

உலகில் பிரச்சினைகள் சூழ்ந்துதான் கிடக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெருகப் பெருகதான் நம் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டது. வாகனம் கண்டுபிடிக்கப்பட்டபோது போக்குவரத்து எளிதானது. பிறகு விமானங்கள் வந்தன. போக்குவரத்து மிகவும் எளிதானது.
டிராக்டர், பூச்சி கொல்லி மருந்துகள் போன்ற விவசாயக் கண்டுபிடிப்புகளால் உணவு உற்பத்திப் பெருகியது. பஞ்சம் விலகியது. இவ்வளவு கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும் பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லாமல்தான் இருக்கிறது.
இந்நிலையில் இன்றைக்கு அறிவியலைக் கொண்டு தீர்க்க வேண்டிய உலகின் பெரிய பிரச்சினை எது? இந்தக் கேள்வியை இங்கிலாந்து அரசு தன் மக்களிடம் முன்வைத்துள்ளது. அவர்கள் சொல்லும் பிரச்சினையைத் தீர்க்கும் கண்டுபிடிப்பைச் செய்பவருக்கு 10 மில்லியன் பவுண்டு -அதாவது 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசு (ரூ.85 கோடி) தர இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அறிவித்துள்ளார் .
பண அடிப்படையில் இந்தப் பரிசுதான் உலகிலேயே இன்று பெரிய பரிசு. நோபல் பரிசுத் தொகைகூட 1.2 மில்லியன் டாலர்கள்தான் (ரூ.6 கோடி). இதற்கான மக்கள் வாக்கெடுப்பு கடந்த மே 22-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 25 வரை நடைபெறுகிறது.
1714 -ம் ஆண்டு இம்மாதிரியான கண்டுபிடிப்பு ஒன்றுக்கு இங்கிலாந்து அரசு பரிசு அளித்தது. அப்போது அந்தப் பரிசைத் தட்டிச் சென்றவர் ஜான் ஹாரிசன். இவர் கண்டுபிடித்து, கப்பல் மாலுமிகளுக்குக் கடலில் தாங்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள உதவும் கடிகாரம். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு இங்கிலாந்தின் அரசின் கடல் பயணங்கள் எளிதாயின. கடல் கடந்து வணிகம் வளர்த்த இங்கிலாந்து அரசு இந்தக் கண்டுபிடிப்பால் லாபம் அடைந்தது எனலாம். அதற்காக ஹாரிசனுக்குப் பரிசாக 20 ஆயிரம் பவுண்டு பரிசு வழங்கப்பட்டது.
300 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் லாங்கிடியூட் பரிசை பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த ஆண்டு அறிவித்தார் . நெஸ்டா என்னும் பிரிட்டன் நிறுவனம் இந்தப் பரிசை உருவாக்கியிருக்கிறது. ஆனால், இந்தப் பரிசு நிதியின் சிறப்பு என்னவென்றால், பிரிட்டன் மக்கள்தான் அந்தப் பரிசு நிதி எந்த அறிவியல் சவாலைத் தீர்ப்பதற்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் போகிறார்கள்.
எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பவர்களுக்கு 10 மில்லியன் பவுண்டு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் நூறு பேர் பட்டியலிடப்பட்டுத் தந்துள்ளனர்.
மனித இனம் எதிர்கொண்டுவரும் இந்த ஆறு சவால்களில் எந்தச் சவாலுக்கு 10 மில்லியன் பவுண்டு பரிசு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை இங்கிலாந்து மக்கள் விரைவில் தீர்மானிக்கவிருக்கிறார்கள். வாக்கெடுப்பின் முடிவு இந்த மாதம் 25-ம் தேதி வெளியாகிறது. அதில் தேர்வு செய்யப்படும் சவாலைத் தீர்க்கும் தங்கள் கண்டுபிடிப்பை செப்டம்பர் மாதம் முதல் சமர்ப்பிக்கலாம்.
இந்தத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது வெற்றிகரமான கண்டுபிடிப்பு அளிக்கப்படும் வரை நீடிக்கும். யார் வெல்லப் போகிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் வெற்றிபெற்றாலும் உலகிற்கு ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக் கிடைக்கப்போவது மகிழ்ச்சியான விஷயம்தானே.