

சென்ற ஆண்டு தொடங்கிய பெருந்தொற்று, இன்றும் தொடர்கிறது. அதன் பின்னிருக்கும் வைரஸின் பெயர் கரோனா. அதற்கு அந்தப் பெயர் வந்தது எப்படி? அறிவியல் உலகில் பெயர் உருவாக்கப்படும் விநோதங்களை இந்த வாரம் கதைப்போம்.
உலகின் முதல் அறிவியல் ஆராய்ச்சியாளர், அரிஸ்டாட்டில். சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்க நாட்டில் பிளோட்டோ நடத்திய பள்ளியில் மாணவராக இருந்த அரிஸ்டாட்டிலுக்கு தத்துவம், கணிதம், விலங்கியல், இலக்கியம் எனப் பல துறைகளிலும் ஆர்வம். அவற்றில் ஆழ்ந்து ஈடுபட்டு பல்துறை வல்லுநராக உருவெடுத்த அவரது ஆராய்ச்சிகளின் வழியாக அவர் கண்டறிந்த பலவற்றை நவீன அறிவியல் உலகம் இன்றும் பயன்படுத்துகிறது. உதாரணமாக, நம்மைச் சுற்றி இருப்பவற்றை புரிந்துகொள்ள உதவும் தர்க்க வழிமுறையை (Logic) முறையாக வரையறுத்தது அரிஸ்டாட்டிலே.
குறிப்பிடத்தக்க அடுத்த அறிவியல் ஆராய்ச்சியாளர், ஆர்க்கமிடீஸ். குளிப்பதற்காகத் தண்ணீர்த் தொட்டியில் அமர்ந்தபோது வெளியேறிய தண்ணீரின் அளவு என்னவாக இருக்கும் என்ற அவருடைய சிந்தனையால் மிதக்கும் சக்தி (Buoyant force) பற்றிய விதி உருவானது. அந்த விதியின் அடிப்படையில்தான் கப்பல்கள் இலகுவாகவும், விரைவாகவும் நகரும் சக்தி கொண்டதாக அமைய, மனித சமூகத்திற்கு தொலைதூர போக்குவரத்து சாத்தியமானது.
முறையான அறிவியல் கல்வி வந்தபின்னர் அறிவியல் துறைகளில் தனித்தனியாக விற்பன்னர்கள் உருவாக ஆரம்பித்தனர். இந்திய, சீன, அரேபிய நாடுகளில் இருந்து அறிவியல் ஆராய்ச்சிகள் வந்தாலும் ஆவணப்படுத்தப்பட்ட மிக முக்கிய ஆராய்ச்சிகள் பதினேழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் வேகம் எடுக்கத் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கது, தனிமங்களைக் கண்டறிந்து வரிசைப்படுத்திய அட்டவணை (Periodic table). ஆங்காங்கே பலரும் பல்வேறு தனிமங்களைத் தங்களது ஆராய்ச்சிகள் வழியாக கண்டறிய, அவற்றின் அணு நிறை (Atomic mass) எண் அடிப்படையில் வரிசைப்படுத்தலாம் என ஜெர்மனியில் நடைபெற்ற வேதியியலாளர்களின் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
ஒரு தனிமத்தின் அணுவில் இருக்கும் புரோட்டான்களின் அளவு அணு நிறை என அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், ஒரே ஒரு புரோட்டானைக் கொண்ட ஹைட்ரஜன் தனிம அட்டவணையின் முதல் இடத்தில் அமர்ந்துகொண்டது. இரண்டு புரோட்டான்களைக் கொண்ட ஹீலியம், மூன்று கொண்ட லித்தியம் என வரிசைக்கிரமமாக தனிமங்கள் அட்டவணையில் ஆவணமாகின. 118 புரோட்டான்களைக் கொண்ட ஒகாநெசன் தனிம அட்டவணையில் இருக்கும் “குண்டு" தனிமம்.
அட்டவணையில் இடம் பெற்ற ஒவ்வொரு தனிமத்தின் பெயருக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் என்றெல்லாம் ‘ஜன்' என முடியும் தனிமங்களின் பெயர்கள் கிரேக்க மொழியில் கோர்க்கப்பட்டவை. அவற்றைக் கண்டறிந்த அறிவியலாளர்கள் பிரான்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அறிவியலின் மொழியாக கிரேக்க மொழி அறியப்பட்டதால், அதில் பெயர் வைக்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடுகள் அனைத்தும் இணைந்து பயன்பாட்டு வேதியியலின் சர்வதேச ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) என்ற அமைப்பை ஏற்படுத்தி, புதிய தனிமங்களை ஏற்றுக் கொள்ளும் பொறுப்பு, இந்த அமைப்பிற்கே உண்டு என முடிவெடுத்தனர்.
