டேட்டிங் செயலிகள்: உள்ளங்கையில் ஆபத்து!

டேட்டிங் செயலிகள்: உள்ளங்கையில் ஆபத்து!
Updated on
3 min read

திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் ‘லிவிங் டு கெதர்’ என்கிற மேற்கத்திய கலாச்சாரம் இன்றைய இந்திய இளம் தலைமுறையினர் இடையேயும் இருக்கிறது.

இதுபோன்ற உறவுகளுக்குப் பெரும்பாலும் பாதை அமைத்துக் கொடுக்கின்றன ‘டேட்டிங்’ செயலிகள். முன்பைவிட ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதன் மூலம் அவற்றின் மீதான மோகத்தை அறிய முடிகிறது. இன்னொரு புறம் டேட்டிங் செயலிகள் புற்றீசல் போலப் பெருகிவரும் நிலையில், அவற்றின் மூலம் உறவை வளர்த்து ஏமாற்றப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இதுபோன்ற சூழலில் டேட்டிங் செயலிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?

குவியும் டேட்டிங் செயலிகள்

தொண்ணூறுகளில் (1996) ‘காதல் கோட்டை’ படம் இளையோரைக் கட்டிப்போட்டது. பார்க்காமலேயே கடிதம் மூலம் காதல் வளர்ப்பதுதான் கதை. இந்தப் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து 1999-ல் வெளியான ‘காதலர் தினம்’ படம் இன்டர்நெட் சாட்டிங் மூலம் காதல் வலை வீசுவதையும் அதன்மூலம் காதலை வளர்க்கும் ஜோடியையும் பற்றிப் பேசியது. அப்போதுதான் இந்தியாவில் இன்டர்நெட் யுகம் தொடங்கியிருந்த காலம். பெருநகரங்களில் மட்டுமல்லாமல், சிறுநகரங்களில்கூட பிரவுசிங் சென்டர்கள் முளைக்கத் தொடங்கின. இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘இன்டர்நெட்’, ‘சாட்டிங்’, ‘டேட்டிங்’ போன்றவை எல்லாம் புதுமொழிகளாக இருந்தன. ஆனால், இன்று உள்ளங்கைக்கு உலகம் வந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட் போன்களும் அணிவகுக்கும் செயலிகளும் இளைய தலைமுறையினரைக் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

அதன் விளைவால், டேட்டிங் செயலிகளும் குவிந்துகிடக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோரில் ‘டேட்டிங் ஆப்’ என்ற பதிவிட்டாலே, நூற்றுக்கணக்கான செயலிகள் அணிவகுத்து வருகின்றன. குறிப்பாக கரோனா காலத்தில் ‘டேட்டிங்’ செயலிகள் அபரிமிதமாக வளர்ந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அண்மையில் வெளியான ‘சென்சார் டவர் இண்டெலிஜென்ஸ்’ தரவுகள் ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதை புட்டுப்புட்டு வைத்திருக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ‘டேட்டிங்’ செயலிகளில் பிரபலமாக இருக்கும் ‘டிண்டர்’ அமெரிக்காவில் பெரும்பான்மையான பங்குகளைத் தக்க வைத்திருக்கிறது. இதேபோல ‘பம்பிள்’, 'ஹிஞ்ச்' போன்ற செயலிகளின் பயன்பாடு 2019 ஜனவரியில் இருந்ததைவிட 2022 ஜனவரியில் 17 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் ‘டிண்டரி’ல் மட்டும் பயனாளர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

விளைவுகள் என்ன?

இவையெல்லாம் ‘டேட்டிங்’ செயலிகளில் முன்னிலையில் இருப்பவை. இவைதவிர இன்னும் நூற்றுக்கணக்கான செயலிகளிலும் இதே போல பயனாளர்களின் எண்ணிக்கை கூடியிருக்கும் என்பதே எதார்த்தம். அதெல்லாம் சரி, ‘டேட்டிங்’ செயலிகள் என்ன செய்கின்றன? முன்பு பிரபலமாக இருந்த யாஹூ சாட்டிங் மெசஞ்சர், ‘மேட்சிங்.காம்’ ஆகியவற்றின் அடுத்த வடிவம்தான் ‘டேட்டிங்’ செயலிகள். மெசஞ்சரில் முகம் தெரியாத ஆணுடனோ, பெண்ணுடனோ அரட்டையடிக்கலாம். அது தீவிரமடையும்போது காதலில் போய் முடியலாம். இப்போதும் கூகுள் மெசஞ்சர், ஃபேஸ்புக் சாட்டிங் செயலியும் இதைத்தான் செய்கின்றன. ஆனால், இதில் ஃபேஸ்புக் சாட்டிங் செயலியில் பேசுபவரின் புரொபைலைப் பார்க்க முடியும். இதர செயலிகளில் அது சற்றுக் கடினமான ஒன்று.

‘டேட்டிங்’ செயலிகளும் முகம் தெரியாத ஆணோ பெண்ணோ நண்பர்களாக மாறுவதற்கான தளங்கள்தான். சாதாரண ‘சாட்டிங்’ செயலிகளைவிட ‘டேட்டிங்’ செயலிகளில் வீரியம் அதிகம். டேட்டிங் செயலில் ஒரு ஆணோ பெண்ணோ சாட்டிங்கில் ஈடுபடும்போது, ‘டேட்டிங்’ சிந்தனையில்தான் அணுகுவார்கள். சாதாரண செயலிகளில் அந்த ஆபத்து கிடையாது. ‘டேட்டிங்’ தளம் என்று தெரிந்தே வருவதால், அதில் பேசும் எதிர் பாலினத்தவரின் அணுகும் முறை மனக் கிளர்ச்சியைத் தூண்டுவதாகவும் உணர்ச்சிகளின் விளையாட்டாகவும் அமையலாம். பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், நல்ல மனிதர்களின் அறிமுகமும் இதில் கிடைக்கலாம். தவறான மனிதர்களின் வலையில் விழவும் செய்யலாம். எனவே, ‘டேட்டிங்’ செயலிகளில் உஷார்தன்மை இல்லையென்றால், ஏற்படும் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் அமைந்துவிடலாம்.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

