பொருள்தனைப் போற்று 14: காணாமல் போன பணப் பெட்டி!

பொருள்தனைப் போற்று 14: காணாமல் போன பணப் பெட்டி!
Updated on
3 min read

‘என்னங்க பெரிய பொருளாதாரம்? எவ்வளவு பணம் வந்தது? எவ்வளவு செலவு செஞ்சோம்? எவ்வளவு மீதி அல்லது பற்றாக்குறை? இவ்வளவுதானே?'

அப்படியா? இவ்வளவுதானா?

‘ஆமாம். பணம். அதுதான் ஆரம்பம், முடிவு எல்லாம். பணம் இல்லாம பொருளாதாரம் ஏது?'

ஒருவகையில் இது சரி. ஆனால் ஒன்று தெரியுமா? உலகம் ‘பணம் இல்லாப் பொருளாதாரம்' என்கிற இலக்கை நோக்கியே பயணிக்கிறது.

பணமல்ல... மதிப்பு

‘என்னது? பணம் இல்லாத பொருளாதாரமா? அது எப்படி?'

பணம் அல்ல. பணத்தின் மதிப்புதான் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது.

ஏற்கெனவே இந்தத் திசையில் நீண்ட தூரம் வந்துவிட்டோம். கணக்குகளில் பண மாற்றம் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. என்ன நடக்கிறது?

கையால் தொடாமல், கண்ணால் பார்க்காமலேயே பணம் கை மாறுகிறது. யாரும் கொடுக்கவும் இல்லை. யாரும் வாங்கவும் இல்லை. கணக்குப் புத்தகத்தில் ஒரு குறிப்பு (entry) எழுதி, மாற்றி விடுகிறோம். அதாவது, பணத்தின் மதிப்பு மட்டும் மடைமாற்றி விடப்படுகிறது.

கடன் அட்டை, ஏ.டி.எம். அட்டை, மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ஈ-பேமெண்ட் என இவை எல்லாம் என்ன?

கையில் பணம், அவசியம் இல்லை. கணக்கில் இருந்தால் போதும்.

இப்போது நாம் தொடக்க நிலையில் இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் என்னவெல்லாம் சாத்தியம் ஆகலாம்?

நீண்டதூர ர‌யில், பேருந்துகள், நடைபாதைக் கடைகள் தவிர்த்த பிற அங்காடிகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, டவுன் பஞ்சாயத்து, திருமண மண்டபங்கள், இவ்வளவு ஏன் கோயில் உண்டியலில்கூட, பணம் ஏற்றுக்கொள்ளப்பட‌ முடியாமல் நிராகரிக்கப்படலாம்!

பூ, பழம், காய்கறி போன்றவை கூட ‘நெட்-பாங்கிங்' முறையில் நடைபெறும் காலமும் வரலாம். அப்போது என்ன ஆகும்? யார் கையிலும் பணம் இருக்காது. ஆனாலும், பணம் கை மாறிக்கொண்டே இருக்கும்.

ஸ்வைப் அண்ட் ஸைன்

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம், வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ‘ஜன் தன் யோஜனா' திட்டம் வடிவமைக்கப்பட்டு நாடெங்கும் பல லட்சக் கணக்கான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சாமான்யர்களும், நிதி அதிகாரம் பெற வேண்டும் என்கிற உயரிய நோக்கம் இதில் அடங்கியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

‘டிஜிட்டல் இந்தியா' போன்ற பல திட்டங்களும், பணமில்லாப் பொருளாதாரத்தையே முன்னிறுத்துகிறது. இது ஒன்றும் புதிய எண்ணமோ கருத்தோ அல்ல.

‘பண்ட மாற்று முறை' என்று படித்தோமே, அதுவேதான். வேறு பெயரில் வேறு வடிவில், பரிணாம வளர்ச்சி பெற்றுப் புதியதுபோல‌ விரிவடைந்துகொண்டிருக்கிறது. ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' என்பது இதுவன்றி வேறு என்ன?

வங்கியில் பணம் இருப்பு, வங்கிப் பரிவர்த்தனைகள், க‌டந்த கால நிதி நடவடிக்கைகளின் வரலாறு, வாங்கிய கடன்கள், திருப்பிச் செலுத்திய தொகை என்று எல்லாத் தகவல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கான ‘நோடல் பாயிண்ட்', உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தப்பித்து விட முடியாத அளவுக்கு ‘பின்தொடரும்' (ட்ராக்கிங்) வணிகப் பரிமாற்றங்கள், வர்த்தகத் தொடர்புகள் போன்றவை நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளாமலேயே சாத்தியமாகிக் கொண்டிருக்கின்றன.

பொருளாதாரத்தின் முகம் மாறிக்கொண்டு வருகிறது. கையில் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, ‘பத்திரம், பத்திரம்' என்று சொல்லிக் குழந்தைகளைக் கடைக்கு அனுப்பிப் பழக்கிய காலம் மலையேறிவிட்டது. இனி ‘ஸ்வைப்' செய்யவும், ‘சைன்' செய்யவும் மட்டும் சொல்லித்தந்தால் போதுமானது.