அதன் பின்னர் தனிம அட்டவணைப் பெயர்கள் புதுமையாக அமைய ஆரம்பித்தன. உதாரணமாக, 95 புரோட்டான்களைக் கொண்ட தனிமத்தை கலிபோர்னிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய, அதற்கு கலிபோர்னியம் எனப் பெயர் வைத்தனர். 117 புரோட்டான்களைக் கொண்ட தனிமத்தை கண்டறிந்தவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஏ.வி.ராமய்யா, தான் பணிபுரியும் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் டெனசி மாகாணத்திற்கு மரியாதை கொடுக்கும் வகையில் டெனசீன் என பெயர் வைத்தார்.
வர்தா, கஜா, கத்ரீனா எனப் புயல்களுக்கு பெயர்கள் வைக்கப்படுவதைப் பார்க்கிறோம். எப்படி இந்த பெயர்களை வைக்கிறார்கள்? உலகம் முழுதும் பருவநிலை காரணமாக புயல் மையங்கள் உருவாகியபடியே இருக்கின்றன. இவற்றிற்கு பெயர்களை நிர்வகிக்கும் பொறுப்பு உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) என்ற சர்வதேச அமைப்பிடம் இருக்கிறது.
முக்கிய கடல்களில் அமைந்திருக்கும் நாடுகளின் வானிலை அமைப்புகளின் பெயர்களை ஆண்டுக்கொரு தடவை அகர வரிசையில் வைத்து வெளியிட வேண்டியது இந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு. ஜனவரியில் ‘A' வில் ஆரம்பிக்கும் பெயர்கள் உருவாகும் புயல்களுக்கு ஒவ்வொன்றாக வைக்கப்படும். ஒரு வேளை புயல்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகமாக இருந்து அனைத்து பெயர்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டால், பயன்படுத்துவதற்காக துணை பட்டியல் ஒன்றும் தயாராக இருக்கும்.
கொடும் அழிவை உண்டாக்கிய புயல்களின் பெயர்களை இனி வரும் வருடங்களில் வைக்காதபடி நிரந்தரமாக நீக்கிவிடவேண்டும் என்றும் விதி இருக்கிறது. எனவே, வர்தா, கஜா, கத்ரீனா போன்ற பெயர்கள் புயல்களுக்கு வைக்கப்படவே மாட்டாது. வரும் 2022இல் அட்லாண்டிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு கொடுக்கப்படப்போகும் பட்டியலைப் பார்த்தேன். முதல் புயலுக்கு அலெக்ஸ் என்றும் கடைசி புயலுக்கு வால்டர் என்றும் இருக்கிறது. இந்திய வானிலை நிறுவனம் பெயர் பட்டியலை இன்னும் முடிவு செய்ததாக தெரியவில்லை.
கடைசியாக, வைரஸ்கள்.
இப்போது வரை 6500 வைரஸ்கள் மொத்தமாகக் கண்டறியப்பட்டுள்ளன. மரபணுவை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக வைரஸ்களை கண்டறிவது எளிதாகிவருகிறது. கண்டறியப்படும் வைரஸ்களுக்கும், அவற்றின் பிறழிகளுக்கும் (Variants) முறைப்படியான பெயர் வைக்க வேண்டும் என்ற தேவையை பெருந்தொற்று காலம் கொண்டு வந்திருக்கிறது.
காரணம், நாடுகளின் பெயர்களில் இது அமைந்தால், தேவையற்ற கெட்ட பெயர் வரும். உதாரணமாக, இந்தியாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் பிறழி இந்திய பிறழி என முதலில் அழைக்க, பின்னர் டெல்டா என மாற்றப்பட்டது. புயல்களைப் போலவே வரிசையாக அமைக்கப்பட்ட பட்டியியலில் இருந்து கண்டறியப்படும் வைரஸ்களின் பெயர்கள் அமையும் என்றும், ஒவ்வொரு வைரஸின் பிறழியும் கிரேக்க எழுத்துக்களைக் கொண்டதாகவும் இருக்கும் என சமீபத்தில் அறிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம். அதன்படி, கொரோனா வைரஸின் லேட்டஸ்ட் பிறழியான ஓமிக்ரான் கிரேக்க எழுத்தே.
அரிஸ்டாட்டிலில் தொடங்கி ஓமிக்ரான் வரை அறிவியல் உலகில் கிரேக்கத்தின் ஆதிக்கம் தொடர்கிறது.
இத்தொடருக்கான பிரத்யேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அதில் இணைந்து, தொடர் பற்றிய பின்னூட்டங்களையும் எந்த டாப்பிக்குகளை அலச வேண்டும் என்பதையும் கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள். +1 (628) 240-4194 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.