நகைச்சுவையின் விலை அதிகம்

நகைச்சுவையின் விலை அதிகம்
Updated on
1 min read

இது ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன்களின் காலம். தனிநபரால் ஆங்கிலத்தில் நடத்தப்படும் இந்த வகை நகைச்சுவை நிகழ்ச்சிகளை முன்பெல்லாம் ஐ.டி. துறையினர் மட்டுமே ரசிப்பார்கள் என்று நம்பப்பட்டது. தற்போது அவற்றின் உள்ளடக்கம் காரணமாகப் பரவலாகிவருகிறது. கூடவே, நகைச்சுவைக்கு அரசியல் சாயம் பூசும் வேலைகளும் நடக்கின்றன. ‘ஸ்டாண்ட் அப்’ காமெடியன் முனவர் ஃபரூக்கி, இந்து மதத்தையும் இந்துக் கடவுளர்களையும் தன் நகைச்சுவை மூலம் இழிவுபடுத்திவிட்டார் என்று இந்து அமைப்பினர் சர்ச்சையைக் கிளப்பினர்.

இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் ஜனவரி 1 அன்று இந்தூரில் கைது செய்யப்பட்டார் முனவர் ஃபரூக்கி. ஒரு மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அதன் பிறகே நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் கிடைத்தது. பிறகு சூரத், அகமதாபாத், வதோதரா, மும்பை, ராய்ப்பூர் ஆகிய இடங்களில் முனவர் நடத்துவதாக இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டன. இவற்றைத் தொடர்ந்து தற்போது பெங்களூருவில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. முனவர் ஃபரூக்கி மீது பல மாநிலங்களிலும் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், பெங்களூரு நிகழ்ச்சியால் மக்களின் அமைதிகெடும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தன்னுடைய நிகழ்வுகள் வலதுசாரிகளின் அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்படுவதைப் பற்றி, ‘வெறுப்பு வென்றது; கலைஞன் தோற்றுவிட்டான். நான் விடைபெறுகிறேன். அநீதி’ என்று தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முனவர் ஃபரூக்கி மீதான வலதுசாரிகளின் நூதன தாக்குதல் குறித்து வருத்தம் தெரிவித்திருந்த சக நகைச்சுவைக் கலைஞரான குனால் கம்ரா, “கலைஞர்கள் தங்கள் நகைச்சுவைக்காக நிறைய விலைகொடுக்க வேண்டியுள்ளது.

பல கலைஞர்கள் தாங்கள் நிகழ்த்தப்போகும் நிகழ்ச்சியின் உள்ளடக்கம் குறித்துத் தங்கள் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டுவிட்டு அதன் பிறகே வீடியோவை வெளியிடுகின்றனர்” என்று ட்வீட் செய்திருந்தார். தற்போது குனாலின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. “இப்போது நான்தான் புதிய வேற்றுரு வைரஸ் போல” என்று பதிவிட்டுள்ளார் குனால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in