Published : 18 Mar 2016 12:02 PM
Last Updated : 18 Mar 2016 12:02 PM

பொருள்தனைப் போற்று! 8 - இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

‘என்னங்க.

பழம் என்ன விலை?'

‘பதினைஞ்சு ரூபாம்மா ஒண்ணு'

‘என்ன இந்த விலை சொல்றீங்க? நேத்தைக்குதான் மயிலாப்பூர்ல பத்து ரூபான்னு வாங்கினேன்!'

‘பத்து ரூபாய்க்கு வாங்குனீங்களா? எங்கே கொடுக்கறாங்கன்னு சொல்லுங்க. நானும் வாங்கியாந்து விற்கறேன்'.

புரிந்திருக்குமே. மொத்த விற்பனையில் பழம் வாங்கி வந்து சில்லரைக்கு விற்பவர் இவர்.

‘தெரிஞ்சவரு', ‘ரெகுலர் கஸ்டமரு', ‘இன்னைக்கி குறைச்சுக்குங்க, நாளைக்கு நான் கூடப் போட்டுக் கொடுக்கறேன்' என்றெல்லாம் பேசி, ஒரு பழம் 12 ரூபாய் என்று மொத்த விலையில் 1000 பழம் வாங்கி வந்திருக்கிறார்.

‘வண்டி, ஏத்தினது, இறக்கினதுக்கான கூலி, அப்படி இப்படின்னு, மேல‌ ஒரு ஆயிரம் ரூபா ஆகிடுச்சு'.

ஆக மொத்தம் 13,000 ரூபா, பழத்தைக் கொண்டு வந்து சேர்த்த வரைக்கும்.

இது இல்லாம கடை வாடகைன்னு இருக்கு இல்லை? அதைச் சேர்க்க வேண்டாமா? சரி. இந்த உதாரணத்துல வேண்டாம். தள்ளு வண்டியில வெச்சு விற்கறாருன்னு எடுத்துப்போம். அப்போ கூட, ‘மத்த' செலவுகள் இருக்கும் இல்லையா?

இப்போ என்ன விலைக்கு வித்தா கட்டுபடி ஆகும்? எவ்வளவுக்கு வித்தா, கையில கொஞ்சமேனும் நிக்கும்?

ஆயிரத்துக்கு பதிமூணாயிரம் ரூபாய்னா, ஒரு பழம் 13 ரூபா ஆவுது. அதுதான் அதனோட விலை. இந்தக் கணக்கு சரியா? கணக்கு சரி. ஆனா, அதுதான் விலைங்கறது தப்பு.

நாம சொன்ன அந்த 13 ரூபா, விலை இல்லை. இதுதான், அந்தப் பொருளோட ‘காஸ்ட்' (cost).

‘போட்ட காசு வந்தா கூடப் போதும்'னு மனவேதனையோட சொல்லுவாங்க இல்லை? இந்த போட்ட காசுதான், பொருளோட ‘காஸ்ட்'. இன்னும் விவரமா அப்புறமாப் பார்ப்போம்.

‘போட்டது வரைக்கும் கிடைக்குது'. இந்த நிலைதான், ‘சரி சமப் புள்ளி'.

‘ஒரு ரூபா லாபமும் இல்லை. ஒரு ரூபா நஷ்டமும் இல்லை'. வரவும் செலவும், ‘ஈவன்' ஆக‌ ‘பிரேக்' ஆகுற அந்தப் பாயிண்ட் ‘பிரேக் ஈவன் பாயிண்ட்'. ஒருமுறைக்கு இருமுறை படிச்சிப் புரிஞ்சுக்க வேண்டிய அடிப்படை விஷயம் இது.

‘நாங்க பொழைக்கணும், எங்களுக்கும் குடும்பம்னு ஒண்ணு இருக்கு இல்லை? இதை வெச்சுதானேம்மா எங்க புள்ளைங்களைப் படிக்க வைக்கணும்?'

மிக நியாயமான, மிக வலுவான வாதம். இதனையும் கருத்தில் கொண்டுதானே, ஒரு பழம் என்ன விலைக்கு விற்கலாம் என்று முடிவு செய்ய வேண்டும்?

பொதுவாக நம் நாட்டில், உடல் உழைப்புக்குப் பண மரியாதை தருவதே இல்லை. பெரும்பாலான சமயங்களில் இதனைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே கொண்டாலும், மிகக் குறைவான மதிப்பையே தருகிறோம். இது ஒரு வித சமூக நோய்.

முதலுக்கான வட்டி, இடத்துக்கான வாடகை, உழைப்புக்கான குறைந்தபட்ச ஊதியம், தவிர்க்க இயலாத பிற செலவுகள் ஆகியனவும் சேர்ந்ததுதான், ‘பிரேக்-ஈவன்' புள்ளி.

இதுதான் நேர்மையான அணுகுமுறையாக இருக்க முடியும். இப்போது சொல்லுங்கள். ஒரு பழம் என்ன விலைக்கு விற்கலாம்? நிச்சயமாக 15 ரூபாய் என்பது அடாவடி இல்லை. சரிதானே?

விலை நிர்ணயம் எப்படி?

சமூகப் பார்வையை உள்ளடக்கிய ஒரு பாடம் பொருளாதாரம். ஆனால் இந்தக் கோணத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, ‘சர்வதேச', ‘காஸ்மோபாலிடன்', ‘அறிவுஜீவி' அணுகுமுறைகளால், பொருளாதாரத்தைக் கையாள்வதால்தான், அது சாமான்யர்களிடம் இருந்து அந்நியப்பட்டு, 'மேதை'களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தகிக்கிறது.

