

ஒளிப்படக் கலை குறித்து துறை வல்லுநர்கள் தமிழில் எழுதுவதும், அது புத்தகமாக வெளிவருவதும் மிக அரிது. ஒளிப்படக் கலை பற்றிய தமிழ் புத்தகங்கள் சில வெளியாகியிருக்கின்றன. அவை போதுமான அளவில் இல்லை.
இந்தக் குறையைப் போக்கும் விதமாக, எளிய தமிழில் ஒளிப்படக்கலை சார்ந்த புதிய கலைச் சொற்களுடன் 176 முழு வண்ணப்பக்கங்களில், 22 தலைப்புகளில், 100-க்கும் மேற்பட்ட வண்ண ஒளிப்படங்களுடனும் குறிப்பு ஓவியங்களுடனும் ‘குவியம்’ எனும் நூலை அமிழ்தினி தனசேகரன் எழுதியிருக்கிறார். ஒளிப்படக்கலையின் முழுமையான புரிதலை நோக்கி முன் நகர்த்துகிற இலக்கோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
ஒளிப்படக் கலை சார்ந்து தொடர்ந்து இயங்கிவரும் இந்த நூலின் ஆசிரியர் அமிழ்தினி தனசேகரன் ஒரு தேர்ந்த ஒளிப்படக் கலைஞர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட ஒளிப்படக்கலை சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட ஒளிப்படக் கலை பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். இவற்றின் நீட்சியே இப்புத்தகம்.
ஒரு தொழில்நுட்பத்தை நூலாக்குவதும், அதற்கான வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்துவதும் எளிதல்ல. தனசேகரனின் கலையறிவும் தொழில் அனுபவமும் மொழித் தேடலும் இந்த நூலில் அவற்றைச் சாத்தியப்படுத்தி இருக்கின்றன. இந்தப் புத்தகம் வாசிப்பதற்கு எளிமையாகவும் மனத்துக்கு நெருக்கமாகவும் இருக்கிறது.
தொடர் வாசிப்பும், தொடர் கற்றலும், தொடர் பயிற்சிகளும் இருந்தால் மட்டுமே ஒளிப்படக் கலையில் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற முடியும். அத்தகைய தகுதிகளை வளர்த்தெடுக்க இந்தப் புத்தகம் உதவும். ஒளிப்படக்கலையின் மீது ஆர்வம்கொண்டவர்களும் ஒளிப்படக் கலைஞராக மாறும் முயற்சியில் இருப்பவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
‘குவியம்’ - அமிழ்தினி தனசேகரன்,
மு. தங்கமுனியாண்டி வெளியீடு,
தொடர்புக்கு: 9790533244