Last Updated : 15 Mar, 2022 10:34 AM

 

Published : 15 Mar 2022 10:34 AM
Last Updated : 15 Mar 2022 10:34 AM

சென்னை அணியின் சிலம்பு சாகசம்!

பெருநகரான சென்னையில் கிரிக்கெட், பாட்மிண்டன், டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்தவே மாணவ மாணவிகளும் இளைஞர்களும் விரும்புவார்கள். அந்தப் பட்டியலில் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பமும் சேரத் தொடங்கியிருக்கிறது. அதற்கு, தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிலம்ப அணி பதக்கங்களைக் குவித்திருப்பதே உதாரணம்!

தமிழகத்தில் தோன்றிய சிலம்பக் கலையை கிராமங்களில் சிறார்களும் இளைஞர்களும் சாதாரணமாக விளையாடுவதைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களில் அதுபோன்ற காட்சிகள் சற்று அரிதுதான். ஆனால், அண்மைக் காலமாக சிலம்பம் விளையாட்டுக்குச் சிறு நகரங்களைத் தாண்டி சென்னையிலும் கவனம் ஏற்பட்டுள்ளது. சிலம்பத்தை நோக்கி இளைஞர்களும் மாணவர்களும் வரத் தொடங்கியுள்ள நிலையில், கோவாவில் நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறது, சென்னையைச் சேர்ந்த சாமி விவேகானந்தா சிலம்பக் கூடம். இந்தத் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பில் சென்னையைச் சேர்ந்த விவேகானந்தா சிலம்பக் கூடத்திலிருந்து 52 பேர் பங்கேற்றார்கள். மகாராஷ்டிரத்திலிருந்து 25 பேர், கர்நாடகத்திலிருந்து 15 பேர், கேரளத்திலிருந்து 10 பேர் கலந்து கொண்டார்கள். சிலம்பம் விளையாட்டை இப்போதுதான் பிற மாநிலங்களிலும் விளையாடத் தொடங்கியிருப்பதால் இந்த 4 மாநிலங்களில் இருந்துதான் போட்டியாளர்கள் வர முடிந்திருக்கிறது.

இதில் 5 - 10 வயதுக்குட்பட்ட பிரிவு, 10 -14 வயதுக்குட்பட்ட பிரிவு, 14 - 17 வயதுக்குட்பட்ட பிரிவு, 17 - 21 வயதுக்குட்பட்ட பிரிவு, 21 - 50 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலுமே தங்கப் பதக்கங்களை சென்னை அணியே கைப்பற்றியிருக்கிறது. வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை மட்டுமே பிற மாநில அணிகள் வென்றுள்ளன. ஒட்டுமொத்தமாக சென்னையைச் சேர்ந்த விவேகானந்தா சிலம்பக் கூடம் தேசிய அளவில் தங்கப் பதக்கங்களைக் குவித்தது இது இரண்டாவது முறை. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஹரியாணாவில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் 17 தங்கப் பதக்கம், 7 வெள்ளிப் பதக்கங்களை இந்தப் பயிற்சிக் கூடம் அள்ளி வந்தது. மேலும், தமிழக அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டிகளில் தொடர்ச்சியாக 8 முறை இப்பயிற்சிக் கூடம் வென்று முத்திரை பதித்திருக்கிறது.

