Published : 22 Apr 2016 11:55 AM
Last Updated : 22 Apr 2016 11:55 AM

பொருள்தனைப் போற்று! 13- வாங்க... பங்கு வாங்க!

‘ஒரு வியாபாரம் தொடங்கலாம்னு இருக்கேன். ரொம்ப நல்லா வரும்னு தோணுது. என்ன, அதுக்குத் தேவையான அளவுக்கு முதல் போட ஆள்தான் கிடைக்க மாட்டேங்கறாங்க'.

நமக்குத் தெரிந்த பழக்கப்பட்ட, நாமே அனுபவித்த பிரசினைதான். தற்போது மத்திய‌ அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற ‘ஸ்டார்ட்-அப்', 'ஸ்டேண்ட்-அப்' திட்டங்கள், இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கியவைதான். இவை போதுமா? போதாது!

தொழிலுக்கான முதலீடு, கைவசம் பணமிருக்கிற மக்களிடமிருந்து வர வேண்டும். அங்குதான் ஏராளமான பணம் புரட்ட முடியும். அதற்கு வழி வகுப்பதுதான் ‘பப்ளிக் லிமிடெட்' நிறுவனங்களின் பங்கு முதலீடு (Share Capital) வழிமுறை.

முதலீட்டுக்கு முன்அனுமதி

‘நமது இந்தியா லிட்'. ஒரு ‘பப்ளிக் லிமிடெட்' நிறுவனம். பங்கு முதலீடாகப் பத்து லட்சம் திரட்ட வேண்டும். ஒவ்வொன்றையும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஆயிரம் பங்குகளாக வெளியிடத் தீர்மானிக்கிறது.

‘உடனே, விளம்பரம் தந்து பங்குகளை விற்றுவிட வேண்டியதுதானே?'

அப்படியெல்லாம் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்' என்று செயல்பட முடியாது. பிறகு? எப்படிச் செய்வது? பதிவாளர் அலுவலகம் என்ற ஒன்று இருக்கிறது.

‘அதான் தெரியுமே. ஏதாவது வீடு, நிலம் வாங்கணும், இல்லை விக்கணும்னா, அதுக்கான பத்திரங்களைப் பதிவு செய்யறமே, அந்த இடம்தானே?'

ஆமாம். ஆனால், சொத்துப் பரிமாற்றங்களைப் போலவே இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றையும் பதிவு செய்தாக வேண்டும். அப்போதுதான் சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

நிறுவனம் தொடர்பான பத்திரங்களைப் பதிவு செய்ய, தனியே ஒரு அலுவலகம் இருக்கிறது. இது, மத்திய அரசின், நிறுவன விவகார அமைச்சரவை (Ministry of Company Affairs) கீழ் வருகிறது.

இந்தப் பதிவாளரிடம், முறையாக அனுமதி பெற வேண்டும். எப்போது நிதி தேவைப்படுகிறதோ, அந்த நேரத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறும் முறை இல்லை.

மாறாக, முன்னதாகவே இந்த அளவுக்கு முதலீடு தேவைப்படலாம் என்று கணித்து, அந்த அளவுக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். இதுதான், 'அனுமதிக்கப்பட்ட முதலீடு' (Authorised Capital).

'நமது இந்தியா' நிறுவனம் திரட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள தொகை,

அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருந்தால், பங்குகளை வழங்குவதற்கான (Issue of Shares) பணிகளில் இறங்கி விடலாம்.

அளவுக்கும் அதிகமாக இருந்தால்? பதிவாளரிடம் விண்ணப்பித்து, முதலீட்டு விரிவாக்கத்துக்கு (Enhancement of Capital) அனுமதி பெற்றாக வேண்டும்.

சரி. அனுமதி பெற்றாகி விட்டது. இனி? பங்குகள் எப்படி விற்கப்படுகின்றன?

திரும்பக் கிடைக்கும் கட்டணம்

இத்தனை பங்குகள் இந்த விலையில் பொது மக்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்படும். இந்தப் பங்குகளின் மொத்த மதிப்பு ‘அளிக்கப்பட்ட முதலீடு' (Issued Capital).

ஒரு பங்கின் மொத்தப் பணமும் அப்போதே கேட்கப்படுவதில்லை. ஒரு பங்கின் மதிப்பின் எவ்வளவு? ஆயிரம் ரூபாயா? பொதுவாக, இதனை நான்கு பகுதிகளாகப் பிரித்து, அனுப்பச் சொல்வார்கள்.

இப்படி இருக்கலாம்: விண்ணப்பத்துடன் - 200, ஒதுக்கீட்டின் மீது - 300,

முதல் அழைப்பு - 300, 2-வது அழைப்பு - 200. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம்.

பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்து விட்டு ஒருவர், நிறுவனத்தின் பங்குகளை வாங்க விருப்பம் கொள்கிறார். அதற்கான விண்னப்பத்தையும், ஒரு பங்குக்கு 200 ரூபாயும் செலுத்த வேண்டும். ஒருவரே பத்துப் பங்குகளை வாங்க விரும்பினால்? விண்ணப்பத்துடன் கட்டணம் 2,000 ரூபாய்.

நன்றாக நினைவில் கொள்ள வேண்டிய செய்தி, விண்ணப்பக் கட்டணம் அல்ல. விண்ணப்பத்துடன் கட்டணம். ‘அப்படின்னா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?'

‘விண்ணப்பத்துக்கான' கட்டணம். இது திரும்பக் கிடைக்காது. ‘விண்ணப்பத்துடன்' கட்டணம்? கட்டாயம் திரும்பக் கிடைக்கும்.

