ஒரே அணி, ஒரே இடம், ஒரே மாதம், ஒரே ஒரு லாரா.!

ஒரே அணி, ஒரே இடம், ஒரே மாதம், ஒரே ஒரு லாரா.!
Updated on
2 min read

எண்பதுகளில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலத்திலிருந்தே, டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தனி நபர் ஸ்கோரை அறிவதில் அவ்வளவு ஆர்வம். அப்போதெல்லாம் இந்திய வீரரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 236 ( நாட் அவுட்) என்பதுதான். அது, சுனில் கவாஸ்கர் 1983-ஆம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடித்தது. ஆனால், பிற டெஸ்ட் கிரிக்கெட்டில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் என்றால், அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேரி சோபர்ஸின் ஸ்கோர்தான். சோபர்ஸின் 365 ( நாட் அவுட்) என்ற ஸ்கோரைப் பார்த்தாலே மலைப்பு ஏற்படும். 1958-ஆம் ஆண்டில் கிங்ஸ்டனில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோபர்ஸ் விளாசியது.

கேரி சோபர்ஸ்
கேரி சோபர்ஸ்

சோபர்ஸின் இந்த அதிகபட்ச ஸ்கோரை யார் முந்துவார் என்ற பட்டிமன்றங்கள் நடப்பதெல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்த சங்கதிகள். சோபர்ஸ் விளாசிய 365 ரன்னை அதே ஆண்டில் இங்கிலாந்தின் ஹட்டன், ஓவலில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முந்த வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், 364 ரன்களை அவர் அடித்திருந்தபோது துரதிர்ஷ்டமாக அவுட் ஆனார். அதனால், சோபர்ஸின் சாதனைய முறியடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு பல வீரர்கள் 300 ரன்களைத் தாண்டி ரன்களைக் குவித்தபோதும் சோபர்ஸின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. ஆனால், 1990- ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரையன் லாராவால், அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி நான்கே ஆண்டுகளில் அந்தச் சாதனையை லாரா படைத்தார். 1994-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக செயின்ட் ஜான்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் லாரா 375 (நாட் அவுட்) ரன்களைக் குவித்து, சோபர்ஸின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். சோபர்ஸ் போல லாராவின் சாதனையும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதனை என்றாலே அது ஒரு நாள் உடைபடும் அல்லவா? தொண்ணூறுகளில் உருவான சில தலைசிறந்த கிரிக்கெட்டர்கள், அதை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள். 2003-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் பெர்த் நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 380 ரன்களைக் குவித்தார். அதோடு லாராவின் 375 ரன் சாதனையையும் ஹைடன் தகர்த்தார்.

மேத்யூ ஹைடன்
மேத்யூ ஹைடன்

ஆனால், இதில் ஆச்சரியம் என்னெவென்றால், மேத்யூ ஹைடனின் சாதனை ஓராண்டுக்கூட நீடிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் குவிப்பாளர் மேத்யூ ஹைடன் என்ற சாதனை வெறும் 6 மாதங்கள் மட்டுமே நீடித்தது. 2004-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக செயின்ட் ஜான்ஸில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் லாரா, மேத்யூ ஹைடனின் 380 ரன் என்ற சாதனையை முறியடித்தார். அதோடு லாரா 400 ரன்கள் எடுக்கும் வரை வெஸ்ட் இண்டீஸ் அணி காத்திருந்தது. லாரா 400 ( நாட் அவுட்) அடித்த பிறகு ஆட்டத்தை டிக்ளேர் செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. கடந்த 18 ஆண்டுகளாக லாரா அடித்த 400 ரன்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக தொடர்கிறது. இடையில் 2006-ஆம் ஆண்டில் கொழும்புவில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மகிளா ஜெயவர்த்தனே 374 ரன்கள் விளாசி அவுட் ஆனார். லாராவின் சாதனையை முந்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜெயவர்த்தனே ஏமாற்றினார். அதன் பிறகு ஒரு வீரரும் அந்த மைல்கல்லை தாண்டும் அளவுக்கு விளையாடியதில்லை.

லாராவின் 375 ( நாட் அவுட்), 400 ( நாட் அவுட்) ரன்கள் விளாசியதில் ஓர் ஆச்சரியமும் அடங்கியுள்ளது. லாரா இந்த இரு முறையும் சாதனைப் படைத்தது இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான். செயின்ட் ஜான்ஸ் மைதானத்தில்தான் இரு முறையும் சாதனையைப் படைத்தார். இரண்டு முறையும் லாரா சாதித்தது ஏப்ரல் மாதத்தில்தான். லாராவின் சாதனை எப்போது உடைப்படும் என்று தெரியாது. அதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஒரு லாராதான் - சாதனை நாயகன்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in