சென்னையிலேயே இன்னும் பல இடங்களில் சிலம்பக் கூடங்கள் இருக்கின்றன. இதேபோல் தமிழகத்திலும் பல பயிற்சிக் கூடங்கள் இருக்கின்றன. இதில், விவேகானந்தா சிலம்பக் கூடம் தொடர்ந்து தேசிய அளவில் பங்கேற்று பதக்கங்களை வெல்வது எப்படி? இந்தப் பயிற்சிக் கூடத்தின் செயலாளரும் பயிற்சியாளருமான ஏழுமலை நம்மிடம் பேசினார். “சிலம்பத்தில் 12 சுற்றுகள் உள்ளன. இதைச் செய்துகாட்ட ஒன்றரை நிமிடம்தான் வழங்குவார்கள். அதைக் கச்சிதமாகச் செய்துகாட்டுபவர்கள்தான் வெல்ல முடியும். மேலும், சிலம்பம் சுற்றும்போது மூச்சு வாங்கக் கூடாது. குச்சியை விட்டுவிடக் கூடாது; குறிப்பிட்ட நேரத்தில் 12 சுற்றுகளையும் செய்து காட்ட வேண்டும். இந்த மூன்றும் மிக முக்கியம். இந்த மூன்றையுமே பிசிறு இல்லாமல் செய்ய நாங்கள் தனி பயிற்சிகளை அளிக்கிறோம். 55 ஆண்டுகளாக இந்தப் பயிற்சிக் கூடம் செயல்படுகிறது. என்னுடைய தாத்தா, அப்பாவைத் தொடர்ந்து இப்போது நான் சிலம்பம் பயிற்றுவிக்கிறேன். அவர்கள் கற்றுத்தந்த நுணுக்கங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களை வெற்றி பெறும் அளவுக்குத் தயார் செய்கிறோம்” என்கிறார் ஏழுமலை.

ஏழுமலை

சென்னை போன்ற பெரு நகரில் விதம்விதமாக விளையாட்டுகளை இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் வசதிகளும் அதிகம். அப்படியிருக்க அண்மைக் காலமாகத் தமிழகத்தின் பாரம்பரியக் கலையான சிலம்பத்தைக் கற்க மாணவர்களும் இளைஞர்களும் முன்வருகிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது? “சிலம்ப விளையாட்டுக்குத் தற்போது மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதேபோல மத்திய அரசும் கேலோ விளையாட்டுப் பிரிவில் சிலம்பத்தைச் சேர்த்துள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் சிலம்பம் விளையாடும் மூவருக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்கினார். அந்த நிகழ்வுக்குப் பிறகு எங்கள் பயிற்சிக் கூடத்துக்குச் சிலம்பம் விளையாட வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உடலிலிருந்து வியர்வை வெளியேறவும், மூச்சுப் பயிற்சித் திறனை அதிகரிக்கவும் சிலம்பம் நல்ல விளையாட்டு என்கிற எண்ணம் இன்றைய இளம் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், தங்கள் பிள்ளைகளை அதிக அளவில் சிலம்பம் பயிற்சியில் சேர்த்துவிடுகிறார்கள். கரோனா பெருந்தொற்று ஏற்படும் முன்பு எங்கள் பயிற்சிக் கூடத்தில் 30 பேர்தான் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். இப்போதோ 150 பேர் பயிற்சி பெறுகிறார்கள்” என்று பெருமிதம் கொள்கிறார் ஏழுமலை.

எந்த விளையாட்டும் சர்வதேச அளவில் விளையாடப்படும்போது அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இந்தியாவில் அறிமுகமான கபடி இன்று பல நாடுகளிலும் விளையாடப்பட ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாடப்படுவதும் ஒரு காரணம். தற்போது இந்தியாவிலேயே மிகக் குறைவாக 4 மாநிலங்கள் என்கிற அளவில்தான் சிலம்பம் விளையாடப்படுகிறது. அது இன்னும் அதிக அளவில் விளையாடப்படவும் சர்வதேச அளவில் செல்லவும் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? “ஒரு விளையாட்டு தேசிய அளவிலோ சர்வதேச அளவிலோ விளையாடப்பட வேண்டுமென்றால், அதற்கு ஒருங்கிணைந்த சங்கங்கள் தேவை. சிலம்பம் விளையாட்டுக்குத் தேசிய அளவில் சங்கம் எதுவும் கிடையாது. தமிழகத்தில்கூட 4 - 5 சிலம்பச் சங்கங்கள் உள்ளன. இவையெல்லாம் ஒருங்கிணைந்து ஒற்றைச் சங்கமாக மாற வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்” என்கிறார் ஏழுமலை.

பெருநகரமான சென்னையில் இளைய தலைமுறையினருக்குச் சிலம்ப விளையாட்டு மீது ஆர்வம் துளிர்ப்பதே நேர்மறையான தொடக்கம். அது தொடர்வதில் சிலம்பத்தின் வெற்றியும் அடங்கியிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x