இதை இப்படியும் சொல்லலாம். அஞ்சல் அலுவலகம் போகிறோம். ஒருவருக்கு நூறு ரூபாய் அனுப்புகிறோம். மணியார்டர் ஃபார்ம், ஒரு ரூபாய். மணியார்டர் கட்டணம், பத்து ரூபாய். இத்துடன், நாம் அனுப்புகிற நூறு ரூபாய். ஆக, 111 ரூபாய் செலுத்துகிறோம். இதில் எவ்வளவு போய்ச் சேரும்? நூறு ரூபாய் மட்டுமே. அதுதான், ‘விண்ணப்பத்துடன்' செலுத்திய தொகை.

ஒரு ரூபாய்? ‘விண்ணப்பக் கட்டணம்'. (பத்து ரூபாய் என்பது சேவைக் கட்டணம். பங்கு வழங்கலில் இந்தக் கட்டணம் இல்லை.)

அனைவருக்கும் பங்கு?

விண்ணப்பித்த அனைவருக்குமே பங்குகள் கிடைக்குமா? ஆயிரம் பங்குகள் விற்பனைக்கு வருகின்றன. 500 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் வருகின்றன. அப்போது? ‘வந்த வரைக்கும் லாபம்' என்று செயல்பட முடியாது. ஆயிரம் பங்குகளுக்கு மட்டுமே பணம் பெற்றுக் கொள்ள முடியும்.

‘முதலில் வந்தவருக்கு முன்னுரிமை' அடிப்படையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்படும். மற்றவர்களுக்கு? விண்ணப்பக் கட்டணம் முழுவதுமாகத் திரும்பி வந்து சேரும்.

பங்கு கிடைக்காதவர்கள், தமது பணத்தைத் திருப்பித் தரக் கேட்டு விண்ணப்பிக்க வேண்டியது இல்லை. நிறுவனமே தானாக முன்வந்து, அனுப்பியாக வேண்டும்.

பொது மக்கள் விண்ணப்பித்த, அவர்கள் ‘சந்தா' கட்ட ஒப்புக் கொண்ட தொகை, அனுசரிக்கப்பட்ட முதலீடு (Subscribed Capital).

ஒரு நிறுவனம், ஒரு பங்கின் ஆயிரம் ரூபாயையும் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வதில்லை. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது கேட்டு வாங்கிக்கொள்ளும்.

விண்ண்ணப்பத்துடனும் ஒதுக்கீட்டின் போதும் பணம் பெற்றுக்கொள்ளும்.

அதன் பிறகு, முதல் அழைப்பில் சிறிதும், மீதிப் பணத்தை இரண்டாவது, இறுதி அழைப்பிலும் பெறுவதுதான் பொதுவான நடைமுறை.

ஒரு பங்கு மதிப்பில், எவ்வளவு செலுத்த வேண்டும் என்று தனது பங்குதாரர்களுக்கு, நிறுவனம் அழைப்பு விடுக்கிறதோ, அது, 'அழைக்கப்பட்ட முதலீடு' (Called-up Capital).

பல சமயங்களில் பங்குதாரர்களிடம், விண்ணப்பிக்கும்போது இருக்கும் ‘ஜோரு', அழைப்பின்போது இருப்பதில்லை. அழைப்பு வந்த உடனேயே அத்தனை பேரும் சந்தா அனுப்பிவிடுவதில்லை.

பங்குதாரர்கள், எந்த அளவு பணம் செலுத்துகிறார்களோ, உண்மையாகவே எவ்வளவு பணம் வந்து சேர்ந்து இருக்கிறதோ, அது, ‘அடைந்துவிட்ட முதலீடு' (Paid-up Capital).

ஐந்து நிலைகள்

ஆக, முதலீட்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடு, அளிக்கப்பட்ட முதலீடு, அனுசரிக்கப்பட்ட முதலீடு, அழைக்கப்பட்ட முதலீடு மற்றும் அடைந்துவிட்ட முதலீடு என‌ ஐந்து நிலைகள் உள்ளன.

10 கோடி ரூபாய் பங்கு முதலீடு திரட்ட அங்கீகாரம் இருக்கிறது என்று கொள்வோம். அது முற்றிலுமாக வழங்கப்பட்டுவிட்டது. பங்குதாரர்கள், முழுமையாகச் செலுத்தி விட்டார்கள். பத்து கோடி ரூபாயும் வந்து சேர்ந்துவிட்டது. இது ‘முழுவதுமாக அடைந்துவிட்ட முதலீடு' (Capital fully paid-up).

இதற்கு என்ன பொருள்? மேற்கொண்டு முதலீட்டுக்கு வழி இல்லை என்பதுதான்.

பங்கு முதலீடு பற்றிய இவ்விளக்கத்தை, பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் உடையவர்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பங்கு முதலீடு பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல், ‘பங்குகளில் முதலீடு செய்கிறேன் பேர்வழி' என்று யாரும் இறங்க வேண்டாம்.

ஒரு முன்னேற்றத்தைக் கவனித்தீர்களா? ‘மைக்ரோ' பொருளாதரத்திலிருந்து, ‘மேக்ரோ'வுக்கு நாம் நகர்ந்து வந்து விட்டோம்.

தத்துவங்களிலிருந்து விடுபட்டு, தற்போது நடைமுறைப் பொருளாதாரத்துக்குள் நுழைந்துவிட்டோம். நடைமுறையில், பொருளாதாரம் என்றாலே, பணம்தானே? ஆனால், உண்மை என்ன தெரியுமா? பணம் இல்லாப் பொருளாதாரம் நோக்கித்தான் நாம் விரைந்துகொண்டு இருக்கிறோம்.

பணமே இல்லாமலா? அது எப்படி?

(வளரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x