

இன்று எல்லாவற்றுக்கும் மொபைல் செயலிகள் வந்துவிட்டன. அணிவகுக்கும் செயலிகளுக்கு மத்தியில் அகதிகளுக்கான செயலியும் வந்துவிட்டது. ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் சூழலில் இந்தச் செயலியை இந்திய மாணவர் ஒருவர் உருவாக்கி காட்டியிருக்கிறார்.
போரே நடக்கக் கூடாது என்ற நாகரிகக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால், மனித குலத்தின் எண்ணங்களுக்கு அப்பால் சில தனி மனிதர்களின் விருப்பு, வெறுப்புகளால் போர்கள் துரதிர்ஷ்டவசமாக நடைபெறவும் செய்கின்றன. அந்த வகையில் பிப்ரவரி 24 அன்று ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. போர் தொடங்கி ஒன்றை மாதத்தைக் கடந்த பிறகும், அது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாமல் நீண்டுக்கொண்டே செல்கிறது.
அகதிகளுக்கான செயலி
போர் என்றாலே அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவது வாடிக்கை. இந்தப் போரால் ரஷ்யாவைவிட உக்ரைன்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. போரின் விளைவால், இதுவரை உக்ரைன் நாட்டிலிருந்து 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறிவிட்டனர். இவர்கள் அண்டை நாடுகளிலும் வெவ்வேறு நாடுகளிலும் தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா.வின் ஆய்வறிக்கை கூறுகிறது. இப்படி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியவர்களில் பெண்களும், குழந்தைகளும்தான் மிக அதிகம்.
அகதிகளாக வெளியேறிவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாடுகள் உதவி வருகின்றன. போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக செல்லும் உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என்று இந்தியாவைச் சேர்ந்த 15 வயது மாணவர் தேஜாஸ் ரவிசங்கரும் விரும்பினார். அதன் அடிப்படையில் தேஜாஸ், ‘ Refuge’ என்ற பெயரில் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்தச் செயலியை மொபைல் போனில் பதிவிறக்கும் செய்துகொண்டால் போதும். உக்ரைன் அகதிகள் தங்களுடைய தேசிய அடையாளத்தை மற்றவர்களிடம் உறுதி செய்து காட்ட முடியும்.
வழிகாட்டும் செயலி
அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகில் எங்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்ற விவரங்களை துல்லியமாக அறியலாம். மேலும் அருகே அகதிகளுக்கு உதவும் மையங்கள் எங்கே இருக்கின்றன, அங்கு செல்ல வழி போன்றவற்றையும் இந்தச் செயலி வாயிலாக அறியலாம். 12 மொழிகளில் செயலியைப் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. இந்தச் செயலியின் முக்கியத்துவத்தை கருதி கூகுளும் தன்னுடைய ப்ளே ஸ்டோரில் ‘Refuge’ செயலியை இணைத்துவிட்டது.
தேஜாஸ், இந்தச் செயலியை வெறும் இரண்டு வாரங்களில் உருவாக்கி காட்டியிருக்கிறார். ஒரு கைதேர்ந்த மென்பொருள் நிபுணரால்கூட ஒரு செயலியை உருவாக்க மாதம் பிடிக்கும். ஆனால், இரு வாரங்களில் செயலியை உருவாக்கி, கடல் கடந்து மனிதநேயத்தை வெளிப்படுத்திய தேஜாஸுக்கு பாராட்டுகள் குவிகின்றன.