

கரோனா பெருந்தொற்றாலும் அதன் விளைவாலும் மக்களை ஓரிடத்தில் கூட்டாகக் காண்பதுகூட கடந்த இரண்டு ஆண்டுகளாக அரிதானது. கரோனாவின் தாக்கம் இன்று ஓரளவு குறைந்துள்ள நிலையில், பொதுவெளியைச் சுவாசிக்க தைரியமாக மக்கள் வரத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு, புதுச்சேரியில் நடைபெற்ற ‘ரெண்டேஸ் வவுஸ்’ திருவிழா இப்பகுதி மக்களுக்கு பாதை அமைத்துக்கொடுத்தது.
பிரெஞ்சில் ‘ராண்டேவூ’ என்றால் சந்திப்பு என்று அர்த்தம். வசந்தக்காலத்தை வரவேற்க ‘பிரெஞ்சு ரெண்டேஸ் வவுஸ் திருவிழா’வை பிரெஞ்சு துணை தூதரகம் புதுச்சேரியில் ஒரு வாரம் கொண் டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில் கரையாதோர் யாருமில்லை. இந்தியா-பிரான்ஸ் நாடுகள் இடையே நட்புறவுக்கு அடையாளம் பல உண்டு. தற்போது கரோனா காலத்தைத் தாண்டி, அந்த நட்புணர்வு ஒரு திருவிழாவாக வெளிப்பட்டிருக்கிறது.
பொம்மை நடனம்
பிரான்ஸ் நாட்டவருக்கு எப்போதும் கலை, இசை, நாடகம், இயற்கையை ரசித்தல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. இந்தத் திருவிழாவின் முதல் நிகழ்வாக அமைதியான கடலில் பாய்மர அணிவகுப்பு நடைபெற்றது. கடல் அலை தாலாட்ட, படகுகள் அசைந்தாட, கரையில் இருந்து தரிசித்தோர் மனம் அதில் லயித்தது.
அதன் தொடர்ச்சியாக ஞாயிறுவிடுமுறை நாளின் மாலையில், கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் ஆச்சரியப் படுத்தியது பிரம்மாண்ட பொம்மை நடன நிகழ்வுகள். தமிழ் திரையிசைப் பாடல்களில் காதல், உற்சாகம், துள்ளல் எனப் பல தமிழிசைப் பாடல்களை நம்மூர் இசைக்கலைஞர்கள் கடலோர சாலையில் வாசிக்க, வெளிநாட்டவர்கள் பிரம்மாண்ட பொம்மைக்குள் நுழைந்து அழகாய் நடனத்தை வெளிப்படுத்த பலரும் சிறுகுழந்தையாய் மாறி அதிசயத்து பார்த்தார்கள்.
பிரம்மாண்ட பொம்மைகள் ஒவ்வொன்றின் எடையும் 50 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆனால், பொம்மை தலையில் பெரிய ஆடைக்குள் நுழைந்து நடன அசைவை வெளிப்படுத்தினர்கள். அத்துடன் அச்சு அசலாய் நம்மூர் மெட்டுக்கு, இசைக்கு ஏற்ற நடனத்தை வெளிப்படுத்தியது கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தது.
ஒரு புது உணர்வு
புதுச்சேரியில் முதன் முறையாக இந்த நிகழ்வைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “இதுவரை இதுபோன்ற நிகழ்வை பார்த்ததில்லை. பிரம்மாண்ட பொம்மைகள் தமிழிசை பாடல்களுக்கு நடனமாடி வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் புதுச்சேரி அரசு சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.
அதையடுத்து அடுத்தடுத்த நாட்களில் இசை, நாடகம், நவீன சர்க்கஸ், பொம்மலாட்டம் என மொத்தம் 12 நிகழ்வுகள் புதுவை வாசிகளின் கண்களுக்கு விருந்தாயின. ‘இதுதான் முடிவா?’ என்ற நாடகம், குழந்தைகளை மயக்கி நடனமாட வைத்த ‘தி லிட்டில் பிரின்சஸ்’ நிகழ்ச்சி, ‘அனலெம்மா’ என்ற நவீன சர்க்கஸ் நிகழ்வும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது.
வெளிநாடு செல்லாமலேயே அதுபோன்ற ஓர் உணர்வை இந்த நிகழ்வுகள் புதுச்சேரியில் ஏற்படுத்தி விட்டன என்பதே உண்மை.
புதுச்சேரியில் நடந்த விழாவின் வீடியோவைக் காண: https://bit.ly/3E2PqAV
கடற்கரைத் திருவிழா பராக்!
கரோனா கொடுங்காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறார்கள் மக்கள். அதனால்தானோ என்னவோ வழக்கத்தைவிட கூடுதலாகவே புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் கர்நாடகா, ஆந்திரா, தமிழகப் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்குகிறார்கள்.
புதுச்சேரி கடற்கரைகளை சுற்றுலாத்துறை மேம்படுத்தியுள்ளது. புதுச்சேரி காந்தி சிலை கடற்கரைச்சாலையைத் தாண்டி, வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரை, புதுக்குப்பம் மணற்குன்று கடற்கரை, வீராம்பட்டினம் ரூபி கடற்கரை, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை என கடற்கரைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட கடற்கரைகளைச் சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் முதன் முறையாக ஏப்ரல் 13 முதல் 16 வரை கடற்கரை திருவிழா நடக்கிறது.
காந்தி சிலை கடற்கரை, பாண்டி மெரினா கடற்கரை, சுண்ணாம்பாறு பேரடைஸ் கடற்கரை, காந்தி திடல் கைவினை அரங்கம் ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள், கடல்சார் விளையாட்டுகள், கடல் உணவு விற்பனை, மேலை நாட்டு இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சி, கருத்தரங்குகள், கட்டுமரப்படகு போட்டி, மிதிவண்டி மாரத்தான் போட்டி, கடற்கரை வாலிபால் போட்டி, பட்டம் விடும் நிகழ்ச்சி, அதிகாலையில் மீன் உணவு தேடல், இசை ஜிம்னாஸ்டிக், உறியடி, ஃபேஷன் ஷோ எனப் பல நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் 13 - 16 வரை புதுச்சேரியில் இருப்பவர்களுக்கு கண்கவர் நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. நீங்கள் புதுவை புறப்படத் தயாரா?