‘போன்ஜூர் சென்னை!

‘போன்ஜூர் சென்னை!
Updated on
2 min read

கலகலப்பாக, கலக்கலாக, கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது ‘பிக் நிக் ஃபிராங்கோஃபோன்!'

அப்படீன்னா?

ஆங்கிலத்துக்கு அடுத்து உலகம் முழுவதும் பிரபலமான ஒரு மொழி என்றால் அது சந்தேகமே இல்லாமல் பிரெஞ்சு மொழிதான். தவிர, உலகில் பேசப்படும் ஐந்து ‘ரொமான்டிக் லேங்குவேஜ்'களில் ஒன்று! தற்சமயம் சுமார் முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் இந்த மொழி பேசப்பட்டு வருகிறது.

இலக்கியம், கலை, அறிவியல் எனப் பல துறைகளிலும் பிரெஞ்சு மொழி வழங்கிய கொடை ஏராளம். அப்படிப்பட்ட இந்த மொழியைப் பிரபலப்படுத்துவதற்கு ‘அலையன்ஸ் ஃபிரான்சேஸ்' என்ற பெயரில் பிரெஞ்சுக் கல்வி மைய‌ங்கள் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றன.

இந்த மையங்கள் மூலம் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொடுப்பது, மொழிபெயர்ப்புச் சேவைகள், பிரெஞ்சுத் திரைப்படங்களைத் திரையிடுவது, பிரெஞ்சு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவது எனப் பல பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மொழியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பிரெஞ்சு மொழி பேசப்படும் நாடுகளிலும், ‘அலையன்ஸ் ஃபிரான்சேஸ்' மையங்களிலும் ‘சுமெய்ன் து லா ஃபிராங்கோஃபோனி' என்ற பெயரில் மார்ச் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வாரம் முழுக்க‌ விழா நடத்தப்படுகிறது.

அந்த வாரம் முழுக்க திரையிடல்கள், போட்டிகள் என ‘அலையன்ஸ் ஃபிரான்சேஸ்' மைய வளாகமே களைகட்டும்.

இந்நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக பிரான்ஸ் நாட்டு உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் விதமாக ‘பிக் நிக் ஃபிராங்கோஃபோன்' என்ற பெயரில் சென்னையில் உள்ள ‘அலையன்ஸ் ஃபிரான்சேஸ்' மையத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது.

மாணவர்கள், ஆசிரியர்கள் என எந்த வேறுபாடுகளுமின்றி பிரான்ஸ் நாட்டின் விதவிதமான உணவு வகைகளைச் செய்து அசத்தியிருந்தார்கள். அந்த உணவு வகைகளில் பார்வையாளர்களிடம் முதல் இடத்தைப் பெற்ற ஒரு ஐட்டம்... ‘க்ரெப்!' (அதன் செய்முறை விளக்கம் பார்க்க... பெட்டி)

இந்தத் திருவிழா குறித்து அந்த மையத்தின் துணை இயக்குநர் சாரா பெல்ஹாலியிடம் கேட்டபோது, "இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலமாக, மாணவர்கள் மொழியைக் கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். இது, அவர்கள் பிரான்ஸ் உள்ளிட்ட பிரெஞ்சு மொழி பேசப்படும் நாடுகளுக்குச் செல்லும்போது மிகவும் பயன்படும். இந்த விழாவில் மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

மெர்ஸி (நன்றி) பிரான்ஸ்!

இவ்வளவுதாங்க ‘க்ரெப்'!

கோதுமை மாவு, முட்டை, சர்க்கரை, சிறிது உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ‘தவா'வில் அதனை ஊற்றி தோசை போல வார்க்க வேண்டும். அதன் மீது எண்ணெய்க்குப் பதிலாக சிறிது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு ஆறியவுடன், அந்த தோசை மீது தேன் ஊற்றி, வாழைப்பழங்களைச் சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி தோசை உள்ளே வைத்து மடித்து, அதனை நான்கு துண்டுகளாக வெட்டிப் பரிமாறலாம்.

.

இயக்குநர் பியர் இமானுவேல் ஜேக்கப் உடன் துணை இயக்குநர் சாரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in