முகத்தில் அறையும் நிஜமும் நிழலும்

முகத்தில் அறையும் நிஜமும் நிழலும்
Updated on
3 min read

நீண்ட நாட்களாகப் பிரிந்திருந்த ஒரு பள்ளித் தோழன் நம்மைச் சந்தித்து, தோள் மீது கையைப் போட்டுக்கொண்டு அவனது வாழ்க்கைக் கதையைச் சொல்வதைப் போலிருக்கிறது இந்தக் கறுப்பு வெள்ளை கிராஃபிக் நாவல். சகித்துக்கொள்ளக் கஷ்டமான விஷயங்களைக்கூட எளிமையாகச் சொல்ல முடியும் என்பதற்கு இது அத்தாட்சி.

ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் ஒரு மாநில மக்களைப் பற்றி ஒரு பார்வையாக வெளிப்படுகிறது இந்தக் கதை. இந்த 350 பக்க கிராஃபிக் நாவலில் ஒரு இனத்தின் சோகத்தை நாவலின் அட்டைப்படமே சொல்லிவிடுகிறது.

அதைச் செய்து காட்டியவர் மாலிக் சஜத். ‘முன்னு காஷ்மீரத்துச் சிறுவன்’ (Munnu a Boy From Kashmir) என்ற தன்னுடைய முதல் கிராபிஃக் நாவலில் அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்று காஷ்மீர் மக்கள் அனைவரையுமே ஹங்குல் மான்களாகச் சித்தரித்துள்ளார். அதேநேரம் காஷ்மீர் மக்களைத் தவிர மற்ற அனைவரையும் வழக்கமான மனிதர்களாக வரைந்து, காஷ்மீர் மக்களை அழிந்துவரும் உயிரினங்களாக, ஆழமான ஒரு உருவகத்தை அட்டையிலேயே பளிச்சென வெளிப்படுத்திவிடுகிறார். அட்டைப் படம் தொடங்கி நாவல் முழுவதும் தான் நினைத்ததை ஆழமாக உணர்த்துகிறார் மாலிக் சஜத்.

குடும்பத்திலேயே இளையவரான முன்னுவுக்குச் சிறு வயதிலேயே ஓவியத்தின் மீது ஆர்வம் ஏற்பட அவரது தந்தையின் தொழிலும் ஒரு காரணம். தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் முக்கியத்துவத்தை உணர ஆரம்பித்த முன்னு, தன்னுடைய ஓவியங்களின் மூலமாக மக்களுடன் உரையாட விரும்புகிறார். 14 வயதில் சம்பளம் எதுவும் பேசாமல், பத்திரிகையில் கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) வரைய ஆரம்பிக்கிறார் முன்னு. அவரது வாழ்க்கையில் இரண்டு முக்கியச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

சம்பவம் 1

காஷ்மீரத்து நாளிதழ் ஒன்றில் வந்த கேலிச்சித்திரத்தைப் பார்த்துக் கோபமடையும் ராணுவ கமாண்டர், கேலிச்சித்திரத்தை வரைந்தவரைக் கைது செய்ய ராணுவ வீரர்களை அனுப்புகிறார். ஆனால், அந்த ஓவியர் பள்ளியில் இருப்பதாகச் சொல்லப்பட, உடனடியாக வீரர்கள் அங்கு விரைகின்றனர்.

வரைந்தது ஓவிய ஆசிரியராக இருக்கலாம், அதனால் பள்ளி முடிந்த பிறகே கைது செய்ய முடியும் என்று காத்திருப்பவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த அரசியல் கார்ட்டூனை வரைந்தது 16 வயது பள்ளிச்சிறுவன் என்று தெரியவர, ராணுவத்தினர் திகைக்கின்றனர். கைது செய்வதற்கான வயது வரம்புக்குள் இல்லாததால், வெறும் கையுடன் திரும்பிவிடுகின்றனர்.

சம்பவம் 2

காஷ்மீரின் புகழ்பெற்ற ஓவியராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட முன்னுவுக்கு டெல்லி இந்தியா ஹேபிட்ட‌ட் மையத்தில் ஓவியங்களைக் கண்காட்சிக்கு வைக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. 21 வயதில் முதன்முறையாக டெல்லிக்கு வரும் முன்னு, ஒரு இன்டர்நெட் கஃபேவிலிருந்து நாளிதழில் அடுத்து வர வேண்டிய கார்ட்டூனை ஸ்கேன் செய்து அனுப்பிக்கொண்டிருக்கும் போதுதான், இரண்டாவது சம்பவம் நடந்தது.

