Last Updated : 01 Mar, 2022 10:47 AM

 

Published : 01 Mar 2022 10:47 AM
Last Updated : 01 Mar 2022 10:47 AM

கதைப்போமா அறிவியல் 24 - போர்: அழிவு முதல் ஆக்கப்பூர்வ ஆராய்ச்சி வரை!

இந்த ஆண்டில் 22-02-2022 என இரண்டுகளால் ஆன நாள், செவ்வாய்க் கிழமையாகவும் அமைந்துபோனது. அந்த நாளின் ஆங்கிலப்பதமான ‘Tuesday’ என்பதையும் சேர்த்து, உலகெங்கும் ஊடகவியலாளர்கள் ‘டூ டூ டூ’ என வியந்து கொண்டிருந்தனர். இன்னொரு புறம் அதே நாளில் உக்ரைன் மீதான போரை உக்கிரமாகத் தொடங்கி வைத்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அறிவியலுக்கும் போருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்த வாரம் கதைப்போம்.

அதற்கு முன்பு வரலாற்றின் பாதையில் சென்ற நூற்றாண்டுக்குள் சென்று திரும்புவோம். இரண்டு பெரும் உலகப் போர்களை 30 ஆண்டுகளுக்குள் கண்ட நூற்றாண்டு அது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் தயாரிப்புப் போட்டிகளை எதிரி நாடுகளுக்குள் உருவாக்கியது. அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அணு ஆயுதம், ஆராய்ச்சிப் போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டதே. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் எக்ஸ்-ரே மற்றும் கதிரியக்கத்தின் (Radioactivity) அடிப்படை கண்டறியப்பட்டது. பொலோனியம், ரேடியம் போன்ற தனிமங்களும் கண்டறியப்பட்டன. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அணு என்பதன் வடிவமைப்பைப் பற்றிக் கல்விவழி ஆராய்ச்சிகள் அதற்குள் இருக்கும் சூட்சுமத்தைத் தெளிவாக்கின. இந்த முயற்சிகள் எல்லாம் பல நாட்டு ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நியூட்ரானைக் கண்டறிந்த பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் சேட்விக்கிற்கு 1935-ல் வழங்கப்பட்ட நோபல் பரிசு அணு பற்றிய கல்விவழி ஆராய்ச்சியின் நிறைவு எனலாம். அணுக்கரு பிளப்பின் (Fission) மூலம் பெரும் ஆற்றலை உருவாக்கலாம் என்கிற ஆக்கப்பூர்வமான அறிவு, அணு ஆயுதம் என்கிற அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றதற்குக் காரணம், அப்போது உலகைச் சூழ்ந்திருந்த போர் மேகங்களே. 1939ஆம் ஆண்டில் ஜெர்மனி ராணுவம் போலந்து நாட்டுக்குள் நுழைய, அணுக்கருப் பிளப்பின் அடைப்படையில் பெரும் சேதத்தை உண்டாக்கும் அணு ஆயுதத்தை உருவாக்கும் போட்டி அட்லாண்டிக் கடலின் இருபுறமும் பலப்படத் தொடங்கியது. ஒரு புறம் ஜெர்மனியிலும் மறுபுறம் அமெரிக்காவிலும் முடுக்கிவிடப்பட்ட இந்த ஆராய்ச்சி முயற்சிகளில் அமெரிக்கா முந்திக்கொண்டது. அணு ஆயுதத்தைத் தயாரித்து பசிபிக் பெருங்கடலில் நடந்த போரில் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களில் அமெரிக்கா வீசியது.