ஒரு பொருளின் விலையை நிர்ணயிப்பது எப்படி? மிகச் சிக்கலான ஒரு கேள்வி இது. அதைத் தெரிந்துகொண்டால், ‘நுண் பொருளாதாரம்' (micro economy) மொத்தமும் தெரிந்தது போல.

பல பெரிய நிறுவனங்களில், தமது பொருளுக்கு என்ன விலை வைக்கலாம் என்று ரூம் போட்டு யோசிக்கறாங்க. கமிட்டி வெச்சு திட்டம் தீட்டுறாங்க.

ஆனா நம்ம ஊருல? ரொம்ப எல்லாம் ஒண்ணும் அலட்டிக்கறது இல்லை.

பாருங்களேன். கீரை, மோர், ஊறுகாய், வத்தல், மீன், காய், பழம், பூ... எல்லாம் ஏதோ ஒரு விலை வைத்து, விற்றுக் கொண்டுதானே இருக்கிறார்கள்? என்ன தெரிகிறது?

பொருளாதாரம் படிக்கவில்லைதான். ஆனாலும், பொருளாதாரத்தில் விற்பன்னர் ஆக இருக்கிறோம்! என்ன ஒன்று? நம் அன்றாட வாழ்வுக்குப் பொருளாதார அறிவு எந்த அளவுக்குப் பயன் உள்ளது என்பதை உணர மறுக்கிறோம்.

‘குறைஞ்சது இவ்வளவு இருந்தாத்தான் குடும்பத்தை நடத்தவே முடியும்' என்று சொல்கிறோமே. அந்த ‘குறைஞ்சது'தான் ‘பிரேக் ஈவன்' புள்ளி. அதாவது அத்தியாவசியம்.

இதற்கு வெளியே இருக்கும் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, சேமிக்க, அல்லது அவசியம் ஆனதற்கு மட்டும் செலவு செய்ய பழக்கப்படுத்திக் கொண்டால் போதும். குடும்பம் செழிக்கும்.

வணிகர்களிடம் வருவோம். மறைமுக செலவுகளைக் குறைத்தல் என்றாலே, ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, அவர்களின் ஊதியத்தில், ஊக்கத் தொகையில் கை வைப்பது, ஊழியர் நலன் சார்ந்த வசதிகளை நீக்கிக் கொள்வது போன்ற நடவடிக்கைகள்தான் என்று தவறாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

‘அதிக சம்பளம். அதிக வேலைத் திறன்' என்கிற சித்தாந்தம்தான் மிகச் சிறந்த பலனைத் தரும். இதற்கு மாறான ‘செலவுக் குறைப்பு நடவடிக்கை' நேரடியாக உற்பத்தித் திறனை, தரத்தை பாதிக்கும்.

சிக்கனம் எப்படி?

அப்படி என்றால், வேறு எங்குதான் சிக்கனத்தைக் கொண்டு வர முடியும்?

ஆடம்பரமான மின் விளக்குகள், அளவுக்கு மீறிய விளம்பரம், சிறப்பு விற்பனை என்கிற பெயரில் கட்டுபடி ஆகாத அளவுக்குத் தள்ளுபடி, சலுகை, இலவசங்கள், நிதானம் தவறிய நிர்வாகச் செலவுகள்... இவையெல்லாம், கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய மறைமுகச் செலவுகள்.

ஒரு விஷயம் கவனத்துக்கு வருகிறதா? இந்தச் செலவுகளின் பெயர்கள் வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் இவ்வகைச் செலவுகளை, அரசாங்கம் முதல் தனி மனிதன் வரை எல்லாரிடத்திலும் காண முடியும்.

தேவையற்ற மின் உபகரணங்கள், வீண் ஜம்பத்துக்குச் செய்யும் கவுரவச் செலவுகள், கேளிக்கைகளில் விரயம் ஆக்கப்படும் தொகைகள்... இவை அனைத்தும் குடும்ப, தனி மனித வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவன.

செய்தி இதுதான். ‘பிரேக்-ஈவன்' புள்ளிக்கு வெளியே உள்ள மறைமுகச் செலவுகள் அறவே தவிர்க்கப் பட வேண்டும். பொருளாதார முன்னேற்றத்துக்கு, இதை விடவும் உருப்படியான ஒரு வழிமுறை உலகில் இல்லை.

சரி. விலையைப் பற்றிப் பார்த்தோம். அதுக்கு முன்னே, ‘காஸ்ட்' பத்தியும் பேசினோம் இல்லை? அதுக்கு என்ன அர்த்தம்? என்ன இது ‘ரிவர்ஸ்'ல போறமேன்னு தோணுதா?

அப்படித்தான். ஏன்னா, ‘காஸ்ட்'லயே, ‘ஆப்பரேட்டிங் காஸ்ட்', ‘ஸ்டாண்டர்ட் காஸ்ட்', ‘மார்ஜினல் காஸ்ட்'னுட்டு, வெவ்வேற பேர்ல, வெவ்வேற விதம் இருக்கு. இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா, திரும்பவும் தொழிற்சாலைக்குள்ளே போகணும்.

தொழிற்சாலைன்னு சொன்னாலே நமக்கு என்ன நினைவுக்கு வரும்?

‘மெஷின்ஸ்'. அதாவது, இயந்திரங்கள்.

இப்போ ஒரு கேள்வி, எதுவெல்லாம் இயந்திரம்? வேணாம். வேற மாதிரி வெச்சுக்குவோம். ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர், போல்ட்டு, நட்டு, சுத்தி, அருவா, மண்வெட்டி, கடப்பாரை... இதெல்லாம் இயந்திரமா இல்லையா?

(வளரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x