

இது பணிக்கான நேர்க்காணல்கள் ஆன்லைனில் நடைபெறும் காலம். பணிக்கான ஆணை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால், அமெரிக்காவின் எலான் மஸ்க், தான் நடத்திவரும் டெஸ்லா நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்குத் தேர்ந்தடுப்பட்டவரை ட்விட்டரில் தெரிவித்து, அந்தப் பணிக்கு நியமித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவு இந்தியாவில் வைரலானது. இயக்குநர் பதவியை ட்விட்டர் பதிவு மூலம் பெற்றவர் தமிழர் என்பது இன்னொரு சிறப்பு. யார் அவர்?
எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா நிறுவனம் புகழ் பெற்றது. இதன் நிறுவனர் எலான் மஸ்க் உலக அளவில் தொழிலதிபர்கள் வரிசையில் முன்னிலையில் இருப்பவர். உலகப் பணக்காரர்கள் வரிசையிலும் முன்னணியில் உள்ளவர். டெஸ்லா நிறுவனத்தில் ஆட்டோ பைலட் என்கிற தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பக் குழுவை எலான் மஸ்க் கடந்த 2015ஆம் ஆண்டில் அமைத்தார். அந்தக் குழுவில் பொறியாளர்களைப் பணிக்குச் சேர்க்க ட்விட்டர் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என்று எலான் மஸ்க் புதுமையாக அறிவித்திருந்தார். அப்படி டெஸ்லா ஆட்டோ பைலட் தொழில்நுட்பக் குழுவுக்குத்தான் தமிழகத்தைச் சேர்ந்த அசோக் எல்லுச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக எலான் மஸ்க் அறிவித்து, கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
அசோக் எல்லுச்சாமி சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் - கம்யூனிகேஷன் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர். பின்னர் அமெரிக்கா சென்ற அசோக், பென்சில்வேனியா மாகாணத்தில் பிட்ஸ்பர்க் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் ரோபாட்டிக் சிஸ்டம் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். தொடக்கத்தில் பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்களின் ஆய்வுப் பிரிவில் பணியாற்றிய அசோக், டெஸ்லா ஆட்டோ பைலட் தொழில்நுட்பக் குழுவில் மென்பொறியாளராக 2014ஆம் ஆண்டில் இணைந்தார். தற்போது ஆட்டோ பைலட் தொழில் நுட்பக் குழுவின் இயக்குநராகியிருக்கிறார்.
டெஸ்லா நிறுவனத்தில் வாகனங்களில் தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளைக் கச்சிதமாக முடித்துப் பெயரெடுத்தவர் அசோக். மேலும், அசோக் தலைமையில் பிரேக்கிங் தொழில்நுட்பத்தில் பல சாதனைகளை அந்நிறுவனம் படைத்திருக்கிறது. இவருடைய தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட இயந்திரக் கற்றல் தொடர்பான தொழில்நுட்பப் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரி டெஸ்லா விண்ணப்பித்திருப்பது ஹைலைட்.