செப்டம்பர் 13, 2008. டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த நாள். ஆனால், முன்னுவுக்கு வாழ்க்கையின் மிகவும் மோசமான நாளாக அது அமைந்துவிடுகிறது. உள்ளே நுழையும்போதே காஷ்மீரத்து இஸ்லாமிய இளைஞன் என்பதால் சந்தேகப்பட்ட இன்டர்நெட் கஃபே உரிமையாளர், குண்டு வெடிப்புச் சத்தம் கேட்ட உடனே போலீசுக்குத் தகவல் அளித்துவிடுகிறார். அவர்களும் சீக்கிரமே முன்னுவைக் கைது செய்தனர். தான் ஒரு ஓவியன் என்று விளக்கியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. முன்னு ஸ்கேன் செய்துகொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்துச் சந்தேகம் வலுக்க, உடனே சிறையிலடைக்கின்றனர்.

பென்சிலைவிட ஒல்லியாக இருந்த அந்த 21 வயது ‘தீவிரவாதி’யை தாங்கள் விரும்பிய உண்மையை வரவழைக்க போலீஸார் அவர்களுடைய பாணியில் விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் ஒருவழியாக உண்மை தெரியவந்து, முன்னு விடுதலை செய்யப்பட்டார்.

முன்னு. அன்று ஒரு முடிவெடுக்கிறார் தன்னுடைய அடையாளம் ஒரு காஷ்மீரத்து இஸ்லாமியன் மட்டும் அல்ல என்பதை உலகுக்குச் சொல்ல விரும்புகிறார். தீவிரமான ஓவியப் பயிற்சியுடன் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையே ஒரு கிராபிஃக் நாவலாகப் படைக்க ஆரம்பித்தார். ஆம் அந்த முன்னு வேறு யாரும் அல்ல. இந்த கிராஃபிக் நாவலின் ஆசிரியர் மாலிக் சஜத் தான்!

ஒவ்வொரு நாளும் தன்னைத் தனிமைச் சிறையிலடைத்துக் கொண்டு, குடும்பத்தினரைக்கூடப் பார்க்காமல், வரைய ஆரம்பித்தார். உணவுகூட ஜன்னல் வழியாகவே கொடுக்கப்பட்டது. இப்படியாகத்தான் இந்தப் புத்தகம் பக்கம், பக்கமாகச் செதுக்கப்பட்டது.

ஹார்ப்பர் காலின்ஸின் 'ஃபோர்த் எஸ்டேட்' பதிப்பகம் மூலமாகக் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட இப்புத்தகம், ஆண்டு இறுதியில் இந்தியாவிலும் வெளியிடப்பட்ட தகவல் தெரிந்தபோது, சஜத் அதை நம்பவே இல்லை. தன்னுடைய முதல் புத்தகத்தின் மூலமாக அழியாப் புகழைப் பெற்ற தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலில் சஜத்தும் இணைந்துகொண்டார்.

ஒரே கதையில் உலகம் தொட்டவர்

இந்தியாவில், கடந்த 60 ஆண்டுகளில் பல கிராபிஃக் நாவல்கள் படைக்கப்பட்டுள்ளன. நர்மதை நதியின் சோகத்தை கிராபிஃக் நாவலாகச் சொன்ன ஒரிஜித் சிங் முதல் சமீபத்திய ஆண்டுகளில் நம்மை அசர வைத்துவரும் சுமித் குமார் வரை பல அசாத்திய திறமைசாலிகளின் படைப்புகளை நாம் கண்டிருக்கிறோம். ஆனால், இவர்களில் எத்தனை பேர் ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் பிதாமகரான ஒசாமு தெசூகாவைப்போல, உலக அளவில் முதல் கிராபிஃக் நாவல் படைப்பாளியான வில் ஐஸ்னரைப்போல வரலாற்றில் இடம்பிடிப்பார்கள் என்று தெரியவில்லை. மாலிக் சஜத் ஏற்கெனவே இந்தியாவின் ஆகச் சிறந்த கிராஃபிக் நாவலைப் படைத்துவிட்டார். அதற்குப் பிறகு எந்தப் படைப்பையும் அவர் வெளியிடவில்லை என்றாலும், இந்த ஒன்று மட்டும் அவரது அசாத்தியமான திறமையை நமக்குப் பறைசாற்றுகிறது.

- கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் பதிப்பாளர்

தொடர்புக்கு: prince.viswa@gmail.com

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) அழிந்து வரும் உயிரினப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹங்குல் என்ற மான் காஷ்மீரின் மாநில விலங்கு. பல ஆயிரங்களில் இருந்த இந்த மானினம், 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் வெறும் 160 ஆகக் குறைந்துவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in