

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில்தான் விண்வெளி யுகம் தொடங்குகிறது. ‘விண்வெளிப் பந்தயம்’ என்ற பொருளில் ‘ஸ்பேஸ் ரேஸ்’ என்றே அந்த யுகத்தின் தொடக்க காலம் குறிப்பிடப்பட்டது. உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்டவர்கள். உண்மையில், விண்வெளி யுகத்துக்கான வித்துக்கள் இரண்டாம் உலகப் போரிலேயே விதைக்கப்பட்டுவிட்டன. ஆனால், அந்த வித்துக்களை விதைத்தது மேற்கண்ட இரண்டு நாடுகளும் அல்ல, ஜெர்மனிதான். இரண்டாம் உலகப் போரில் அவர்கள் கண்டுபிடித்த விதவிதமான ஏவுகணைகளும் இன்னும் பல தொழில்நுட்பங்களும்தான் விண்வெளி யுகத்தின் வித்துக்கள்.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி படுதோல்வியடைந்ததும் அவர்களின் தொழில்நுட்பங்களைக் கைப்பற்ற அமெரிக்காவுக்கும் ரஷ்யாவின் செம்படைக்கும் கடும் போட்டி நிலவியது. கிடைத்ததை இரண்டு பேரும் சுருட்டிக்கொண்டார்கள். கூடுதலாக, இந்தத் தொழில்நுட்பங்களில் பங்கேற்றிருந்த ஜெர்மானிய விஞ்ஞானிகள் பலரும் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர், அல்லது சிறைப்பிடிக்கப்பட்டனர்.
‘கிடைமட்டத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஏவப்பட்ட ஏவுகணைகளைச் செங்குத்தாக வான் நோக்கிப் பறக்கவிட்டால் என்ன?’ என்ற கேள்வி யிலிருந்துதான் தொடங்குகிறது விண்வெளி யுகம். இதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் கடும் போட்டி தொடங்குகிறது. விண்வெளிக்கு முதல் விண்கலத்தையும் பிறகு மனிதரை அனுப்பிப் போட்டியில் முன்னணி வகித்தது ரஷ்யா. ஆனால், நிலவுக்கு மனிதர் களை அனுப்பி ரஷ்யாவைப் பின்னுக்குத் தள்ளியது அமெரிக்கா.
தற்போது விண்வெளித் துறை அதிநவீனமாகிவிட்டது. தொடக்க கால சாதனங்கள் எவற்றையும் அநேகமாகத் தற்போது பயன்படுத்த மாட்டார்கள். அப்படியென்றால், விண்வெளி யுகம் தொடங்கிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட தளவாடங்கள், ஏவுதளங்கள் எல்லாம் இன்று எப்படி இருக்கும்? அவற்றை எப்படிப் பார்ப்பது?
கவலையே வேண்டாம். அந்த விண்வெளி யுகத்தின் அமெரிக்க எச்சங்களைப் புகைப் படங்களாக எடுத்து, தற்போது அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் புகைப்படக் கலைஞர் ரோலண்டு மில்லர்.
முப்பதாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவராலிலிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. புகைப்படத் தொழில்நுட்பத்துக்கான ஒரு வேதிப்பொருளைத் தங்கள் அலுவலகத்தின் கட்டிடத்திலிருந்து அகற்றுவதற்கு உதவ வேண்டும் என்று மில்லரைக் கேட்கிறார்கள். சரி என்று போய்ப் பார்க்கிறார் மில்லர். போன இடத்தில் அந்தப் பிரதேசத்தில் அவர் கண்ட காட்சி அவரை அப்படியே அசத்திப் போட்டுவிடுகிறது: ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள்!
விண்வெளி யுகத்தின் எச்சங்கள் அவை என்று அவருக்குச் சொல்லப்படுகிறது. அவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற ஆசையில் புகைப்படம் எடுக்க அனுமதி கோரி நாஸாவிடம் கேட்கிறார் மில்லர். பிறகு, தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் பயணம் செய்து விண்வெளி யுகத்தின் எச்சங்களைப் புகைப்படம் எடுக்கிறார்.
கைவிடப்பட்ட ஏவுதளங்கள், எண்ணெய் டேங்குகள், சுழலிகள், விண்வெளி வீரர்களுக்கான உடைகள் என்று பல்வேறு விஷயங்களும் அவர் எடுத்த புகைப்படங்களில் அடங்கும். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக எடுத்த புகைப்படங்களை இப்போது புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார். துருப்பிடித்தும் சிதிலமடைந்தும் நிற்கும் இந்தத் தளவாடங்களெல்லாம் அறிவியலில் மட்டுமல்லாது வரலாற்றிலும் முக்கியமான காலகட்டத்தின் சாட்சிகள். அந்த சாட்சிகளுக்குத் தன் புகைப்படங்கள் மூலமாக நீண்ட ஆயுள் தந்திருக்கிறார் ரோலண்டு.