‘டேட்டிங்’ செயலிகளில் சாதாரணமாகப் பேசத் தொடங்கி அந்தரங்கத் தகவல்களைப் பகிரும் வரை உரையாடல்கள் நிச்சயமாக நீண்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம். அது, இரு பாலரையும் அடுத்த கட்ட சந்திப்புக்கு நகர்த்திச் செல்லும். சந்திப்புகள் நேரும்பட்சத்தில், அந்தப் பயணம் எப்படிப் போகும் என்பதை கணிக்க முடியாது. ‘ஏமாந்த ஃபேஸ்புக் காதலி, ஏமாற்றிய இன்ஸ்டாகிராம் காதலன்’ என்று செய்திகள் வருவதைப் போல, டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவை.

ஆனால், இதுபோன்ற டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாந்தது தெரியவந்தால் அசிங்கம் என்பதால் பலரும் அதை மறைத்துவிடுவதும் உண்டு. குறிப்பாகப் பாலியல் உறவோடு அணுகும் போக்கு இதில் அதிகம் என்பதால், பயனாளர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், இப்போது பிரபலமான ‘டேட்டிங்’ செயலிகளைத் தாண்டி ஏராளமான மோசமான ‘டேட்டிங்’ செயலிகளும் வந்துவிட்டன. மோசமான ‘டேட்டிங்’ செயலியைப் பயன்படுத்தும்போது, அதில் ஏமாறுவதற்கான சாத்தியம் அதிகம்.

‘டேட்டிங்’ செயலி பயன்பாட்டில் என்னென்ன பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்ற வேண்டும்? இது குறித்து சமூகவலைத்தள - தொழில்நுட்ப எழுத்தாளரான சைபர் சிம்மனிடம் பேசினோம். “பொதுவாக செயலிகளுக்கு என்னென்ன பாதுகாப்பு அம்சங்களைச் சொல்கிறோமோ, அவை டேட்டிங் செயலிகளுக்கும் பொருந்தும். முதலில் அது ஒரு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியா என்று பார்க்க வேண்டும். அது முக்கியம். ‘டேட்டிங்’ செயலிகளில் கூடுதலாக சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ‘டேட்டிங்’ என்பது அந்நிய கலாச்சாரம்.

அமெரிக்காவில் ‘டேட்டிங்’ செயலிகளில் நல்ல முன்னேற்றங்கள் வந்துள்ளன. ‘டிண்டர்’, ‘பம்பிள்’ போன்றவை இதில் மேம்பட்ட வசதிகளோடும் உள்ளன. பிரபலமான செயலிகளைப் பயன்படுத்தும்போதும் அவர்களுடைய ‘பிரைவசி’ கொள்கையைப் படித்துப் பார்க்க வேண்டும். என்ன மாதிரியான தகவல்கள் நம்மிடம் கேட்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இதில் குறைந்தபட்ச தகவல்களே போதுமானவை. அதையும் தாண்டி தகவல்களைக் கேட்டால், அந்தச் செயலி சார்ந்து சந்தேகப்பட வேண்டும்.

மெய்யும் பொய்யும்

எதிர்ப்புறத்தில் நம்மிடம் பேசுபவர் நமக்கு அந்நியர். எனவே, பெர்சனல் தகவல்களை பகிரக் கூடாது. நமக்குப் பரிச்சயம் ஆகும் வரை எந்தத் தகவலையுமே பகிரக் கூடாது. டேட்டிங் சந்திப்புகளாக மாறும்போது, நாம் எங்கே செல்கிறோம் என்பதை நெருக்கமானவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். முடிந்தால் உடன் ஒருவரை அழைத்துச் செல்வதும் நல்லது. பாதுகாப்பான பொது இடங்களில் மட்டுமே சந்திப்பு நடக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஆன்லைனில் அப்பாவிகளை ஏமாற்றும் போக்கு அதிகமாகவே நடக்கிறது.

இந்தியாவில் புத்தாயிரத்தில் பிறந்தவர்கள் ‘டேட்டிங்’ செயலியைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. இந்தியாவுக்கு ‘டேட்டிங்’ செயலிகளே தேவையில்லை. மேட்ரிமோனியல் செயலிகள்தான் இந்தியர்களுக்கானவை. ஆனால், தற்போது கலாச்சார மாற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையினர் ‘டேட்டிங்’ செயலியை நோக்கிச் செல்கிறார்கள். இதன்மூலம் உருவாகும் உறவை எளிதில் நம்பிவிடக் கூடாது. எப்போதும் சந்தேகப்பட வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பயனாளர் உஷாராக இருக்க வேண்டும். இதில் மெய்யும் உள்ளது,பொய்யும் உள்ளது. ஆனால், அது எப்படிச் செல்லும் என்பது பயன்படுத்தும் பயனாளரின் கையில்தான் உள்ளது” என்கிறார்.

நாளொருவண்ணம் பொழுதொரு மேனியாக தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சியைக் கொடுத்தாலும், இன்னொரு பக்கம் தீமைக்கும் இட்டுச் செல்லலாம். எதிர்ப் பாலினத்தவருடன் தனிச் சந்திப்புகளுக்கு ‘டேட்டிங்’ செயலிகள் இட்டுச் செல்லும் நிலையில், அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்துவதே யாவருக்கும் நலம்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in