

கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு சிலர் ஐந்துக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 1996-ல் பாகிஸ்தான் வீரர் ஜாவித் மியான்தத் ஆறு உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கேற்ற முதல் வீரரானார். இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அந்தச் சாதனையை 2011-ல் சமன் செய்தார். ஆண்கள் மட்டுமே படைத்திருந்த இந்தச் சாதனையைத் தற்போது மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் கேப்டன் மிதாலி ராஜும் படைத்திருக்கிறார். 2000, 2005, 2009, 2013, 2017 என ஏற்கெனவே 5 முறை உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியிருந்த மிதாலி ராஜ், தற்போது ஆறாவது முறையாக விளையாடி மியான்தத், டெண்டுல்கர் சாதனையைச் சமன் செய்திருக்கிறார்.
வீடு தேடி வரும் தோசை
ஒரு சைக்கிள், அதிலேயே சிறிய காஸ் ஸ்டவ்,மாவு, காய்கறிகள், மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள். மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசனின் அடையாளம் இதுதான். கடந்த 26 ஆண்டுகளாக சைக்கிளில் சுற்றியபடி, வாடிக்கையாளர்கள் முன்னிலையிலேயே சுடச் சுடச் தோசையைச் சுட்டுத் தருவதுதான் இவருடைய சிறப்பு. பல ஆண்டுகளாக சைக்கிளில் சுற்றித் தோசை சுட்டு வியாபாரம் செய்து வந்தாலும் இவர் தெருவில் நின்றபடி தோசை சுட்டுத் தரும் வீடியோ அண்மையில்தான் வைரலானது. தெருவில் சுற்றியே ஒரே நாளில் நூறுக்கும் மேற்பட்ட தோசைகளை இவர் சுட்டுத் தள்ளுகிறார். குறிப்பாக இவர் சுடும் பீட்சா தோசை ஸ்டைலே தனிதான். ரூ.35 முதல் ரூ.100 வரை இவரிடம் தோசை வகைகள் கிடைக்கின்றன.
வீடியோவைக் காண: https://www.youtube.com/watch?v=RSY-6UkxzkU
முகப்புப் பக்கம் தேவையா?
இணையதளத்தில் அடிக்கடி நாம் பார்க்கும் இணையதளப் பக்கங்களை ஒரே பக்கத்தில் தோன்றும்படி செய்ய முடியுமா? அதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறது, https://www.myfav.es/ என்கிற தளம். இந்த இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் போதும். நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை எல்லாம் அதில் பட்டியலிட்டு, அந்தத் தளங்களுக்கான முதல் பக்கத்தை உருவாக்கிவிடலாம். இதை நம் இணையப்பக்கத்தில் முதல் பக்கமாகவும் பயன்படுத்தலாம். இதற்கென பிரத்தியேக இணைய முகவரியும் தரப்படுவதால், அந்த முகவரியைக் கொண்டு எந்தச் சாதனத்தில் இருந்தும் நம்முடைய விருப்ப தளங்களை அணுக முடியும்.