரத்தில் பன்னிரெண்டாம் நடைமேடைக்கு வந்து சேரும்” அறிவிப்பு ஒலித்ததுதான் தாமதம், போரில் சங்கு ஊதியதும் எதிரிப் படையை நோக்கி வீராவேசமாக ஓடும் வீரர்களைப் போல ஆங்காங்கே நின்றுகொண்டு இருந்தவர்கள் பன்னிரெண்டாம் ரயில்மேடையை நோக்கி படையெடுத்து ஓடினர்.

தூரத்தில் ரயிலின் கூவல் ஒலி கேட்டதும், நாள் முழுக்க உழைத்துக் களைத்து, வாடிப் போயிருந்த முகங்களில் திடீரென்று ஒரு புத்துணர்ச்சி. வீட்டுக்குப் போகும் சந்தோஷம்! இந்தக் கூட்டத்தில் எப்படி வண்டியேறப் போகிறோம் என்று புதிய பயணிகள் மத்தியில் பதற்றம் என நவரசம் நிறைந்த முகங்கள். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் காரணமாக இருந்த அந்த ரயில், தலையில் விளக்குடன் இருளைக் கிழித்துக்கொண்டு சென்ட்ரலை நோக்கி வந்துகொண்டிருந்ததை பார்த்தபோது, என் கண்களுக்கு அது ஹீரோவாகத்தான் தெரிந்தது.

பக்கத்தில் இருந்த பெரியவரிடம், “ஏங்கய்யா... இவ்வளவு கூட்டமா இருக்கே... எப்படி இந்த டிரெயின்ல ஏறமுடியும்? அடுத்த டிரெயின்ல போகலாமே?” என்றேன். வந்துகொண்டிருந்த ரயில் மீதிருந்த பார்வையைக் கொஞ்சம்கூட விலக்காமல், முகத்தில் கடுகடுப்புடன் “வண்டி வந்து நின்னதும் கதவாண்ட போய் நில்லும்மா, தன்னால உள்ள போய்டுவ. அடுத்த வண்டி 8 மணிக்கும் இருக்கலாம்; 9 மணிக்கும் இருக்கலாம். 7:10ல போனாலே சாப்புட்டு தூங்க 12 மணி ஆகிடுது. அடுத்த வண்டின்னா அவ்ளோதான்… காலையில நாலு மணிக்கு எழுந்து வந்து கடையத் தொறக்க வேணாமா?” கேள்வியைப் போட்டு என்னை ஆச்சரியப்படுத்திவிட்டு, வியர்வையைத் துடைத்தபடி, ரயிலேறும் போருக்குத் தயாரானார்.

ரயில் வந்து நின்றதுதான் தெரியும். எல்லாப் பெட்டிகளின் கதவுகளிலும் உள்ளே ஏறுகிறார்களா, வெளியே வருகிறார்களா என்பது புரியாத வகையில் கூட்டம். “ஏம்மா... ரயில் படில ஏறி போ, என் கால் மேல ஏறி போகாத...” “சீக்கிரம் ஏறுங்க... கார்டு கொடிய ஆட்டிடப் போறாரு...” “ஆனா அவரு மட்டும் ஜாலியா தனிப் பொட்டில வராருபா...” என்று பலவிதமான குரல்கள் கலவையாக வந்து விழுந்தன.

பெட்டியின் கதவருகே கூட்டத்தோடு கூட்டமாகப் போய் நின்றது மட்டும்தான் தெரியும், கண்ணை மூடி திறப்பதற்குள் ரயிலின் உள்ளே நின்றுகொண்டிருந்தேன். நானாக ஏறவில்லை... ஏற்றியே விட்டுவிட்டார்கள். அட, அந்தப் பெரியவர் சொன்னது அக்மார்க் உண்மை.

ஒரு வழியாக உள்ளே வந்துவிட்டோம் என்று பெருமூச்சு விடுவதற்குள், ரயில் பெட்டியின் அனைத்துத் திசைகளிலும் சீட்டு பிடிக்கும் போராட்டம். நாம் இருப்பது ரயில் பெட்டியிலா சந்தையிலா என்று சந்தேகம் வருமளவுக்கு ஏக களேபரம். துண்டு, பேப்பர், சாப்பாட்டு டப்பா, செருப்பு, குழந்தை என கைக்குக் கிடைத்ததைப் போட்டு சீட்டில் இடம்பிடித்து, உட்கார்ந்துவிட்டார்கள். சீட் இருந்த இடமே தெரியாத அளவுக்கு. அதற்குள், அண்டாவில் மாட்டிக்கொண்ட சுண்டெலிக் கூட்டம் மாதிரி ‘கய்யாமுய்யா’வென ஒரே கூச்சல்.

மூன்று பேர் மட்டுமே உட்காரக்கூடிய இருக்கைகளில், ஒரு சின்னப் பையனையும் சேர்த்து நான்கரை பேர் அனுசரித்து ஒட்டிக்கொண்டு உட்காரந்து வருவதை பார்த்தபோது, இடப் பங்கீட்டை நினைத்து மனதில் லேசான பெருமிதம்.