அடுத்தடுத்த தலைமுறையினர், ‘பணம்னா என்ன?' என்றுகூடக் கேட்டாலும் கேட்கலாம்.

எல்லாமே வங்கி

பணம் இல்லாப் பரிவர்த்தனை, நன்கு வளர்ந்த, ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது. இதை வரவேற்கத் தகுந்த முன்னேற்றமாகச் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு.

பணப் பதுக்கல், பணத் திருட்டு ஆகியன மறைந்து போகும். கணக்கில் வராத பணம், சுழற்சியில் இருக்கச் சாத்தியமே இருக்காது. யாரிடமிருந்து யாருக்கு, எவ்வளவு பணம், எந்த நோக்கத்துக்காகப் போகிறது போன்றவற்றை ஓரளவுக்காவது அறிந்துகொள்ள முடியும்.

பணப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும்.

சந்தேகத்துக்கிடமான நிதிப் பரிவர்த்தனைகள் மிகப் பெரிய அளவில் குறையும்.

ஊழல், லஞ்சம், முறைகேடுகள் ஆகியன எல்லாம், பணத்தை அடிப்படையாக வைத்தே நடைபெறுகின்றன. யாருமே, காசோலை வடிவில் லஞ்சம் பெறுவதில்லை. வங்கிக் கணக்கு மூலம் ஊழல் பணம் கை மாறுவதில்லை. ஊழல் முறைகேடுகளைத் தடுப்பதில், பணம் இல்லாப் பரிவர்த்தனைகள் பெரிதும் உதவும்.

யாரிடமும் நோட்டுகளாகப் பணம் இல்லாத போது, பணத்துக்காக நடைபெறுகிற கொலை, கொள்ளை, அநேகமாக அறவே இல்லாமல் போய்விட வாய்ப்பு ஏற்படுகிறது.

எவரையேனும் மிரட்டிப் பணம் பறிப்பதாக இருந்தாலும், ஒரு கணக்கிலிருந்து வேறொரு கணக்குக்கு மாற்ற மட்டுமே முடியும் என்கிற போது, மாட்டிக்கொள்ள நேரிடும். அல்லவா?

வணிகர்களின் கணக்குகள் துல்லிய மானதாக இருக்கும். எவ்வளவுக்குக் கொள்முதல், எவ்வளவுக்கு விற்பனை, எவ்வளவு லாபம் உள்ளிட்ட விவரங்கள் எல்லாம் பதிவாகியிருக்கும்.

பொய்க் கணக்கு எழுதி, வருமானத்தைக் குறைக்கவோ மறைக்கவோ இயலவே இயலாது. நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல் கல்வி நிலையங்களில் எந்தக் கட்டணமும் பெற முடியாது. கோயில் திருப்பணிகளுக்கு வழங்கும் உபயத் தொகைகள், நேரடியாகச் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் போய்விடும். ‘கமிஷன்', ‘இனாம்' தருகிற வேலையெல்லாம் நடக்கலாம். ஆனால், முறையாக வங்கிக் கணக்குகள் மூலமே சாத்தியம். சுற்றுச்சூழல் ரீதியிலும் ஒரு நன்மை இருக்கிறது. பணத்தை உருவாக்கும் காகிதத்துக்காக மரங்கள் வெட்டப்படுவது நின்றுவிடும்.

‘அட்டை'களின் காலம்

உண்மையிலேயே, காகிதப் பணம் இல்லாத நிலை வரப் போகிறதா? ஆமாம். எவ்வளவு சீக்கிரம் என்பதுதான் கேள்வி.

‘சோற்றுக்கே வழியில்லை. இதில், நெட்-பாங்கிங் ஒரு கேடா?'

கணினி வந்தபோதும் இப்படித்தான் கேட்டார்கள். ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட போதுகூட எதிர்த்தவர்கள் உண்டு. எதிர்க் கேள்வி கேட்கிறவர்கள், நினைவில் கொள்ள வேண்டிய அம்சம், இந்தத் திட்டங்கள் எல்லாம், இன்றைய இளைஞர்களுக்குக்கூட அல்ல, அதற்கும் அடுத்த தலைமுறையினருக்கு.

சரி. நாம் செய்ய வேண்டியது என்ன? ஒன்றே ஒன்றுதான்.

பணத்தைக் கையாள்வதில், தற்போதுள்ள நடைமுறையைச் சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டு, அட்டைகள், நெட்-பாங்கிங் ஆகியவற்றுக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வோம்.

கலவரப்பட வேண்டாம். மகன், மகளை விடுங்கள். பேரன், பேத்திகளைக் கூப்பிட்டுக் கேளுங்கள். கேட்ட மாத்திரத்தில், நொடியில் தெளிவாகச் சொல்லித் தருவார்கள். ஆம். இது, பேரன் பேத்திகளின் காலம்!

தலைமுறை தாண்டிப் பயன்படும் நவீனத் தொழில்நுட்பத்தில், பணிகள் எளிதாகும். அரசின் திட்டங்களுக்கான செலவுத் தொகை இனி, ‘இ-பேங்கிங்' மூலம் மட்டுமே வழங்கப்படும்.

(வளரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in