அதன்பின் ஜெர்மனியும் தோற்கடிக்கப்பட உலகப் போர் முடிவுக்கு வந்தாலும், அறிவியலைப் போருக்குப் பயன்படுத்தும் வழக்கம் முடிவுக்கு வரவில்லை. உலகப் போரைத் தொடர்ந்து நேட்டோ (NATO) என்கிற அணியாக மேற்கு நாடுகள் ஒருபுறமும், வார்சா ஒப்பந்தத்தின் (Warsaw Pact) அடிப்படையில் அப்போதைய சோவியத் யூனியன் தலைமையில் மறுபுறம் என உலகம் பனிப்போர் யுகத்துக்குள் நுழைந்தது. பனிப்போரில் பெரும்பான்மையாக வளர்ந்த கணினி மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் போர் முனைவுகளைக் கூர்படுத்திக்கொள்ள பயன்பட்டன. அதை அறுபது மற்றும் எழுபதுகளின் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து அறியலாம்.

போர் முனைப்புகளால் அறிவியல் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்படுவதும், தாமாக நடத்தப்படும் அறிவியல் முன்னேற்றங்களைக்கூடப் போர் முனைவுகள் பயன்படுத்திக்கொள்வதும் அறிவியலைப் போரின் கொடிய தோழன் எனச் சொல்லி ஒதுக்கிவிட முடியுமா என்கிற கேள்வி எழலாம். இல்லை என்பதே என் பதில். போர் என்ற அழிவுக்குப் பயன்படுவதைவிட அதிகமாக ஆக்கபூர்வமான நன்மைகளை அறிவியல் வழங்கியிருக்கிறது. குறிப்பாக, போர் முனைவுகளுக்கான கட்டமைக்கப்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள் போர் காலத்துக்குப் பின்னர் மானுடத்துக்கு நன்மை பயப்பதாக மாறியதும் உண்டு. உதாரணம், அல்ட்ராசவுண்ட்.

பார்வைத்திறன் குறைவான வௌவால்கள் உணவு தேடவும் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் எந்த வழிமுறையைக் கையாள்கின்றன என்பதை அறிந்துகொள்வதில் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு நீண்ட காலமாக ஆர்வம் இருந்துவந்தது. மனிதச் செவியால் கேட்க முடியாத அதிக அதிர்வெண் கொண்ட சத்தத்தின் அடிப்படையில்தான் வௌவால்கள் வாழ்கின்றன என்பது தெரிந்ததும், அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் பல பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்தக் கல்விவழி ஆராய்ச்சி உலகப் போருக்குப் பின்னர்தான் பயனுள்ள தொழில்நுட்பமாக உருவெடுத்தது. சத்தத்தைத் தண்ணீருக்குள் செலுத்தி அது திரும்பி வரும் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்றனவா என்பதை அறிய உதவும் சோனார் கருவிகள் உருவாக்கப்பட்டன. உலகப் போர் முடிவுக்கு வந்தபின்னர், சோனார் தொழில்நுட்பத்தைக் கொண்டு கருவில் இருக்கும் சிசு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க முடியும் எனக் கண்டறியப்பட்டது. இது கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு மருத்துவ உலகில் மாபெரும் முன்னேற்றமானது.

முள்ளை முள்ளால் எடுக்க முடியும் என்கிற அடிப்படையில் போர் கொண்டு வந்த அழிவுகளை நிவர்த்திசெய்யத் தொடரும் தொழில்நுட்ப வளர்ச்சி உதவுவது உண்மை. கொரியா, வியட்நாம் போரின்போது புதைக்கப்பட்டு வெடிக்காமல் போன கண்ணி வெடிகள் திடீரென வெடித்து நடந்த மரணங்களை பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கேள்விப்பட்டிக்கலாம். இப்போது உலோகம், வெடிமருந்து இருப்பதைக் கண்டறியும் உணரிகள் (Sensors) செயற்கைக்கோள் உதவியுடன் மனித உதவி இல்லாமலேயே கண்ணி வெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்கின்றன. போரற்ற உலகத்தை நினைக்க மனம் உவக்கின்றது. ஆனால், அறிவியல் வளர்ச்சியற்ற உலகைக் கற்பனைக்கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x