பெட்டிக்குள் ஏறியும் சீட்டு கிடைக்காமல் தோல்வியடைந்தவர்கள், கிடைத்த இடத்தில் சரியாகக் காலூன்றி நிற்கவும் முடியாமல், ஒற்றைக் கால் தவத்துடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அடுத்த ரயில் நிலையம் வந்தது, அங்கேயும் ஒரு கூட்டம் முட்டி மோதி ஏறியது. கிட்டத்தட்ட உள்ளே இருந்த பயணிகள் அளவுக்கு வெளியிலிருந்து உள்ளே ஏறினார்கள். முன்னாடியாவது மூச்சுவிடும் அளவுக்கு இடம் இருந்தது, அதுவும் போச்சு கதைதான். அடுத்தவர் மூச்சு நம் மீது மோதும் அளவிற்குக் ‘கூட்ட்ட்டம்’ முண்டியது.

இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும், இண்டு இடுக்கில் எல்லாம் நுழைந்து ‘சமோசே’, ‘ஸ்ஸ்சூடான சுண்டல்ல்ல்’, ‘காஷ்மீர் ஆப்பிள்’ என்று அணிவகுத்து வரும் எளிய வியாபாரிகளுக்குதான் எத்தனை திறமை! உலகத் தொழிலதிபர்கள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும். நண்டுகூட நுழைய முடியாத இடைவெளியில் நுழைந்து, நிற்பவர் கால்களின் மேல் எல்லாம் நாட்டியமாடிக்கொண்டு போனார்கள், அவர்களது ஜீவனை ஓட்ட.

ஒருவர் பையில் இருந்து செய்தித்தாளை வெளியே எடுத்தார். அடுத்த ரயில் நிலையம் வருவதற்குள் அது பத்தாகப் பிரிந்து கம்பார்ட்மெண்ட் முழுவதும் போய்விட்டது.

உட்கார்ந்து வந்தவர்கள் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் போலத் தோன்றவில்லை. தினமும் சந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, இயல்பாக அரட்டையடித்துக்கொண்டும், அரசியல் பேசிக் கொண்டும், சொந்த வாழ்க்கையின் சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொண்டும் வந்தார்கள். கொஞ்சம் கூட்டம் குறைந்தது.

அருகில் நின்று கொண்டிருந்த சரவணன், தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர். சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அலுவலகம். வீடு திருத்தணி. இந்த வண்டியில்தான் தினமும் வந்து செல்கிறார். ‘ஏன் சார்? சென்னையிலே தங்கி வேலை பார்க்கக் கூடாதா என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல், “திருத்தணில சொந்த வீடு இருக்கு. அதை விட்டுட்டு, சென்னைல வாடகை வீட்ல பணத்தைக் கொட்ட இஷ்டமில்ல. சென்னைல தண்ணிக்குகூட காசு குடுக்கணும்... அதுக்கு இப்படி ட்ரெய்ன்லயே அலைஞ்சிறலாம். ஆனா எம்.என்.சி. கம்பெனி, நல்ல காலேஜ்னு எதுவுமே எங்க ஊரு பக்கம் இல்ல, எல்லாத்துக்கும் இங்கதான் வந்தாக வேண்டியிருக்கு” என்றார்.

இப்படி வந்த ரயிலில் பயணிக்கும் ஒவ்வொருவரும் வாடி வதங்கிய முகக் களையுடன்தான் இருப்பதுபோல்தான் தோன்றியது.

இந்த ரயிலில் மட்டும் அல்ல, இந்த வழியாகத் தினமும் மொத்தம் 400க்கும் அதிகமான மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றுவருகின்றன. கல்லூரி மாணவ - மாணவிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என ரயில் சேவையை மட்டுமே நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் போதுமான அளவு அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுத்துள்ளதா?

இந்த ஒற்றைக் கேள்விக்குப் பலரின் பதில்…. ‘இல்லை' என்பதுதான்.

“குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்கூட இல்லீங்க. இந்த வழியா இருக்கிற நிறைய ஸ்டேஷன்ல கழிவறை கிடையாது. அப்படியே இருந்தாலும் மூடிதான் கெடக்கு. இதனால வயசானவங்களும், பெண்களும் ரொம்ப அவஸ்தப்படறாங்க. ஆண்கள் ஒதுக்குப்புறமான இடத்துல தங்களது சங்கடத்த போக்கிப்பாங்க, பொம்பளைங்க என்ன செய்ய முடியும், சொல்லுங்க?”

காதை அடைக்கும் வகையில் தடதடவென ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் சத்தத்தையும் மீறி, இந்தப் புலம்பல்கள் ரயில்வே துறையின் காதுகளுக்குக் கேட்குமா?

இத்தனையையும் மீறி குடியிருக்கும் ஊரில் ஒரு வேலையும், வாழ்க்கையும் இல்லாமல் இந்த மக்கள் தினந்தோறும் இந்த நகரின் நரக வாழ்க்கையின் அம்சத்தை ஏற்றுக்கொண்டு நெருக்கடியில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x