

பிப்.4: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 24-வது குளிர்க்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. ஒலிம்பிக் போட்டிகளில் 91 நாடுகளைச் சேர்ந்த 2,871 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பிப்.5: வைணவ மத ஆச்சார்யர்களில் ஒருவரும் இந்துமத சீர்த்திருத்தவாதியுமான ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாளையொட்டி தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 216 அடி உயரத்தில் பஞ்சலோக சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிப்.6: இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்றழைக்கப்பட்ட பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் (92) கரோனா தொற்றுப் பாதிப்பால் காலமானார். இவர் பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே எனப் பல விருதுகளை பெற்றவர்.
பிப்.6: பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், ராணியாக முடிசூடிய 70ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவருடைய தந்தை ஆறாம் ஜார்ஜ் மறைவுக்குப் பிறகு 1952 பிப். 6 அன்று ராணியானார் எலிசபெத்.
பிப்.8: நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட மசோதாவை சிறப்புச் சட்டப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டித் தமிழக அரசு மீண்டும் இயற்றியது. அது ஆளுநர்
ஆர்.என். ரவிக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக இயற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர், தமிழக அரசுக்குத் திருப்பி அனுப்பினார்.
பிப்.9: ஹிஜாப் விவகாரத்தில் பள்ளிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும் என்கிற கர்நாடக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்தது.
பிப்.10: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக முனீஷ்வர் நாத் பண்டாரியை நியமித்துக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.