

சென்னையை ஒரு வானவில் நகரம் எனலாம். இந்த நகரத்தில் இல்லாத வண்ணங்கள் இல்லை. கலாச்சாரங்கள் இல்லை. அந்த வண்ணத்தில் ஒன்றுதான் சீனம்.
முதல் உலக யுத்தம் நடந்த முடிந்த பிறகு சீனாவில் நடை பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் இருந்து தப்பித்த சீனர்கள் சிலர் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். அப்படி வந்தவர்களில் சிலர் சென்னை பாரீஸ் பகுதியில் குடிபெயர்ந்துவிட்டனர்.
இவர்கள் சீனாவின் வூவாந் (wuhan) என்ற மாநிலத்தில் ஹுபெய் (hubei)என்ற குறிப்பிட்ட மொழி பேசும் குழுவைச் சேர்ந்தவர்கள். தற்காலிகமாகத் தஞ்சம் அடைந்த இவர்கள் இங்கேயே தங்கி மூன்று தலைமுறைகளைக் கழித்துவிட்டார்கள். இன்று இந்த மூன்றாம் தலைமுறைச் சீனர்கள், ‘தமிழ் எங்கள் மூச்சு’ என்று சொல்லும் அளவுக்குத் தமிழ்க் கற்றுக்கொண்டு தமிழர்களுடன் தமிழர்களாக ஐக்கியம் ஆகிவிட்டனர்.
இவர்கள் சென்னைக்கு வந்து சேர்வதற்குள் பெரும் பாடுபட்டுள்ளனர். பல இன்னல்களைச் சந்தித்துள்ளனர். சீனாவில் முதலில் தொடங்கிய இவர்களின் பயணம் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் நிகோபார் தீவுகள் எனப் பல இடங்களை மாதக் கணக்கில் நடந்தும் படகுகள் மூலமாகவும் கடந்து இறுதியாக அன்றைய ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட கடலூர் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
கடலூர் வந்து இறங்கிய சீனர்களுக்குக் கைத்தொழிலாக இருந்தது பல் மருத்துவம், கைவினைப் பொருட்கள் செய்வது போன்ற தொழில்கள் தான்.
இன்று இங்குள்ள சீனர்கள் வெவ்வேறு தொழில்களில் ஆர்வமுடன் இருந்தாலும் இவர்களின் முக்கியத் தொழில் பல் மருத்துவம்தான். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல ஊர்களிலும் ஒரு காலத்தில் சீனப் பல் மருத்துவம் பிரபலமாக இருக்கக் காரணம் இவர்களாகத்தான் இருக்கும்.
இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே சுமார் 1933-ம் ஆண்டு பாரீஸில் பல் மருத்துவமனைகளைத் தொடங்கினர். சின் ஷைன் (chin shyn) என்ற மருத்துவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பேரன் ஹூபெர்ட் ஜெரார்டு (hubert gerard), “எங்களின் பூர்வீகம் சீனாவாக இருந்தாலும் என்னுடைய அப்பா காலத்தில் இருந்தே நாங்கள் இந்தியக் குடிமக்களாகத்தான் இருந்து வருகிறோம். என்னுடைய ஸ்கூல், காலேஜில் எல்லாம் தமிழ் இரண்டாவது மொழியாக இருந்தது. பல் மருத்துவத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தேன்” என்கிறார்.
மேலும் தற்போது இவர்கள் வீட்டில் மட்டும் சீன மொழி பேசுகிறார்கள். இரண்டு தலைமுறையாகச் சென்னையில் இருப்பதால் சரளமாகத் தமிழ் படிக்கவும், பேசவும் செய்கிறார்கள். அவர்களின் சமையல் முறை முற்றிலும் தமிழ்தான். அவர்களின் வீடுகளில் சாம்பார், ரசம் போன்ற நம்மூர் உணவுகள்தான் மணக்கின்றன.
இது குறித்து 1935-ம் ஆண்டில் இருந்து பல் மருத்துவமனையைத் தலைமுறையாக நடத்திவரும் ஒய்.சி.ம (78)பேசுகையில், “பல வருடங்களுக்கு முன்பு என் அப்பாவைப் போல் வந்த சீனர்களுக்குத் தாயகமாக இருந்தது சென்னைதான். அன்றைக்குக் குடியேறிய எங்களின் மூதாதைகள் கைத்தொழிலாகப் பல் மருத்துவம், காலனி தயாரிப்பது, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றைச் செய்தார்கள். இன்றும் பல் மருத்துவம் நல்ல தொழிலாக இருப்பதால் எங்களுக்கு அடுத்த தலைமுறையினர் அதையே தொடர்கிறார்கள்” என்கிறார்.
பல ஆண்டுகளாகச் சென்னையிலேயே வாழ்ந்து வரும் இவர்கள் விரும்பியவர்களைத்தான் திருமணம் செய்து கொள்கின்றனர். தமிழ் மணக் கலப்பும் நடந்திருக்கிறது.
ஜோஷீவா ஷே என்ற சீனரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட தமிழ்ப்பெண் மீரா, “எனக்கு என் கணவர் குடும்பத்தினர் வேற்று ஆட்களைப் போல் தெரியவில்லை. தமிழர்களாகத்தான் நினைக்கிறேன். என் கணவரின் அம்மா என்னைவிட ருசியாகத் தென்னிந்திய உணவுகளைச் சமைப்பார்” என்கிறார்.
சுமார் 81 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறிய இவர்கள் தங்களின் பூர்வீக நாடான சீனாவிற்குச் செல்ல வேண்டும் எனக் கனவில்கூட நினைப்பதில்லை. அந்தளவுக்கு இவர்கள் தங்களைச் சென்னைக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்கள்.